நினைவுகூரப்பட்ட மறைமாவட்ட இறையடியார்கள் | Veritas Tamil
மேனாள் தெய்வத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 16 நவம்பர் 2024, சுற்றுமடல் அறிவுறுத்தலின்படி இறை இயேசுவின் யூபிலி 2025 இந்த ஆண்டு தொடங்கி வருடம்தோறும் வருகின்ற நவம்பர் மாதம் 09 ஆம் தேதியன்று அந்தந்த மறைமாவட்ட எல்லைக்கு உட்பட்டு பிறந்து, உலகளாவிய திருஅவைக்கு தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இரத்த சாட்சிகள், புனிதர்கள், அருளாளர்கள், வணக்கத்துக்கு உரியவர்கள், இறையடியாளர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டுமென்று அனைத்துலக திருஅவைக்கும் அழைப்பு விடுத்திருந்தார்கள்.
அந்தந்த மறைமாவட்ட இறையடியார்களை நினைவுகூர்வதின் வழியாக நாமும் அவர்களின் நம்பிக்கை, விசுவாச, அர்ப்பணத்தை வளர்வாழ் மாணவர்களுக்கும், இளையோருக்கும், இறைமக்களுக்கும் எடுத்துரைத்து நாமும் புனிதத்தில் வளர, வாழ ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம்.
ஏற்கனவே, தூத்துக்குடி மறைமாவட்டத்தின் அனைத்து தந்தையர்களுக்கும் மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்கள் மறைமாவட்ட INTER NOS தகவல் வழியாக வத்திக்கானிலிருந்து வந்த திருத்தந்தையின் தகவல்களை நினைவுப்படுத்தி உள்ளார்கள். மேலும், பங்குகளில் தந்தையர்கள் தங்களின் வசதிக்கேற்ப நினைவுகூர்ந்து கொண்டாட அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.

அதன்முத்தாய்பாக, தூத்துக்குடி மறைமாவட்ட
ஒருங்கிணைந்த புனிதர் ஏற்பாட்டு குழுவினரால்
08.11.2025 அன்று தூத்துக்குடி நற்செய்தி நடுவகத்தில் நடந்த மறைமாவட்ட மேய்ப்பு பணி பேரவை கூட்டத்திற்கு பல்வேறு பங்குகளிலிருந்து வந்தவர்கள் வழியாக பங்குகளில் நினைவுபடுத்தும் விதமாக இறையடியாளர்கள் படம் அன்றைய கருத்தாளர் அருள்பணி ச.தே செல்வராஜ் அவர்களால் புனிதர்பட்ட ஏற்பாட்டு குழு வழிகாட்டி தந்தையும், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவுமான பேரருட்திரு கிறிஸ்டியான் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. மறைவட்ட தந்தையர்கள் வழியாக படங்களை அனைத்து பங்கு தந்தையர்களிடம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 09.11.2025 அன்று இறையடியார் அந்தோனி சூசைநாதர் கல்லறை இருக்கும் வடக்கன்குளம் பங்கு புனித திருக்குடும்ப ஆலயத்தில் ஜெபமாலை தாசர் துறவற சபைகள் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட குருக்கள் இனைந்து சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி இறையடியாளர்கள் அந்தோனி சூசைநாதர், அகுஸ்தின் பெரைரா அவர்கள் அருளாளர் நிலை பெறவேண்டி ஜெபிக்கப்பட்டது. வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவும், மறைமாவட்ட புனிதர் ஏற்பாட்டு ஒருங்கினைப்பாளருமான பேரருட்திரு கிறிஸ்டியான் மற்றும் ஜெபமாலை தாசர் துறவற சபை புனிதர் ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பேரருட்திரு ஜான்சன் அவர்கள் இருவரும் வழிநடத்தி சிறப்பு செய்தார்கள். பல்வேறு ஊர்களிலிருந்து மதுவிலக்கு சபையினரும் மற்றும் தூத்துக்குடி பனிமய மாதா அமலோற்பவ மாதா வாலிபர் சபையினரும் கலந்துகொண்டார்கள்.