உறவுகள் உண்மையானதாகவும், இரக்கத்தால் வளமானதாகவும் இருக்க செபிப்போம் - திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

மே 28, புதனன்று வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்ல சமாரியர் உவமை குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை14-ஆம் லியோ.
லூக்கா 10: 30 - 33
இயேசு மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.
இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்கள் தனது இரண்டாவது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை இறைமக்களுக்கு எடுத்துரைத்தார். நல்ல சமாரியர் உவமை குறித்து திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
நம்முடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளவும், எதிர்நோக்கிற்கு நம் இதயங்களைத் திறக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும் நற்செய்தி உவமைகள் குறித்து தொடர்ந்து நாம் சிந்திப்போம். நமது வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளைப் பார்ப்பதில் ஒரு குறிப்பிட்ட, கடுமையான, இறுக்கமான மற்றும் அடைக்கப்பட்ட வழியில் கவனம் செலுத்துவதால் சில சமயங்களில் நாம் எதிர்நோக்கற்றவர்களாக இருக்கின்றோம். அந்நேரத்தில் நற்செய்தியில் இருக்கும் உவமைகள் அதனை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க நமக்கு உதவுகின்றன.
எனவே உவமை வழியாக இயேசு அவருக்கு விளக்கமளித்து அவரது கேள்வியை மாற்றும் பாதையை உருவாக்குகின்றார். யார் என்னை அன்பு செய்கின்றார்கள்? என்பதிலிருந்து யார் என்னை அன்பு செய்தார்கள்? என்ற கேள்விக்கு மாற்றுவதற்கான பாதை அது. முதல் கேள்வியானது முதிர்ச்சி அற்ற கேள்வி. இரண்டாவது கேள்வி வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டவரின் கேள்வி. முதல் கேள்வி வாழ்வின் மூலையில் நின்றுகொண்டு காத்திருக்கும்போது கேட்கும் கேள்வி. இரண்டாவது கேள்வி, நம்மை வாழ்வின் பாதையில் இருத்தி, முன்னோக்கிச் செல்லத் தூண்டுகின்ற கேள்வி.
இயேசு எடுத்துரைக்கும் உவமையானது, செல்லும் வழியை மையப்படுத்தியதாக பாதையில் நடைபெறும் நிகழ்வை உள்ளடக்கியதாக இருக்கின்றது. நமது வாழ்க்கைப் பாதையை போலவே அப்பாதையும் கடினமானதாக கடந்து செல்ல முடியாத பாதையாக இருக்கின்றது. இவ்வுவமையில் வரும் பாதையானது ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும் பாதையை சுட்டிக்காட்டுகின்றது. மலையின் மேல் உள்ள எருசலேம் நகரத்திலிருந்து கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள நகரமான எரிகோவுக்குச் செல்லும் ஒரு மனிதர் பயணிக்கும் பாதை இது. இப்பாதையில் பயணிப்பவருக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்பதை ஏற்கனவே முன்னறிவிக்கும் ஒரு பிம்பமாக இப்பாதை உள்ளது. அதற்கேற்றவாறு அம்மனிதரும் கள்வர்கள் கையில் அகப்படுகின்றார். தாக்கப்படுகிறார், தடியால் அடிக்கப்படுகிறார், கொள்ளையடிக்கப்படுகிறார், பாதி இறந்த நிலையில் குற்றுயிராக விடப்படுகிறார். நாம் வாழும் சூழ்நிலைகள், மக்கள், சில சமயங்களில் நாம் நம்பியவர்கள் கூட, நம்மிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வாழ்க்கைப் பாதையின் நடுவில் நம்மை தனியாக விட்டுச் செல்லும்போது ஏற்படும் அனுபவமாக இம்மனிதரின் நிலை இருக்கின்றது.
வாழ்க்கையானது சந்திப்புக்களால் நிறைந்தது. இச்சந்திப்புகளில் நாம் இருப்பது போலவே நம்மை நாம் வெளியே கொண்டு வருகிறோம். பலவீனமான எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட மக்களை நாம் நம்முன் காண்கின்றோம். பாதிக்கப்பட்ட மக்களைக் கவனிக்கும் பொறுப்பினை ஏற்கின்றோமா? அல்லது எதுவும் பார்க்காதது போல, கண்டும் காணாதது போல முன்னோக்கிச் செல்ல நினைக்கின்றோமா? என்ன செய்ய வேண்டும் என்று நாம் தாம் தீர்மானிக்க வேண்டும். குரு, லேவியர் என இருவர் அப்பாதையைக் கடந்து செல்கின்றனர். புனித நகரமான எருசலேமில் வாழ்பவர்கள், திருக்கோவிலில் பணிகள் புரிபவர்கள். அவர்கள் செய்யும் திருவழிபாட்டு முறையானது அவர்களை இரக்கத்தின் பாதையில் பரிவின் பாதையில் இயல்பாக வழிநடத்தவில்லை. இரக்கம் என்பது சமயம் சார்ந்தது என்பதற்கு முன்னதாக அது, மனித குலத்திற்கான ஒன்று. நாம் விசுவாசமுள்ளவர்களாக இருக்க அழைக்கப்படுவதற்கு முன்பாக மனிதர்களாக வாழ அழைக்கப்படுகின்றோம்.
எருசலேமில் திருவழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகளுக்காக நெடுநாள்கள் அங்கு தங்கியிருந்த குருவும் லேவியரும் தத்தமது வீடுகளுக்குத் திரும்ப விரைவாக செல்கின்றார்கள் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். இந்த அவசரமான சூழலானது நமது தற்போதைய வாழ்வை அடையாளப்படுத்துகின்றது. இந்த அவசரம் தான் நமது உள்ளத்தில் இரக்க உணர்வு ஏற்படுவதைத் தடுக்கின்றது. தங்களது வாழ்க்கைப் பயணத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிறருக்காக நிற்க, உதவ ஒருபோதும் விரும்புவதில்லை.
ஆனால் பிறருக்காகவும் நிற்க விரும்பும் ஒரு மனிதராக, சமாரியர் ஒருவர் அப்பாதையில் வருகின்றார். பிறரால் கீழானவர்கள், இழிவானவர்கள் என்று கருதப்பட்டவர்களில் ஒருவரான சமாரியர் வருகின்றார். அவர் எங்கு நோக்கிச் செல்கின்றார் என்று நற்செய்தியில் குறிப்பிடப்பவில்லை. ஆனால் அவரும் பயணத்தில் இருந்தார் என்றே குறிப்பிடப்படுகின்றது. அவரும் அவ்வழியே வருகின்றார். இங்கு அவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்பது தேவையில்லை. தனது உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் ஒரு மனிதர் முன் சாதாரண சமாரியராக அவர் நிற்கின்றார்.
சமாரியர் கொண்டிருந்த இரக்கமானது அவரது உறுதியான செயல்கள் வழியாக வெளிப்படுத்தப்படுகிறது. நல்ல சமாரியர் என்று நாம் அழைக்கும் அவரைப் பற்றியும் அவரின் செயல்களைப் பற்றியும் லூக்கா நற்செய்தியாளர் அவரை சாதாரண மனிதராகத் தொடர்ந்து விவரிக்கின்றார். காயம்பட்டவரின் அருகில் சமாரியர் நெருங்கிச் செல்கின்றார். ஏனெனில், ஒருவருக்கு நாம் உதவ வேண்டும் என்று எண்ணினால் தூரமாக இருந்து நாம் ஒன்றும் செய்ய முடியாது. மாறாக, அவர்கள் அருகில் நெருங்கிச் சென்று உதவவேண்டும். அவர்களுக்கு உதவுவதில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். நமது கரங்கள் அழுக்காக அனுமதிக்க வேண்டும். தீட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காயம்பட்டவரின் காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொள்கின்றார். அவருக்கு பொறுப்பேற்கின்றார். நாம் மற்றவரின் துயரத்தை உணரத்தயாராக இருந்தால் அவர்களுக்கு நாம் உண்மையிலேயே உதவுகின்றோம் என்று பொருள். மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, அதாவது இரண்டு நாள் கூலியை சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்கின்றார் சமாரியர். ஏனெனில் காயம்பட்டவர் ஒப்படைக்கவேண்டிய பொருள் அல்ல. மாறாக, கவனிப்பு தேவைப்படக்கூடிய மனிதர் என்று உணர்த்துகின்றார்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, நாம் நமது பயணத்தை நிறுத்தி மற்றவர்களிடத்தில் எப்போது இரக்கம் காட்ட போகின்றோம்? சாலையில் காயமடைந்து கிடந்த அந்த மனிதர் நம் ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்துகின்றார் என்பதை எப்போது நாம் உணர்வோமோ அப்போது தான் இயேசு நம்மைப் பராமரித்த, பாதுகாத்து நின்ற எல்லா நேரங்களும் நினைவுகூகளும் நம்மால் நினைவுகூரப்படும். அவை நம்மை இரக்கமுள்ளவர்களாக மாற்றும்.
நமது உறவுகள் உண்மையானதாகவும், இரக்கத்தால் வளமானதாகவும் இருக்க செபிப்போம். மனிதநேயத்தில் வளர நாம் செபிப்போம். திருஇருதய இயேசுவிடம், அவரைப் போன்ற இதய உணர்வுகளை மேலும் மேலும் பெற அருளைக் கேட்போம்.
இவ்வாறு திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது கருத்துக்களை நிறைவு செய்ததும், திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களின் சுருக்கமானது ஐரோப்பிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டது. இத்தாலிய மொழி திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிக்க கேட்டுக்கொண்டார்.
இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவை வலியுறுத்தி, திருத்தூதர்களைப் போலவே, கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பவும் சான்றளிக்கவும் அனைவரையும் ஊக்குவிப்பதாக எடுத்துரைத்தார்.
Daily Program
