பேராயர் ஜாக் மௌராட் அவர்களுக்கு 'புனித இரண்டாம் ஜான்பால் விருது'அறிவிப்பு!| Veritas Tamil

பேராயர் ஜாக் மௌராட் அவர்களுக்கு 'புனித இரண்டாம் ஜான்பால் விருது'அறிவிப்பு!
கடந்த 2015-ஆம் ஆண்டு ISIS இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, கிறித்தவ நம்பிக்கையைக் கைவிடுமாறு சித்திரவதை செய்யப்பட்ட சிரியாவின் ஹோம்ஸின் பெருநகரப் பேராயர் ஜாக் மௌராட் அவர்களுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான புனித இரண்டாம் ஜான்பால் விருது வழங்கப்படுகிறது. ஜாக் மெளராட் அவர்கள் அருள்பணியாளராக இருந்தபோது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்.
சுமார் ஐந்து மாதங்களுக்கு மேலாகச் சிறையில் இருந்த அவரை, பயங்கரவாதிகள் கடுமையான சித்திரவதைகளுக்கு
உட்படுத்தினர். அந்தச் சூழ்நிலையிலும், கிறிஸ்துவை மறுதளிக்காமல் தனது இறை நம்பிக்கையில் அவர் உறுதியாக இருந்துள்ளார். இதனை அடுத்து, அவர் சிரியாவின் ஹோம்ஸின் பேராயராக நியமிக்கப்பட்டார். அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக, வத்திக்கானில் புனித இரண்டாம் ஜான்பால் விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

மேலும், பேராயர் ஜாக் மெளராட் அவர்களின் வாழ்நாள் சேவை, நம்பிக்கையின் சாட்சியம். கிறித்தவ அன்பு, மதங்களுக்கு இடையேயான உரையாடல், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாகவும். இவ்விருது அவருக்கு வழங்கப்படுவதாக, கிறித்தவ ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கான ஆணையத்தின் தலைவரும், விருது குழுவின் தலைவருமான கர்தினால் கர்ட் கோச் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக “இந்த விருதை நான் முதன்மையாக சிரியாவில் மதங்களிடைய உரையாடல் நிகழ்த்திய பா. பாவ்லோ டால்ஓல்யோவிற்கு அர்ப்பணிக்கிறேன்,” என்று தெரிவித்தார் .
“மேலும், 1982ல் நிறுவப்பட்ட மர்மூசா துறவிய சமுதாயத்திற்கும் இதை அர்ப்பணிக்கிறேன். அந்த சமூகமே ‘புனித விருந்தோம்பல்’ என்ற மனப்பான்மையுடன், குறிப்பாக மதங்களிடைய, மனிதாபிமான மற்றும் பண்பாட்டு உரையாடலுக்கான சந்திப்புகளை நடத்தி, நம்பிக்கையின் தீயை மீண்டும் ஏற்றியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
இறுதியாக ,நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்திற்குச் சாட்சியாக விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருதானது, புனித இரண்டாம் ஜான்பால் அவர்களின் சிந்தனை. மரபு மற்றும் திரு அவையின் வாழ்க்கையில் அவரது பங்களிப்பைப் புரிந்துகொள்வதை ஊக்குவிப்பதற்காக இந்த விருது நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Daily Program
