30 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை நிறுவிய சாந்தோம் திருத்தலம் !| Veritas Tamil

சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள சாந்தோம் புனித தோமையார் தேசிய திருத்தலத்தில் 30 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட செயற்கை கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்துமஸ் மரத்தை சென்னை மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் அர்ச்சித்து திறந்து வைத்தார்கள்.

இது குறித்து பேராயர் அவர்கள் தனது செய்தியாளர் சந்திப்பின்போது " இந்த கிறிஸ்துமஸ் மரமானது ஒளியையும் நம்பிக்கையையும் ஆற்றலையும் குறிக்கும் விதமாக இருக்கின்றது" என்று குறிப்பிட்டார்கள். மேலும் "மகிழ்ச்சியும் அமைதியும் தருகின்ற ஒரு சின்னமாக இந்த மரம் இருக்கின்றது என்பதை அறிவித்திருக்கின்றோம். மாறி வருகின்ற காலகட்டத்திலே மக்களாகிய நமக்கு தேவையாக இருப்பவை மன மகிழ்ச்சியும், அமைதியும், நலவாழ்வுமாகும். நம்முடைய நாட்டிலும் உலக அளவிலும் சமாதானமும் போரில்லாத நிலைமையும் மதத்தினால் ஒடுக்கப்படுகின்ற தன்மையும் இல்லாத ஒரு சூழ்நிலையையும் சகோதர வாஞ்சையுடன் எத்தகைய பேதகமும் இன்றி எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்கிற சூழலையும் உருவாக்க இறைவனே மனிதனாக பிறந்திருக்கிறார் என்பதை இன்று நாம் உணர வேண்டும். வருகின்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் மூலமாக நமக்கு மன மகிழ்ச்சியும் அமைதியும் ஆற்றலையும் தந்துகிருஸ்துவின் சிலுவையின் வழியாக இறைவன் நம்மை மீட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அறிந்து கொள்வோம். எனவே இந்த கிறிஸ்மஸ் மரத்தை பார்ப்பவர்கள் அனைவரும் நம்பிக்கையின் மக்களாக மாறட்டும் மகிழ்ச்சியை புதுப்பிக்கட்டும் அமைதியைப் பெற்று அமைதியை நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு கொடுப்பவர்களாக நல்ல கருவியாக மாறட்டும். நமது தாய் நாட்டை சகோதரவாஞ்சையுடன் பிறர் அன்பிலே வளர்த்தெடுத்து எல்லோரும் கடவுளின் பிள்ளைகள் என்ற ஒரு அருமையான நிலையிலே நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்" என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக பேராயர் அவர்கள் தலைமையில் துவக்க வழிபாடானது நடைபெற்றது. பிறகு பாடகர் குழுவினர் 'Joy to the world ' எனும் பாடலை பாட, பேராயர் அவர்கள் கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்குகளை ஒளிர்வித்து அதனை அர்ச்சித்தார்கள். அப்போது திருத்தல அதிபர்தந்தை வின்சென்ட் சின்னதுரை அவர்களும் பிற அருள் பணியாளர்களும் உடனிருந்தனர்.