கீழடி இயற்கை வளம் | Veritas tamil

மதுரையிலிருந்து கீழடி 12 கி.மீ. தூரம் உள்ளது. கீழடியை நான் அடுத்து 1 கி.மீ தொலைவிலுள்ள கொந்தகையில் (M.ஆரோக்கியசாமி MA M.Ed M.Phil) தலைமையாசிரியராக 10 ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனது துணைவி ஞானசௌந்தரி கீழடி முன்பாக உள்ள பசியாபுரத்தில் பணியாற்றினார். இப்பகுதி செழிப்பான பகுதி. வைகை நதி இப்பொழுதுள்ள மணலூரை அடுத்து கீழடி அருகில் வரை ஓடி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் வந்த புகைவண்டி தண்டவாளமும். நதிக்கரைகளில் தோன்றிய கிராமங்களும் வைகையைப் புறந்தள்ளிவிட்டன.

கீழடியில் அம்பலகாரர், சேர்வை, பிள்ளைமார், நாடார், குயவர் மக்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர். ஆய்வுக்கான பள்ளித்திடலருகே இஸ்லாமியர் குடியிருப்புகள் உள்ளது. இதற்கு முன்பாக உள்ள பசியாபுரத்தில் தலித் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, பனையூர், அகரம். அம்பலத்தாடி, பாட்டம், மணலூர், கழுகேர்கடை ஆகியவை செழிப்பான பகுதியாகும். இங்கு நெல். வாழை, கரும்பு விவசாயம் நடைபெறுகின்றது. பயறுபச்சை, மிளகாய் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முதல் சிலைமானிலிருந்து கீழடி சென்றால் வழிநெடுகிலும் தோப்பு நிறைந்திருக்கும். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2ف சிலைமானிலிருந்து சென்றால் விவசாயம் நிறைந்திருக்கும். தற்போது பைபாஸ் சாலை, பெரிய அளவில், கீழடிக்கு அருகே வந்து விட்டது.

நான் 1963இல் தியாகராசர் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்த போதும் பிறகு பட்டப்படிப்பில் இருந்த போதும் மதுரை எழுத்தாளர் மன்றம் ஒரு நாள் சுற்றுலா முகாம் நடத்தியது. முதலில் மணலூரில் உள்ள தோப்பில் நடத்தினர். இதனை கருணைதாசன், பு.மனோகரன். புலவர் வேலவன் முன்னின்று நடத்தினர். முற்பகல் ஒளவை துரைசாமி பிள்ளை தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் தமிழண்ணல், அ.இ.பரந்தாமனார், சு.ப. அண்ணாமலை, தமிழ்நாடு இதழாசிரியர் கலையன்பன் உரையாற்றினர்.

இதே போல் மதியம் அங்கிருந்த மோட்டரில் குளித்து விருந்துண்டபின் கவியரங்கம் நடந்தது. இதில் மீரா. இன்குலாப். அப்துல்ரகுமான். ஒளவை நடராசன். கவியழகன் புலவர் வேவைன் கவிதை வாசித்தனர். பிறகு டாக்டர்.சி.இலக்குவனார் தொல்காப்பியம் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் தந்ததை விளக்கினார். கா.காளிமுத்து (பி.ஏ.மாணவர்.. பின்னாள் சபாநாயகர்) நா.காமராசன் (எம்.ஏ.மாணவர்) உட்பட நாங்கள் பத்துப்பேர் சிலைமான் பஸ்ஸில் ஏறி, இறங்கி மணலூர் தோப்பிற்கு நடந்து சென்றோம். இதே போல் கீழடி தோப்பிலும் தமிழறிஞர் கருணைதாசன் நடத்தியது மறக்க இயலாத அனுபவங்கள். இதில் பங்கு கொண்ட எனது ஆசான் டாக்டர்.ஒளவை நடராசன் அவர்கள் இன்றும் நம்முடன் இருப்பது இறைவனின் பெருங்கொடையெனலாம்.

கீழடி விவசாயம் நிறைந்த பகுதி என்றாலும் அருகில் இங்கு பல தொழிற்சாலைகளும் வந்துள்ளன. வாழ்க்கைத் தரம் மிக்க விவசாய மக்களும், உழைப்பாளர்களும் நிறைந்த கிராமம் கீழடியாகும். இக்கிராமத்தைச் சுற்றிலும் செழுமையான தோப்புகளும் பெரிய மரங்களும் நிறைந்துள்ளன. தோப்புகளில் எல்லா வசதியுடனும் மக்கள் குடியிருப்பதும் உண்டு. பஸ்வசதி மிகுந்த கீழடிக்கு நகரப் பேருந்துகள் தொடர்ந்து வந்து போகும். இப்பொழுதுள்ள அகழ்வராய்ச்சியை அடுத்து வரும் அகரம் தாண்டி கழுகேர்கடை உள்ளது. இங்கு இஸ்லாமிய மக்கள் நிறைந்துள்ளனர். இங்கு 1710இல் பிரான்சிலிருந்து வந்த இயேசு சபைக்குரு கப்பல்லி என்பாரின் ஆலயம் உள்ளது. இது கிறிஸ்தவர்களின் திருத்தலமாய் உள்ளது. கழுகுமடை என்று மக்கள் அழைக்கும் இங்கு கப்பல்லி அவர்தம் கல்லறையும் ஆலயமும் உள்ளது. மக்கள் தொடர்ந்து வந்து. இங்கு வழிபடுவது உண்டு. மதுரையை ராணி மங்கம்மாள் ஆண்ட காலத்தில் வந்தவர் இந்த வேதபோதகர் கப்பல்லி ஆவார். கீழடியைச் சுற்றிலும் உள்ள கிராமத்தில் மணலூர் முக்கிய ஊராகும்.

இங்கு அதிகமாய் பிராமண மக்கள் வாழ்ந்துள்ளதாய் கூறப்படுகின்றது. தற்போது இவர்கள் இங்கிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டதாய் கூறப்படுகிறது. இப்பகுதி முழுவதும் கோவில்கள் பெரிதாய் இருக்கும். கொந்தகை கோவில் குந்தவை காலத்தில் கட்டப்பட்டதாய் ஆய்வாளர் கூறுகின்றனார். இயற்கை வளமும் நீர்ச்செழுமையும் உள்ள இப்பகுதி முழுவதும் வைகைக் கரை நாகரிகம் நிறைந்த பகுதியாய் நகரத்தோடு புதையுண்டிருக்கும் என்று ஆய்வாளர் கருகின்றனர்.