நமது ஒன்றிப்பில் திருஅவையின் ஆற்றல் வெளிப்படும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 22ஆம் வாரம் -புதன்
2 செப்டம்பர் 2026 

1  கொரி  3: 1-9
 லூக்கா  4: 38-44

 நமது ஒன்றிப்பில் திருஅவையின் ஆற்றல் வெளிப்படும்!

முதல் வாசகம்.

1.    இந்தப் பகுதியில், திருத்தூதர்  பவுல் கொரிந்திய இறைமக்கள் மத்தியில் நிலவிய  பிரிவினை மற்றும் ஆவிக்குரிய முதிர்ச்சி இன்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கொரிந்திய திருஅவை மக்கள்  கிறிஸ்துவில் வளராமல், இன்னும் குழந்தைகளைப் போல ஆவிக்குரிய நிலையில் இருப்பதை பவுல் எடுத்துரைக்கிறார். 
2.    
3.    
o    “நான் பவுலைச் சேர்ந்தவன்”, “நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்” என்று அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர பிரித்துப் பாரப்பது கூடாது என்பதை வலியுறுத்துகிறார். 
o    
o    பவுலும் அப்பொல்லோவும் ஆண்டவருடைய பணியாளர்கள் மட்டுமே என்றும்,  ஒருவர் விதைக்கிறார், மற்றொருவர் நீரூற்றுகிறார், ஆனால் வளர்ச்சியைத் தருபவர் கடவுளை எனும் படிப்பினை வழங்குகிறார்.  எனவே, திருஅவையில் உயரவு தாழ்வற்ற சகோதரத்துவத்தை வளப்பதிலும் அனைத்திலும் ஆண்டவருக்கே மாட்சி சேர்ப்பதிலும் கருத்தூன்றி இருக்க வேண்டும் என்கிறார்.
o    
o    .
o    இறுதியில், பவுல் மற்றும் அப்பொல்லோ இருவரும் கடவுளின் பணியில் ஒன்றாகச் செயல்படும் கடவுளின் பணியாளர்கள் என்றும், இறைவமக்களோ கடவுளின்  வயலும் கட்டிடமுமாக உள்ளனர் என்றும் விளக்குகிறார்.

நற்செய்தி.

1.    நற்செய்தியில்,  இயேசு பலருடைய நோய்களையும் துன்பங்களையும் நீக்கி, அவர்களுக்கு சுகத்தையும் விடுதலையையும் அளிக்கிறார்.

o    சீமோனின் மாமியார் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இயேசு அவரைக் குணப்படுத்தினார்; உடனே அவர் எழுந்து இயேசுவுக்கும் சீடர்களுக்கும் பணிவிடை செய்தார்.
o    சூரியன் மறைந்தபோது, மக்கள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை இயேசுவிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்கள் ஒவ்வொருவரையும் குணப்படுத்தினார்.
o    பலரிடமிருந்த பிசாசுகளையும் அவர் துரத்தினார். அவை இயேசுவே கடவுளின் மகன் என்பதை அறிந்திருந்தன.

o    மறுநாள் இயேசு தனிமையான இடத்திற்குச் சென்றார். மக்கள் அவரைத் தேடி வந்து தங்களைவிட்டு செல்லாமல் இருக்கும்படி கேட்டனர். ஆனால் இயேசு, மற்ற ஊர்களிலும் இறையரசு பற்றி போதிக்க  வேண்டும் என்று கூறி தொடர்ந்து பணியை மேற்கொள்கிறார். 

சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களுக்கும் இடையிலான கருத்து ஒன்றிப்பைக் கவனித்தால், நாம் ஏற்கும் பணியை உண்மையுடன் செய்ய வேண்டும் என்பதும் அதற்கான இறுதி பலனைத் தருபவர் கடவுளே என்பதும் தெளிவாக உணர்த்தப்படுகிறது.
இன்று திருஅவையில் நமது வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது நாள்தோரும்  உருவாகும் பிரிவினையாகும். ஆம்,’ எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக’ (யோவான் 17:21) என்று இயேசு மன்றாடுவது பலரின் செவிகளுக்கு எட்டுவதல்லை. கிறிஸ்தவர்களே இயேசுவின் திருவுடலான திருஅவையின் ஒன்றிப்பை உடைத்து உடைத்து, தெருவுக்கு ஒரு சபையாக ஏற்படுத்தி மகிழ்கின்றனர். 


முதல் வாசகத்தில் பவுல் கொரிந்து சபையினரிடம், அவர்கள் இன்னும் ஆவிக்குரிய குழந்தைகளைப் போல இருப்பதாகக் கூறுகிறார். “நான் பவுலுடையவன்”, “நான் அப்பொல்லோவுடையவன்” என்று அவர்கள் பிரிந்து நின்றதைச் சுட்டிக்காட்டி அதன் விளைவை  எடுத்துரைக்கிறார்.  பிளவுக்கு யார் காரணமோ அவர்களுக்கு ஐயோ கேடு. 


இயேசுவின் போதனைகளில் ஒற்றுமை, அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. எனவே, திருஅவையில் பிளவு, போட்டி, பொறாமை, குழுவாதம் ஆகியவற்றை இயேசு ஏற்றுக்கொள்வதில்லை. “தனக்குள் பிரிந்த எந்த அரசும் பாழாகும்; தனக்குள் பிரிந்த எந்த வீடும் விழுந்துபோகும் (லூக்கா 11:17).  இந்த வார்த்தைகள் திருஅவைக்கும் பொருந்தும்.  


திருஅவை என்பது கிறிஸ்துவின் உடல். அதில் நாம் ஒருவரை ஒருவர் பிரித்து, “எங்கள் குழு”, “உங்கள் குழு” என்று செயல்பட்டால், திருஅவையின் சாட்சியப் பணி சீர்குலையும், பலவீனமாககும்.  பிளவை உருவாக்குபவர்கள் திருஅவையை மட்டும் காயப்படுத்துவதில்லை; கிறிஸ்துவின் உடலையே காயப்படுத்துகிறார்கள்.

 
1 கொரிந்தியர் 3:1–9ல் பவுல், “நான் பவுலுடையவன்”, “நான் அப்பொல்லோவுடையவன்” என்று கொரிந்து சபையில் ஏற்பட்ட குழுவாதத்தைச் சுட்டிக்காட்டுகிறார். கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆனால், நாம் ் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல; ஒரே கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர்கள்,” என்ற படிப்பினையை மறக்கலாகாது. 


பவுல் விதைத்தார்; அப்பொல்லோ நீரூற்றினார்; வளர்ச்சியைத் தந்தவர் கடவுள். ஆகவே, எந்த ஒரு மனிதரையும் மையமாக வைத்து குழுவாகப் பிரிவதைவிட, அனைவரும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டு சாட்சிகளாக, ஒளியாக வாழ வேண்டும்.

 
“திருஅவையில் பிளவை ஏற்படுத்துபவன், ‘நான் யாருடையவன்?’ என்று கேட்பதற்கு பதிலாக ‘நான் கிறிஸ்துவுக்குரியவனா?’ என்று தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்.    

 
இறைவேண்டல்.


அன்பான இயேசுவே,
உமது திருஅவையில் பிரிவுகளை உருவாக்குபவனாக அல்ல, இதயங்களை இணைக்கும் பாலமாக என்னை தேற்றுவீராக. ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியகல்வி மையம்,
+60122285452

Tamil Survey Popup Image