சிறந்த சீடத்துவம் எச்சூழலிலும் ஆண்டவரில் பற்றுறுதி கொள்ளும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 25-ம் வாரம்-சனி
26 செப்டம்பர் 2026

சபை உரையாளர் 11: 9- 12: 8
லூக்கா 9: 43b-45


முதல் வாசகம்.


சபை உரையாளர் நூலின் இப்பகுதி இளமையை மகிழ்ச்சியுடன் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதே வேளையில் கடவுளை நினைத்து, நம் செயல்களுக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும்  வலியுறுத்துகிறது. குறிப்பாக இளைஞர்கள் தங்கள் இளமைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழவும், வாழ்க்கையின் தீயனவற்றை விட்டு விலகி, நல்லனவற்றை அனுபவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில் லூக்கா,   இயேசு தமது சீடர்களிடம்  “நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார்” என்றுரைத்ததை விவரிக்கிறார்.


இயேசு செய்யும் வல்ல செயல்களை நேரில் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, அவர் சீடர்களிடம் தமது எதிர்கால பாடுகள் பற்றி எச்சரிக்கிறார். தாம் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார் என்று இயேசு வெளிப்படையாகச் சொல்கிறார். ஆனால் சீடர்கள் இயேசுவின் முன்மொழிதலைப்  புரிந்துகொள்ளவில்லை. அந்த உண்மையை அவர்கள் உடனடியாகப் புரிந்துகொள்ளாததற்கு, அது அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது என்றும் சீடர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் கேட்கவும் தயங்கினர் என்றும் லூக்கா இங்கே  தெளிவுப்படுத்துகிறார்.  


சிந்தனைக்கு.


நமது அன்றாட வாழ்க்கையில் பல நிகழ்வுகளுக்குக் காரணம் அறியாது நாம் திகைப்பதுண்டு. ஏன் இந்த இழப்பு? ஏன் இந்த கொடிய  நோய் ? எனக்கு மட்டும் ஏன் துன்பம்? எங்களுக்கு ஏன் குழந்தை வரமில்லை என்று பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தாலும், பதில் கிடைக்காமல் சோர்ந்து போகிறோம்.  இதற்குக் காரணம்,  சில விடயங்களைப் பற்றிய புரிதலை நாம் ஆன்மீக ரீதியாக அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாராகும் வரை, கடவுள் சில காரணங்களை நம்மிடமிருந்து மறைத்து வைக்கிறர் என்பதாகும். 


துன்புறும் காலத்தில்  நம்மை அண்டியிருப்போர் பலவித  காரணங்களை கூறுவர். இதனால், நாம் சந்தேகப்படவோ அல்லது நம்பிக்கையிழந்து சோர்ந்து போகவோ எளிதில் தூண்டப்படுகிறோம். ஆனால், அப்போது நாம் கடவுளின் திருவுளப்படி நடப்பது நடக்கட்டும் என்று  இறை நம்பிக்கையில் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும்.  இதனை  நற்செய்தயில் கண்ட சீடர்களின் குழப்பமான நிலைமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.


அத்தருணத்தில்  சீடர்களுக்குத் தேவையானது, தாழ்ச்சியும், இறைவேண்டலும் கடவுள் மீது கொண்ட   நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்பதும்தான்.  நமக்கும் இது பொருந்தும். புறவினத்தாரைப்போல் புலம்புவதில் அர்த்தமில்லை. இயேசு அவருக்கு நேரிடவுள்ளதைப் பற்றி பகிரும்போது,  சீடர்களுக்கு அப்போது புரியவில்லை. ஆனால் பின்னர் இயேசுவின் உயிர்த்தெழுதலின் வெளிச்சத்தில் அவர்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டார்கள். அதுபோல, இன்று நமக்கு புரியாத சில விடயங்களின் அர்த்தத்தை கடவுளே சரியான நேரத்தில் வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வாழ்க்கைப் படகைச் செலுத்துவோம். 


நேற்று கடவுள் வெளிப்படுத்தியதைப்போல, எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுமையுடன் காத்திருப்போம்; நம்பிக்கையுடன் கடவுளைப் பற்றிக்கொள்வோம். நமது புரிதலில் குறையும் பலவீனமும் இருக்கலாம், ஆனால் கடவுளின் ஞானம் முழுமையானது.


 
இறைவேண்டல்.


ஆண்டவராகிய இயேசுவே,   குழப்பத்தின் மத்தியிலும் நான் உம்மீது நம்பிக்கை வைத்து, தாழ்மையுடன் தொடர்ந்து முன்னேற எனக்கு அருள் புரிவீராக. உம்மில் நான் பற்றுறுதி கொள்கிறேன். ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6012 228 5452

Tamil Survey Popup Image