தாழ்ச்சியே சீடத்துதவத்தின் மணிமகுடம்! | ஆர்.கே.சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 26-ம் வாரம்-திங்கள்
28 செப்டம்பர் 2026
 
யோபு  1: 6-22
லூக்கா 9: 46-50 

தாழ்ச்சியே சீடத்துதவத்தின் மணிமகுடம்!

முதல் வாசகம்.

விவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் ஒன்றான ‘யோபு’ என்னும் நூலில் இருந்து இன்றைய முதல் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பாக உள்ளது.   யோபு தன் துன்பத்தால் மிகவும் வேதனைப்படுகிறார். தன் நண்பர்கள் தன்னை ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக குற்றம் சாட்டுவதாக அவர் உணர்கிறார். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட துயரத்திற்குக் காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல், தன் நிலையை கடவுளிடம் எடுத்துரைக்கிறார். ஆனாலும், கடவுளை அவர் நிந்திக்கவில்லை, 


யோபுவின் மனைவி உட்பட, நண்பர்களும் அவரின் துன்பம் அவன் செய்த பாவத்தின் விளைவு என்று வாதிடுகிறார்கள். ஆனால் யோபு தன்னை அநியாயமாக குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறி, தான் அனுபவிக்கும் துன்பத்திற்கு விளக்கம் கேட்கிறார்.


நற்செய்தி.

நற்செய்தியில், சீடர்களுக்குள் “யார் பெரியவர்?” என்ற விவாதம் எழுந்ததைப்பற்றி லூக்கா குறிப்பிட்டு எழுதியுள்ளார். சீடர்களின கேள்விக்கு எளிதாகப்  பதில் அளிக்கும் வகையில்,  இயேசு ஒரு சிறு குழந்தையைத் தம்மருகில் நிறுத்தி, தாழ்மையுடன் சிறியவர்களை ஏற்றுக்கொள்பவரே உண்மையில் பெரியவர் என்று கற்பித்தார்.


மேலும், யோவான்  இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, ஒருவர் உமது பெயரால் பேய் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப்பார்த்தோம்; ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்”என்றதும்,  இயேசு அவரது பெயரில் செயல்படும் ஒருவரைத் தடுக்க வேண்டாம் என்றும், நமக்கு எதிராக இல்லாதவர் நம்முடைய சார்பாக இருக்கிறார் என்றும் கூறினார்.


சிந்தனைக்கு.


நான்கு நற்செய்திகளிலும், பன்னிரண்டு திருத்தூதர்களும் இயேசுவைப் பின்பற்றுவதற்காக தங்களிடம் இருந்த அனைத்தையும் விட்டுச் சென்றதையும், அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாற்றமடைந்ததையும்,  நாம் அறிவோம். ஆயினும்கூட, இன்றைய நற்செய்தியில்,  ஒரு பலவீனமான மனிதப் பேராசை அல்லது உயர்ந்த நிலையை நாடும் மனப்பான்மை அவர்களிடமும் இன்னும் இருந்ததை லூக்காவின் செய்தி வெளிப்படுத்துகிறது. அவர்கள் தங்களுக்குள், “யார் மிகப் பெரியவர்?” என்று வாதிட்டுக்கொண்டார்கள்.


சிறந்த சீடத்துவத்திற்கு பங்கமாக இருப்பது பேராசையும் பதவி ஆசையும் என்றால் மிகையாகாது. சீடத்துவம் என்பது சுயத்தை வெறுத்து, சிலுவையை சுமந்து, இயேசுவப் பின்பற்றுவதாகும். ஆனால், பேராசையும் பதவி ஆசையும் சுயத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தி நம்மை வீழ்த்தும் காரணிகளாக உள்ளன. இயேசு இதை கண்டிக்கிறார். சீடத்துவத்திற்கு உகந்தவை தாழ்மை, பிறரை ஏற்றுக்கொள்ளுதல், பொறாமையின்றி ஒன்றுபட்டு செயல்படுதல் என்பதை உணர்த்துகிறார்.


இன்று நம்மிடையே, குறிப்பாக பங்குகளில் “யார் பெரியவர்?”, “யாருக்கு அதிக மதிப்பு?”, “யார் முன்னிலையில் இருக்க வேண்டும்?”, “யாருடைய பெயர் அதிகமாக பேசப்பட வேண்டும்?” — போன்ற எண்ணங்களால், பிளவுப்பட்டு இருக்கிறோம். பிளவுபடுத்தல் அலகையின் (சாத்தானின்) வேலை. இந்த சாத்தானுக்கு எதிராக இயேசு உலகம் வகுத்துள்ள ஆசைக்குரிய அளவுகோல்களை அடியோடு மாற்றுகிறார். இறையரசில்  உண்மையான மாட்சி என்பது பதவியிலோ, வெற்றியிலோ, புகழிலோ, ஆடம்பரத்திலோ  காணப்படுவதில்லை. அது நாம் வாழ்நாளில் வெளிப்படுத்தும், கடைப்பிடிக்கும் தாழச்சியிலும், எளிமையிலும், அன்பான, பணிவான பணியிலும் தான் என்பதை நினைவில் கொண்டு செய்பட அழைக்கிறார்.  கிறிஸ்தவ சீடத்துவம் என்பது பத்தோடு பதினொன்று என்பதல்ல. அது முற்றிலும்  கிறிஸ்தவ பண்புகளில் நமது தன்னித்துவ வெளிப்பாட்டை கொண்டது. 


குழந்தை அக்கால சமூகத்தில் அதிகாரமோ அந்தஸ்தோ இல்லாத ஒருவரின் அடையாளமாக இருந்தது. ஆகவே, குழந்தையை ஏற்றுக்கொள்வதன் மூலம், இயேசு கவனிக்கப்படாதவர்களையும், பலவீனமானவர்களையும், முக்கியத்துவம் கொடுக்கப்படாதவர்களையும் ஏற்றுக்கொள்ள அழைக்கிறார். 


நிறைவாக,  நற்செய்தியின் தொடர்ச்சியில், யோவான் இயேசுவிடம், “உமது பெயரால் பேய்களை ஓட்டுகிற ஒருவரைக் கண்டோம்; அவர் எங்களோடு வராததால் அவரைத் தடுத்தோம்” என்று கூறுகிறார். இங்கே மீண்டும் ஒரு மனித மனநிலை வெளிப்படுகிறதை கண்டுணர வேண்டும். நம்மில் பலர், “அவர் நம்முடைய குழுவைச் சேர்ந்தவர் அல்ல,”  என்று ஒதுக்கி வைக்கிறோம்.  
“அது எங்கள் குழு, இவர் அவர் எங்களோடு இல்லை.” என்றெல்லாம் பங்கு பணிக்குழுக்களில் வேற்றுமை உணர்வை வெளிப்படுத்துகிறோம்.  இத்தகைய எண்ணம் நம்மில் எழும்போது, நாம் அனைவரும் கிறிஸ்துவின் உடலில் உறுப்புகள் என்பதை மறந்துவிடுகிறோம். 


முதல் வாசகத்தில் சாத்தான் யோபுவைக் கடவுளுக்கு எதிராகத் திசைத்திருப்ப முயற்சித்தான். போபுவின் கடவுளை இறுதிவரை நிந்திக்கவில்லை. இறுதியில் அதே சாத்தான் யோபு கடவுளில் கொண்ட கீழப்படிதலைக் கண்டு அலறியடித்து ஓடினான். கடவுளுக்கு அடிபணிந்து வாழ்பவர்கள் என்றும் வீழ்வதில்லை என்பதை நினைவில் கொள்வோம்.


இறைவேண்டல்.


ஆண்டவரே,  ஒரு குழந்தையைப் போல தாழ்மையுடனும் எளிமையுடனும் மாற வேண்டும் என்ற உமது படிப்பினையை உணர்ந்து அதன்படி வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

ஆர்.கே.சாமி

Tamil Survey Popup Image