பொறாமை அற்ற வாழ்வே உயர்ந்த சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

22 ஜனவரி 2026
பொதுக்காலம் 2-ஆம் வாரம் – வியாழன்

1 சாமுவேல்   18: 6-9; 19: 1-7
மாற்கு  3: 7-12


பொறாமை அற்ற வாழ்வே உயர்ந்த சீடத்துவம்! 

முதல் வாசகம்.

பொறாமையின் நிமித்தம் சவுல் தாவீதைக் கொல்ல முடிவு செய்கிறார். ஆம், தாவீதின் வெற்றிக்காக  மகிழ்ச்சியடைவதற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்கும் மாறாக,  சவுல் மிகவும் பொறாமைப்பட்டு கோபப்படுகிறார். இந்தப் பொறாமை மற்றும் எதிர்வினை எண்ணம்  அவருக்கும் தாவீதுக்கும் இடையே கடுமையான மோதலை ஏறபடுத்துகிறது.  

இரண்டாம் பகுதியில் பொறாமையின் உச்சக்கட்டமாக,  சவுல் தாவீதைக் கொல்லத் திட்டமிடுகிறார். ஆனால், தாவீது மீது மதிப்பும் அன்பும் கொண்ட
சவிலின் மகன் யோனத்தானின் பரிந்துரையின் மூலம்  தாவீது தற்காலிகமாகத் தப்பிக்கப்படுகிறார்: மேலும், யோனத்தான் தலையிட்டு தனது தந்தையை உடனடி கொலை பாவத்திலிருந்தும் காப்பாற்றுகிறார்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களுடன் கடலுக்குச் செல்கிறார், அவருடைய வல்லமைமிக்க செயல்களைப் பற்றிய செய்தி பரவுவதால், கலிலேயா, யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தானுக்கு அப்பால், தீர் மற்றும் சீதோனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்கிறார்கள்.

தொடரந்து, மக்கள் கூட்டம் இயேசுவைச் சுற்றி நெருக்கிக்கொண்டிருந்ததால்   நசுக்கப்படாமல் இருக்க ஒரு சிறிய படகைத் தயார் நிலையில் வைக்கும்படி இயேசு தம் சீடர்களிடம் கூறுகிறார். பலர் அவரைத் தொட ஆவலுடன் முயற்சி செய்கிறார்கள்.

இதில் குறிப்படத்தக்கது என்னவெனில்,  அசுத்த ஆவிகளும் (பேய்கள்) அவரை அடையாளம் கண்டுகொள்கின்றன: அவை அவர் முன் விழுந்து, "“இறைமகன் நீரே” என்று கத்தின. என்று மாறகு குறிப்பிடுகிறார். ஆனால்   அவரை அறிவிக்க வேண்டாம் என்று அவர் அவற்றுக்கு மிகக் கண்டிப்பாய் இயேசு கட்டளையிடுகிறார். 


 சிந்தனைக்கு.


இயேசுவின் வார்த்தைகளும் செயல்களும் எல்லா இடங்களிலிருந்தும் கூட்டத்தை ஈர்க்கின்றன - மக்கள் பொழுதுபோக்குக்காக அல்ல, உடல் நலம் கோரி  வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர்  நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் ஆவர். உடைந்த மனிதகுலத்திற்கு குணப்படுத்துதலையும் மீட்பையும் கொண்டு வந்த  அவரது பணியை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


முதல் வாசகத்தில்,  தாவீதின் பெரும்  வெற்றியைக் காரணம் காட்டி சவுல் பொறாமைப்படுகிறார். கடவுள் தாவீதை இஸ்ரயேலின்  வெற்றிக்காகப் பயன்படுத்துகிறார் என்று மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, சவுலின் இதயம் கசப்பாக மாறுகிறது. பொறாமை தலைமைத்துவத்தையும் உறவையும் எவ்வாறு சிதைக்கும் என்பதை இது பிரதிபலிக்கிறது.


இன்றும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு எதிர்க்கப்படுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தாவீது தேவையற்ற விரோதத்தை எதிர்கொண்டது போலவே, இயேசுவும் பின்னர் நற்செய்தியில் சந்தித்தார்.


நேற்றைய  நற்செய்தியில்   பரிசேயர்களும் ஏரோதியர்களும் இயேசுவை ஒரு அச்சுறுத்தலாகக் கருதி அவரது மரணத்திற்குத் திட்டமிடத் தொடங்கினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, இயேசு நம் சீடர்களுடன் வேறு ஊருக்குச் செல்கிறார்.    அவரது பாடுகளின் நேரம் இன்னும் வரவில்லை என்பதால், அவர் விலகிச் செல்கிறார்.  இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருந்தது – அதில் இன்னும் முக்கியமாக இறையரசைக் கட்டியெழுப்பும்  பணிக்காகப் பன்னிருவரையும் தயார்படுத்துவது அடங்கும். 


இயேசுவின் பணியில்  அவரிடம் திரண்ட அதிகமான மற்றும் பலதரப்பட்ட மக்களை நாம் கருத்தில் கொள்ளும்போது, அவர்களில் நம்மைப் பார்ப்பது முக்கியம். இயேசு இருக்கும் இடத்தில் அவர்களும் இருக்க விரும்பினர். அதுவே நமது விருப்பமாக இருக்க வேண்டும். மாறாக. சவுல் அரசரைப் போல் பொறாமை உள்ளத்தோடு சமூகத்திலிருந்தும் பணியிலிருந்தும் தனிமைப் படுத்திக்கொள்ளக் கூடாது.  இயன்றவரை சவுலின் மகன் யோனத்தானைப் போல பிறருக்காகப் பரிந்து பேசும் குணம் படைத்தோராய் வாழ்வது சீடத்துவத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 

பொறாமை  என்பது ஒரு கொடிய பாவி; அது ஒருவனை அழித்து, நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும். 


இறைவேண்டல்.


ஆண்டவரே, என் வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், இன்பத் துன்பங்கள்  இருந்தாலும், உமது அருளை நம்பவும், நீர்  என்னில் வாழ்கிறீர்  என்ற நம்பிக்கையில்  இருக்கவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
 +6 0122285452