பரிவிரக்கம் அற்றது கிறிஸ்தவம் அல்ல! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
21 ஜனவரி 2026
பொதுக்காலம் 2-ஆம் வாரம் – புதன்
1 சாமுவேல் 17: 32-33, 37, 40-50
மாற்கு 3: 1-6
பரிவிரக்கம் அற்றது கிறிஸ்தவம் அல்ல!
முதல் வாசகம்.
இஸ்ரயேலை அச்சுறுத்தி வந்த பெலிஸ்திய வீரனான கோலியாத்தை எதிர்கொள்ள தாவீது முன்வருகிறார். போரில் இளமையாகவும் அனுபவமற்றவராகவும் இருந்தபோதிலும், தாவீது சவுலிடம் தான் கோலியாத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறுகிறார். சவுல் தாவீதின் வலிமையில் நம்பிக்கை கொள்ளவில்லை. கோலியாத் ஓர் அனுபவமிக்க போராளி என்றும், தாவீது ஒரு இளைஞன் என்றும் விவரித்துத் தடுத்து நிறுத்த விழைகிறார்.
தாவீதோ தன் பலத்தை அல்ல, மாறாக படைகளின் ஆண்டவர் கடவுளின் உதவியில் நம்பிக்கை வைத்துப் புறப்படுகிறார். தனது தந்தையின் ஆடுகளை மேய்க்கும் போது சிங்கங்கள் மற்றும் கரடிகள் போன்ற ஆபத்துகளிலிருந்து கடவுள் ஏற்கனவே தன்னைப் பாதுகாத்துள்ளார், அவ்வாறே, கோலியாத்திடமிருந்தும் தன்னை விடுவிப்பார் என்பதை சவுலுக்கு எடுத்துரைக்கிறார்.
தாவீது ஐந்து வழுவழுப்பான கற்களைத் தேர்ந்தெடுத்து, தனது கவணைப் பயன்படுத்தி, கோலியாத்தை எதிர்கொள்கிறார். நெற்றியில் குறி வைத்து, ஒரு கல்லால் அடித்து அந்த ராட்சதனை தரையில் வீழத்தினார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு ஒரு தொழுகைக்கூடத்தில் நுழைக்கிறார். அங்கே, கை சூம்பிய ஒரு மனிதனைச் சந்திக்கிறார். மறைநூல் அறிஞர்கள். பரிசேயர்கள் அவர் ஓய்வுநாளில் குணமாக்குவாரா என்று கூர்ந்து கவனித்து, அவர் மீது குற்றம் சாட்ட காத்திருந்தனர்.
இயேசு அந்த மனிதனை முன்னால் அழைத்து, பின்னர் பரிசேயர்களிடம் திருச்சட்டம் சார்ந்த கேள்வியைக் கேட்கிறார்: “ஓய்வு நாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்றார். வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்ளாதிருக்க, அவர்களோ பேசாதிருந்தார்கள்.
அவர்களின் தந்திரம் அறிந்த இயேசு, சற்று கோபத்துடன் அந்த மனிதனிடம் தன் கையை நீட்டச் சொல்கிறார் – சூம்பிய கை அற்புதமாகக் குணமாகிறது. உடனே, பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர் என்று மாற்கு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இரக்கச் செயல்களுக்கும் உயிரைக் காப்பாற்றும் பணிகளுக்குமே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மனிதநேயம் திருச்சட்டத்திற்கு மேலானது. இயேசு இந்த ஆன்மீக உண்மையை எடுத்துரைக்கிறார். ஓய்வுநாளில் கூட - இரக்கம் மற்றும் அறப்பணிகள் புறக்கணிக்கப்படக்கூடாது. அன்பு அனைத்தையும் ஆள வேண்டும் என்பது இயேசுவின் அடிப்படை போதனையாக உள்ளது.
பரிசேயர்களின் மௌனமும் சதித்திட்டமும் கடவுளின் பரிவிரக்கத்திற்கு முரனானது. இயேசுவின் குணப்படுத்துதல் வெறும் உடல் ரீதியான செயல் அல்ல; அது விடுதலையின் அடையாளம் – இயேசு வழங்கும் விடுதலையானது, மனிதனின் உடலுக்கு மட்டுமல்ல, மனித வாழ்வுக்குமானது.
இந்த நற்செய்தி வாசகத்தில், பரிசேயர்கள் மூன்று வகை பாவங்களால் ஆட்கொள்ளப்படுகிறார்கள்.
1. இயேசுவின் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கு அவர்கள் காட்டும் விரோதமான எதிர்வினையில் அவர்களின் கோபம் தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் அவர்கள் அவரை தங்கள் செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறார்கள்.
2. மக்கள் மத்தியில் இயேசுவின் மீது தங்கள் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அவர்களின் பொறாமை வெளிப்படுகிறது.
3. அவர்கள் தங்கள் இதயங்களைக் கடினப்படுத்தி, இயேசு வெளிப்படுத்தய கடவுளின் இரக்கத்திலிருந்து மற்றும் அன்பிலிருந்தும் அவர்களை குருடாக்கிக்கொள்கிறார்கள்.
நிறைவாக, நாம் நமது அன்றாட வாழ்வில் இந்த பரிசேயர்களைவிட எவ்வகையில் சிறந்து விளங்குகிறோம் என்று ஆராய்ந்து பார்ப்பது இன்றியமையாதது. தேவையற்ற கோபம், பொறாமை இவை ஆக்கத்திற்கு அல்ல அழிவுக்கே வழிவகுக்கும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உமது பரிவிரக்கத்தால் நீர் என்னைத தொடுகிறீர், குணமளிக்கிறீர். அன்றாட வாழ்க்கையில் நான் எப்போதும் அன்பு மற்றும் பரிவிரக்கத்தைத் தேர்ந்தெடுக்கும்படி என் இதயம் உமது இரக்கத்திற்குத் திறந்திருக்க உதவுவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452