நாம் உயிருள்ள கடவுளின் திருஅவை! | ஆர்கே. சாமி | Veritas Tamil

17 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 24ஆம் வாரம் –புதன்
 
1 திமொத்தேயு  3: 14-16
லூக்கா 7: 31-35

 
 நாம் உயிருள்ள கடவுளின் திருஅவை!
 

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகப் பகுதியில்,  பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகையில், தான் விரைவில் வருவேன் என்று நம்புவதாகக் கூறுகிறார், ஆனால் அவர் தாமதமானால், கடவுளின் திருஅவையில்  மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தீமோத்தேயு அறிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் இம்மடலில் கிறிஸ்தவர்களை  ‘வாழும் கடவுளின் திருஅவை’ என்று விவரிக்கிறார்.

தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிய மறையுண்மையைத் தெளிவுப்படுத்துகிறார். இங்கே "மறையுண்மை" என்பது முன்பு வெளிப்படாத, ஆனால் இப்போது வெளிப்படுத்தப்பட்ட ஒன்றைக் குறிக்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கை கடவுளின் மீட்புப்பணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்துகிறது என்கிறார்.

பவுல் அடிகள் கிறிஸ்தவத்தின்  மிக உயர்வான மறையுண்மையை இங்கே தெளிவுப்படுத்திகன்றார். அவை:
1.    “மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்” – இயேசு மனுவுருவானதை இங்கே எடுத்துரைக்கிறார். இது கடவுளின் மீட்புத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
2.     தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்’ -தூய ஆவியாரால் அவர் கடவுளின் அன்பார்ந்த மகன் என்பது உணரப்பட்டது. இயேசு கிறிஸ்து நேர்மையாளர் எனத் தூய ஆவியாரேலேயே மெய்ப்பிக்கப்பட்டார் எனில், அவர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேறு சான்றுகள் தேவையில்லை.
3.    வானதூதருக்குத் தோன்றினார்’ எனும்போது, அவரது தெய்விகத்தன்மையை விவரிக்கிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு தான் எதிர்கொள்ளும் எதிர்ப்பை, விஷயங்கள் எப்படி இருக்கின்றன என்று எப்போதும் புகார் செய்யும் குழந்தைகளுடன் ஒப்பிடுகிறார். குழந்தைகள் புல்லாங்குழலில் மகிழ்ச்சியான இசை வாசிக்கப்படும்போது மகிழ்ச்சியடையவும் நடனமாடவும் மறுக்கிறார்கள். அதே குழந்தைகள் ஒரு சோகமான இறுதிச் சடங்கைக் கேட்கும்போது துக்கப்படுவதையும் எதிர்க்கிறார்கள். மக்கள் இதைப் போலவே இருக்கிறார்கள்.  இந்த பின்னணியில்,  இயேசு பரிசேயர்களின் செயல்பாடு சிறுபிள்ளைத் தனமானது என்று சாடுகின்றார். அதற்குக் காரணம், திருமுழுக்கு யோவான் இறைவாக்கினர் எலியாவின் உளப்பாங்கைக் கொண்டவராய், ஆண்டவர்க்காக மக்களைத் தயார் செய்து வந்தார். அதுமட்டுமல்லாமல், அவர் மிக எளிய உணவை உண்டு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்படி இருந்தபோதும் மக்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல், அவரைப் 'பேய் பிடித்தவன்' என்று விமர்சனம் செய்தார்கள்.

சிந்தனைக்கு.
 
உண்மையில், நற்செய்தியில் உள்ளபடி, பரிசேயர்கள் எதிலும் மனநிறைவு அடையாதவர்கள்,  எதையும் திறந்த மனதோடு ஏற்கும் பக்குவமில்லாதவர்கள். அவ்வாறுதான், நம்மில் பலரும் இயேசுவின் சீடர்களாக வாழ்ந்தாலும்,  எல்லாவற்றிலும், எல்லாரிடமும் நாம் குறைகண்டு பிடித்துக்கொண்டிருக்கிறோம்.   ‘குற்றம் பார்க்கின் சுற்றமில்லை’ என்பதுபோல, பிறரில் குற்றம் பார்ப்பதே தொழிலாகக் கொண்டால் நாம் தனித்துவிடப்படுவோம். என்றும், தனி மரம் தோப்பாகாது. 

கடவுள் உறவில் உறைந்திருப்பதும் சமூகத்தில் இணைந்திருப்பதும் நமது சீடத்துவத்திற்கு இன்றியமையாதவை. இந்த இரு உறவுமின்றி வாழ்வது கிறிஸ்தவத்திற்குப் பொருந்தாது.  குறை இல்லாத மனிதனும் இல்லை ,குறை இல்லாதவன் மனிதனும் இல்லை!

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும் – (குறள் 186)
ஆம், மற்றொருவரின் தவறுகளைப் புறங்கூறிப் பேசுபவன், அவனது சொந்த குறைகளைக்  கண்டறிந்து பிறரால் பழிக்கப்படுவான் என்கிறார் திருவள்ளுவர். இன்றைய நமது நற்செய்தியில், சரியான நேரத்தில் சரியான மனித பதிலைப் பெறத் தவறியவர்களை இயேசு சவால் செய்தார்.  

நமக்குக் கொடுக்கப்பட்ட பணி, நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கடவுள் நம்மிடம் பேசுவதைக் கவனத்தில் கொள்வதாகும். சில சமயங்களில், பிறரிடத்தில் உள்ள குறைகளைக் காண முயற்சிப்பதைவிட நம் குற்றங்குறைகளை நேர்மையாகப் பார்த்து "அழ வேண்டும்", அவற்றை தவிர்க்க வழிவகை காண முயற்சிக்க வேண்டும்.

மற்றவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்கும்போது, அந்த மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள நம்மால் முடிகிறதா? எந்த விதமான பொறாமையோ அல்லது வெறுப்போ இல்லாமல் பிறரோடு நம்மால் பழக, குறவுகொள்ள முடிகிறதா? ஆண்டவர் நம்மை சிந்திக்க அழைக்கிறார். ஏனெனில், நாம் உயிருள்ள கடவுளின் திருஅவை.
  
இறைவேண்டல்.

ஆண்டவரே, உமது அருளின் தூண்டுதல்களை எப்போதும் கவனத்துடன் கேட்கவும், நான் அழைக்கப்பட்ட விதத்தில் எப்போதும் உமக்கு பணிந்திருக்கவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.
 


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452