அகல உழுவதைவிட ஆழ உழு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

4 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 22ஆம் வாரம் – வியாழன்
 
கொலோசையர் 1: 9-14
லூக்கா  5: 1-11

 
அகல உழுவதைவிட ஆழ உழு!
முதல் வாசகம்.

கடவுள் அவரது மீட்பின் செய்தி உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று விரும்புகிறார்.   எபேசு நகரில் பவுல் தங்கியிருந்த போது எப்பப்பிரா மூலமாகக் கொலோசையில் நற்செய்தி அறிவித்தார் (1:7-8) என்பதுகுறிபிடத்தக்கது. 

கொலோசையருக்கு இன்னும் வருகை தராத போதிலும், புனித பவுல் அவர்கள் மீது சிறப்பு அக்கறை கொண்டுள்ளார். அவர் உருவாக்கிய சமூகங்களில் அவர் செய்ததைப் போலவே, கொலோசையரின் நம்பிக்கை வாழ்விலும் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆண்டவராகிய இயேசுவுடனான அவர்களின் நம்பிக்கை உறவில் அவர்கள் வளர்ந்து வளர அவர் தொடர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார். 
கடவுள் அவர்களுக்கு மீடபைக் கொடையாக அளித்துள்ளார் என்பதையும், கடவுளின் மீட்பின் கொடையால் உண்டான உறவை அவர்கள் ஆழப்படுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று நினைவூட்டுகிறார். அவர்களின் நற்பணிகள் அவர்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்துவதாக விவரித்து எழுதுகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், கடவுளின் மீட்பானது மனுக்குலத்திற்கு  எவ்வளவு பெரிய கொடை என்பதைப் பற்றிய புரிதலை இன்னும் அதிகமான மக்கள் அடைய வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.   பேதுருவின் படகிலிருந்து  இயேசு போதிக்கிறார். பின்னர், இயேசு சீமோனிடம் (பேதுருவிடம்)  தனது வலைகளை இறக்கி, மீன் பிடிக்கச்  சொல்கிறார். சீமோன் இரவு முழுவதும்   மீன்பிடித்துக் கொண்டிருந்தார், எதுவும் கிடைக்கவில்லை.   பிறகு, இயேசு, சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். பேதுருவுக்கு நம்பிக்கை இல்லை, இருப்பினும் கீழப்படிந்து ‘ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்று வலையை வீசினார். சீமோன் தனது சக மீனவர்களிடமிருந்து உதவி தேவைப்படும் அளவுக்கு அதிகமான மீன்களைப் பிடிக்கிறார்.  

நிறைவாக,   சீமோன் தன்னை உணர்ந்தவராக,  இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். சீமோனையும் அவரது மீன்பிடி நண்பர்களையும் இணைத்து, மக்கள் மீது மீட்பின் வலைகளை வீசி அவர்களை விண்ணக அரசுக்குள் இழுக்க சீடத்துவ வாழ்வில் உறுதிப்படுத்துகிறார். 

சிந்தனைக்கு.

மீட்பு என்பது கடவுளின் கொடை என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.   சைமன் பேதுருவைப் போலவே நாமும் பாவிகள் என்பதை மனதார ஏற்க வேண்டும்.  நற்செய்தியில், ஆண்டவராகிய இயேசு நமக்கு மீட்பு வழங்குவது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் அவரது மீட்பின் செய்தியைப் பரப்ப உதவுமாறும் நம்மிடம் கேட்கிறார். ஆம், நற்செய்தி அறிவித்தல் என்பது மீட்பின் செய்தியைப் பகிர்வதாகும். மீட்பின் செய்திக்கு உரியவர் இயேசு. எனவே, இயேசுவே, மீட்பின் செய்தியாக உள்ளார். ஆகவே, இயேசுவைப் பற்றி நாம் யாரிடமாவது பேசும்போது, நாம் மீட்பின் செய்தியைப் பரப்புகிறோம்  என்று பொருள். இதனிமித்தம், நாம் கடவுளின் மீட்புப்பணியின் உடன் உழைப்பாளிகள் அல்லது பங்காளிகள் ஆகிறோம். 

சில சமயங்களில் நாம் உலக மீட்புக்கான நமது பணியை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அலட்சியப்போக்கும், ‘நமக்கு என்ன கிடைக்கப்போகிறது’ என்ற தன்னலமும் நம்மை பின்வாங்கச் செய்கிறது.  சீமோனாகிய பேதுரு  உடனடியாக தனது பாவத்தை உணர்ந்தார். சீமோனின் பாவம் என்னவென்று நமக்குத் தெரியாவிட்டாலும், நம் ஆண்டவருடனான இந்த சந்திப்பு, அவர் என்ன குற்றவாளி என்பதை உடனடியாக நினைவுபடுத்த அவரை வழிநடத்தியது என்பது தெளிவாகிறது. அவர் தன்னிலை உணர்ந்தார். ‘உன்னை  அறிந்தால் நீ உன்னை அறிந்தால்…. போராடலாம்’ என்பதை பேதுரு செயலில் வெளிப்படுத்தினார்.

ஒன்றை நாம் நினைவிலு கொள்ள வேண்டும். அகல உழுவதைவிட ஆழ உழுசீடத்துவம் என்பது வெறுமனே திருப்பீடத்தின் முன் மண்டியிட்டுக் கிடப்பதல்ல. அது பணி வாழ்வு. பேதுரு இயேசுவின் வார்த்தையில் முதலில் தயங்கினார், வலையில் அதிகப்படியான மீன்களைக் கண்டவுடன், நம்பினார், செயலில் இறங்கினார். இயேசுவின் முன்னிலையில் இருப்பதற்குத் தான் தகுதியற்றவன் என்பதை சீமோன் அறிந்திருப்பது மட்டுமல்லாமல், தமது மனந்திரும்புதலின் மூலம் இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறார்.

நாம் பல சந்தர்ப்பச் சூழலால் சோர்ந்துபோயிருக்ககூடும். ஆண்டவர் இரக்கம் நம்மை விட்டு அகன்றுப்போவதில்லை. நமக்கான பணியை உணர்ந்தால் அவர் கைத்தூக்கிவிடுவார். ஆனால், நாம் இன்றளவும் அஞ்சி அஞ்சி சாகிறோம். இயேசுவின் ஒவ்வொரு செயலும்  இறையாட்சி  நெருங்கிவிட்டதன் அடையாளமாக இருந்தன. அவ்வாறே, இன்றைய உலகில் நமது செயலும்,  இறையாட்சி நெருங்கிவிட்டதால், நமது வலைகளை ஆழ போடவேண்டும். 

இயேசு பேதுருவில் ஒரு புரட்சி செய்தார். அதே புரட்சியின் தொடர்ச்சியே திருஅவை. நாமும் அவரது புரட்சிக்கு செயல்வடிவம் தரும் சீடரகள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோம். 

இறைவேண்டல்.

என் ஆறுதல் அளிக்கும் ஆண்டவரே, நீர் உமது வல்லமையை சீமோன் பேதுருவின் சாதாரண அன்றாட நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்தினீர்.  அன்பான ஆண்டவரே, எனது பணியில் எனது வலைகைள மேலும் ஆழத்தில் போட எனக்கு உதவுவீராக. ஆமென்.
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452