நேர்மையான மன்றாட்டு நிறைவில் முடியும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

9 அக்டோபர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 27ஆம் வாரம் – வியாழன்
 
மலாக்கி 3: 13- 4: 2a
லூக்கா   11: 5-13

நேர்மையான மன்றாட்டு நிறைவில் முடியும்!


முதல் வாசகம்.


"தீயவர்கள் செழிப்புற்று இருந்தால் அவர்கள்  கடவுளுக்கு ஏன் சேவை செய்ய வேண்டும்?" என்ற மனிதனின் நிரந்தர ஆட்சேபனையை இந்த வாசகம் எழுப்புகிறது. துன்மார்க்கர்கள் அல்லது தீயவர்கள் செழிப்புடன் வாழ்வதால், கடவுளுக்குக்  கீழ்ப்படிதல் பயனற்றது என்று மக்கள் கடவுளுக்கு சவால் விடுகிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள அநீதியை கடவுள் உண்மையிலேயே பார்க்கிறாரா அல்லது கவலைப்படுகிறாரா என்று வியக்கும் பல நல்ல மக்களின் அனுபவத்தை இவ்வாசகம் விவரிக்கிறது.

மக்களின் இந்த விரக்கித்கு இறைவாக்கினர் மலாக்கி மூலமாகக் கடவுள்  பதில் அளிக்கிறார். இறைவாக்கினர் மலாக்கி,  துன்மார்க்கர்கள்  யாராக இருந்தாலும் இறுதியில் தங்கள் செயல்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறார். "ஆண்டவருக்குப் பயந்து" கடவுளின் சித்தத்தைச் செய்பவர்களுக்கு கடவுள்   இன்னும் அதிக இரக்கமுள்ளவராக இருப்பார்.  

கடவுள் தமக்குப் பயந்து, தம்முடைய திருப்பெயரை மாட்சிப்படுத்துபவர்களுக்குச் செவிசாய்க்கிறார் என்பதை மலாக்கி உறுதிப்படுத்துகிறார்.  துன்மார்க்கர் வெற்றி பெறுவதாக வெளிப்புறமாகத் தோன்றினாலும், கடவுள் உண்மையுள்ளவர்களைக் கவனிக்கிறார். 

நிறைவாக, " நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்’ என்பது ஓர் உருவகமாகத் தரப்பட்டுள்ளது.  அவரது திருப்பெயருக்கு அஞ்சி நடக்கின்ற நல்லோர் மீது நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும்’ என்பது இறுதி தீர்ப்பின் போது நல்லவர்கள் பெறும் தீர்ப்பு நியாயமானாதகவும் அமைத்திக்குரியதாகவும் இருக்குமென மலாக்கி முன்ன்றிவிக்கிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு இறைவேண்டலைப் பற்றித் தொடர்ந்து பேசுகிறார். அவர் நேற்றைய தினம் இறைவேண்டல் எப்படி செய்ய வேண்டும் என்று தம் சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.  இன்று. இறைவேண்டலில் கடைப்பிடிக்க வேண்டிய விடாமுயற்சிக்  குறித்துக் கற்பிக்கிறார். இந்த படிப்பினையைத் தெளிவுப்படுத்த இயேசு உவமை ஒன்றை கூறுகிறார.  அதன்படி, ஒரு மனிதன் நள்ளிரவில் ஒரு நண்பனிடம் சென்று, “நண்பா, எனக்கு மூன்று ரொட்டிகள் கடனாகக் கொடு; ஏனென்றால், என்னுடைய ஒரு நண்பன் பயணத்திலிருந்து என் வீட்டிற்கு வந்திருக்கிறான், அவனுக்குக் கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை” என்று கேட்கிறான். ஆனால் அந்த மனிதனின் விடாமுயற்சியால்  அந்த நண்பன் எழுந்து அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று இயேசு கூறுகிறார்.

பின்னர் இயேசு   “கேளுங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அது உங்களுக்குக் கிடைக்கும்; தட்டுங்கள், கதவு உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெறுகிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்” என்ற உறுதிமொழியோடு முடிக்கிறார்.

சிந்தனைக்கு.

முதல் வாசககத்தில் "கடவுளுக்குச் செவிசாய்த்து, நல்லவர்களாக வாழ்வது  அர்த்தமற்றது" என்று மக்கள் கருத்துரைத்ததைப் பற்றி விவரித்தது.  அவர்கள் தீயவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள். நீதி, நேர்மையை, இரக்கத்தை, பிறர் அன்பைத் துச்சமென எண்ணி வாழ்ந்தவர்கள்.  ஆனால், நற்செய்தியிலோ, ஆண்டவர் நல்லவர்களுக்கான நல்வாழ்வைப் பற்றி பேசுகிறார்.  அவர்,  நீதிமான்களுக்கும் துன்மார்க்கருக்கும் இடையிலான வேறுபாட்டை விரிக்கிறார்.  மனம் தளரா, இடைவிடாத இறைவேண்டலுக்கும், அவரது தாராள இரக்கத்தில் நம்பிக்கை வைப்பதற்கும் நம்மை அழைக்கிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதி வசனம்  கடவுள் உண்மையிலேயே அன்பான தந்தை, கடவுளின் திருவுளப்படி வாழ முற்படும் மற்றும் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெற விரும்பும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்ததை தந்தையாம் கடவுள் வழங்குவார் என்ற உறுதியை இயேசு வழங்குகிறார். ஆம், மீனைக் கேட்டால் நமக்கு  மீனுக்குப் பதிலாகப் பாம்பையோ,  முட்டையைக் கேட்டால் அதற்குப் பதிலாக  தேளையோ கொடுக்கும் கொடூர உள்ளம் கொண்டவர் அல்ல கடவுள். ‘கடவுள் அன்பாய் இருக்கிறார். அன்பில் நிலைத்திருகிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்’ ( 1யோவான் 4:16) என்று நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடவுள் அன்பாக இருக்கிறார். எனவே அவரிடமிருந்து தீயது எதுவும் வெளிப்பட வாய்ப்பில்லை. 

நாம் கேட்கும் எதுவும் நியாயமானதாக இருந்தால் ஏற்ற நேரத்தில் அவை கொடுக்கப்படும். "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்ற இறைவேண்டலில் காணப்ப்டும் ஏழு விண்ணப்பங்களில் ஒன்று, "உம்முடைய அரசு வருவதாக, உம்முடைய திருவுளம் விண்ணகத்தில் நிறைவேறுவதுப்போல மண்ணகத்திலும் நிறைவேறுவதாக ‘ என்பதாகும். ஆகவே, நமது விண்ணப்பங்கள் நிறைவேறுவதை கடவுளின் கையில் விட்டுவிட வேண்டும். நமது மன்றாட்டுக்கள் நிறைவேறவில்லையே, மற்றவர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடும் வசதியோடும் வாழும்போது நான் ஏன் துன்புறுகிறேன்’ என்று புலம்பவதால் மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடாது.

நமது இடைவிடா இறைவேண்டல் மூலம் நாம் கடவுளுடன் உறவில் இருக்கிறோம்  என்ற நமது விருப்பத்தையும் உணர்வையும வெளிப்படுத்துகிறோம். நமது விண்ணப்பங்களைத் தொடர்ந்து எழுப்பும்போது, கடவுள் நேர்மையான, அத்தியாவசமான தேவைக்கு உதவிகரம் நீட்டுவார். “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள் (யோவான் 14:1) என்பது ஆண்டவரின் நிறைவான வாக்குறுதி. 

 
இறைவேண்டல்.


அன்பான ஆண்டவரே, உம்மிலும் உமது நன்மையிலும் நம்பிக்கையுடன் வளர எனக்கு உதவுவீராக. ஆமென். 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452