பேருக்கும் புகழுக்குமாக இயேசுவில் ஏற்கும் சீடத்தவம் ஒரு பித்தலாட்டம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

1 அக்டோபர் 2025
பொதுக்காலம் 26ஆம் வாரம் – புதன்
நெகேமியா 2: 1-8
லூக்கா 9: 57-62
பேருக்கும் புகழுக்குமாக இயேசுவில் ஏற்கும் சீடத்தவம் ஒரு பித்தலாட்டம்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம் நெகேமியா நூலில் இருந்து எடுக்கப்பட்டது. நெகேமியா என்பவர் ஒரு யூதர். பாபிலோனில் சிறைபடுத்தப்பட்ட யூதர்களுக்கு பாரசீக மன்னன் சைரஸ் விடுதலை அளித்து சொந்த நாடான யூதேயாவுக்குத் திரும்ப அனுப்பினான். அவர்களில் ஒருவர் நெகேமியா. இவர் பாரசீகத்திலேயே தங்கி, சூசாவில் மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்குப் பானம் பரிமாறும் பணியாளராக இருந்தார். இது அக்காலத்தில் அரச அரண்மையில் ஒரு முக்கிய பணியாகக் கருதப்பட்டது.
அப்போது, சொந்த நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்களின் இழிநிலையையும் அழிக்கப்பட்ட எருசலேம் ஆலயத்தைக் கண்டும் எரேமியா மிகவும் வருத்தமுற்றார். எனவே, எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கடவுளின் திட்டத்திற்காக எருசலேமுக்குச் செல்ல மன்னர் அர்த்தக்சஸ்தா இடம் அனுமதி கேட்டார். அதற்காக இறைவனிடமும் மன்றாடினார்.
நகரத்தையும் ஆலயத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதற்காக எருசலேமுக்குத் திரும்ப தம் பதவியையும் உயிரையும் பணயம் வைத்தார். கடவுளின் அருட்கரம் அவரோடு இருந்ததால், மன்னரும் அவர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.
நற்செய்தி.
நற்செய்தியில், ஒருவன், "நீர் எங்கு சென்றாலும் நான் உம்மைப் பின்பற்றுவேன்" என்றான். இயேசு, “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார். இதன் பொருள் கைமாறு எதையும் எதர்ப்பார்த்து வருவதில் பலன் இல்லை என்பதாகும்.
ஒரு சில தனிநபர்கள் இயேசுவைப் பின்பற்ற விரும்புவதாக அறிவிக்கிறார்கள், ஆனால் முதலில் குடும்ப விடயங்களைக் கவனித்துக் கொள்ளவும், தங்கள் அன்புக்குரியவர்களிடம் "விடைபெறவும்" நேரம் கேட்கிறார்கள். அவர்கள் தம்முடைய சீடர்களாக வேண்டுமென்றால், அவர்களின் முந்தைய வாழ்க்கையை உடனடியாக விட்டுவிட வேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார். .
சிந்தனைக்கு.
இரு வாசகங்களும் , குறிப்பாக நற்செய்தி, மிகவும் கடுமையான செய்தியைத் தருவதாகத் தெரிகிறது. இயேசுவின் சீடராக இருப்பதற்கு ஒருவர் செய்ய வேண்டிய முழுமையான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே அவற்றின் நோக்கம். ஒருவர் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்ற வேண்டுமென்றால், அனைத்தையும் பணயம் வைத்து அனைத்தையும் கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். இந்த நிபந்தனைகளை ஏற்க முடியாமல் இயேசுவின் சீடராக இருப்பதைக் கைவிடுகிறார்கள்.
12 பேர்கள் மட்டும் இயேசு அழைத்தவுடன் அனைத்தையும் விட்டு அவரைப் பின் தொடர்ந்தனர். சிலர் எதையும் துறக்காமல் சீடராக இருக்க விரும்புகின்றனர். இதில் நாம் எந்த பிரிவைச் சேர்ந்தவர்கள்? "கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை’ என்பது கூடாது. நம் குடும்பத்தைப் பற்றியோ அல்லது நம் வேலைக்கான கடமைகளைப் பற்றியோ நாம் மறந்துவிட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை என்று நான் நம்புகிறேன்.
ஆனால் கடவுளின் நற்செய்தியை எடுத்துரைப்பது நம் மனதில் முக்கிய சிந்தனையாக இருக்க வேண்டும். நாம் உண்மையிலேயே இயேசுவின் சீடர்களாகவும் அவரைப் பின்பற்றவும் விரும்பினால், நாம் நம் குடும்பத்தில் இன்னும் சிறந்த உறுப்பினர்களாகவும், நமது வேலை இடங்களில் மிகவும் மதிப்புமிக்க ஊழியர்களாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் சாட்சிய வாழ்வே சீடத்தும்.
இந்தப் பகுதி நமக்குக் கற்பிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இயேசு தன்னைப் பின்பற்ற விரும்பியவர்களின் நோக்கங்களை அறிகிறார். வெளிப்படையாக, அவர்கள் சொன்னது அவர்களது உண்மையான நோக்கம் அல்ல. மாறாக இயேசுவைச் சுற்றியுள்ளவர்களின் பார்வையில் அவர்கள் நல்லவர்களாக தோன்ற வேண்டும் என்பதற்காகவே சீடத்துவத்தை ஏற்க விருப்புவதாக இயேசு அறிந்துள்ளார். இயேசுவைப் பின்பற்றுவதில்,முதலில் தன்னலம் துறக்க வேண்டும். பேருக்கும், புகழுக்கும், பதவிக்குமானது அல்ல சீடத்துவம்.
நமது இயேசுவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு முழுமையானது. நாம் அரை மனதுடன் அவரைப் பின்பற்ற முடியாது. சுயநல காரணங்களுக்காக நாம் அவரைப் பின்பற்ற விரும்புவதால் சீடத்துவம் சிறக்காது. அழைப்பு அவரிடமிருந்து வர வேண்டும். எனவேதான், ‘நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்’ (யோவான் 15:16) என்று இயேசு தெளிவுப்படுத்தினார். நாம் இயேசுவைப் பின்பற்றுவதற்கான தேர்வு அவரிடமிருந்து தொடங்குகிறது.
நாம் அவருடைய தெளிவான குரலையும் அழைப்பையும் கேட்க வேண்டும். நாம் பெறும் அழைப்பு நம்மிடமிருந்து எல்லாவற்றையும் கேட்கும் ஒன்றாக இருக்கும். அவரது அழைப்பை ஏற்போர், பலவற்றைத் துறக்க நேரிடும். முதலில் உலகப்பற்றை த் துறக்கவேண்டும். உலகப் பற்றை பிடித்துகொண்டு இயேசுவின் பின்னால் செல்ல முயற்சிப்பது மடமை. இயேசு தம சீடர்களுக்குக் கூறுவது, ‘நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல’ என்பதாகும் (யோவான் 15:19)
இயேசு ஒருபோதும் நம் வாழ்வில் பாதியையோ, அல்லது நம் வாழ்க்கையின் பெரும்பகுதியையோ அவருக்குக் கொடுக்க அழைப்பதில்லை. அவருடைய அழைப்பு எல்லாவற்றையும் கோருகிறது. எனவேதான் கத்தோலிக்கத் திருஅவையில் முதன்மை சீடர்களாக இருக்கும் அருள்பணியாளர்கள், திருமண வாழ்வு (மணத்துறவு) , கீழிப்படிதல், எளிமை ஆகிய மூன்று விடயங்களில் உறுதியாக உள்ளர். இது முற்றும் துறந்த நிலைக்கு சமமாகும்.
இன்றைய முதல் வாசகத்தில் இதற்கு நல்லதொரு உதாரணத்தைக் காண்கிறோம். பாரசீக மன்னரின் அரண்மனையில் பணியாற்றிய நெகேமியா, எருசலேமை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தீவிர ஆசையை உணர்கிறார். அவர் அனுமதி கோருகிறார், தயாரிப்புகளைச் செய்கிறார், தீர்க்கமாகச் செயல்படுகிறார். தயக்கமின்றி, கடவுளின் அழைப்புக்குப் பதிலளிக்க அவர் சுக வாழ்வையும் வகித்தப் பதவியையும் துறக்கிறார். அவரது தைரியமும் உடனடி நடவடிக்கையும் உண்மையான சீடத்துவம் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
அடுத்து நற்செய்தியில், “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார். ஆம், இயேசுவின் வார்த்தையில், அழைப்பில் நம்பிக்கை இழந்தோர் ‘இறந்தவர்களுக்குச் சமம். எனவே, அவர்களைப் பற்றிய கவலையை விடுத்து வாழ்வோருக்கு வழிகாட்ட நாம் புறப்பட வேண்டும்.
மற்றவர்கள் நம்மை உயர்வாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துவின் சீடத்துவத்தை ஏற்றால். அது துரோகம், பித்தலாட்டம் என்பதை நினைவில் கொள்வோம். கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் உறுதிபூண்டவுடன், பின்வாங்குவது இருக்கக்கூடாது. இன்றைய நற்செய்தியை “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல”என்று இயேசு முடிக்கிறார்.
இறைவேண்டல்.
என்னை தேர்ந்துகொண்ட ஆண்டவரே, என் வாழ்நாள் முழுவதும் உம்மைப் பின்பற்றுவதற்கான ஒரு தீவிரமான அர்ப்பணிப்புக்கு என்னை திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
