இயேசு-நமது உன்னத சுமைதாங்கி! | ஆர்கே. சாமி | Veritas Tamil

17 ஜூலை 2025
பொதுக்காலம் 15 ஆம் வாரம் – வியாழன்
விடுதலை பயணம 3: 13-20
மத்தேயு 11: 28-30
இயேசு-நமது உன்னத சுமைதாங்கி!
முதல் வாசகம்.
தம்முடன் உறவு கொண்ட மக்கள் மீது கடவுள் எப்போதும் பரிவிரக்கம் காட்டுவார். மக்களுக்கு தெய்வீக உதவி தேவைப்படும்போது கடவுள் அதை நிறைவேற்றுவார். முதல் வாசகத்தில், எரியும் புதரிலிருந்து பேசிய கடவுள், "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று மோசேயிடம் உறுதிகூறுகிறார்.
கடவுள் மோசேயிடம் தமது பெயரை வெளிப்படுத்துகிறார். கடவுளின் பெயர் ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்பதாகும். கடவுள் எப்போதும் இருந்திருக்கிறார், எப்போதும் இருப்பார். கடவுளுடன் தொடர்புடையவர்களுடனும் குறிப்பாக துன்பமிகு காலங்களைச் சந்திப்பவர்களுடனும் கடவுள் இருக்கிறார்.
மோசேக்கும் எபிரேய மக்களுக்கும் பார்வோன் மற்றும் எகிப்தியர்களிடமிருந்து வரும் எதிர்ப்புகள் பற்றியும் மோசேவை கடவுள் எச்சரிக்கிறார், இறுதியில், கடவுளின் வல்ல செயல்களைக் கண்டாலன்றி, எகிப்திய மன்னன் இஸ்ரயேலரைப் போகவிடமாட்டான் என்றும, அனைத்து அருஞ்செயல்களாலும் எகிப்தியனைத் தண்டித்து விடுவிப்பார் என்ற வாக்குறுதியையும் மோசேவுக்குத் தெரியப்படுத்தித் திடப்படுத்துகிறார். ”
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு அவரிடம் வந்து, அவரிடமிருந்து கற்றுக்கொள்ள தம்மைப் பின்பற்றுபவர்களை அழைக்கிறார். இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்வது சுமைகளைக் குறைக்கும், அதிக சுமையைச் சுமப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்றுணரத்துகிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில் 'பாலும் தேனும் பொழியும் நாட்டில் குடிவைப்பதாக இஸ்ரயேல் மக்களுக்கு மோசேயின் மூலம் கடவுள் வாக்களிக்கிறார். ஆம், செழுமையான மற்றும் வளமான வாழ்வை கடவுள் அவர்களுக்கு அளிக்கவுள்ளார். அங்கு குடியேறியதும் ‘எல்லாம் இன்பமயம்’ என்பதுபோல் அவர்களது வாழ்வு அமைய உள்ளது. அத்தகைய நாட்டிற்கு அவர் அழைத்துச் செல்லவுள்ளார்.
நற்செய்தியிலோ, பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களைத் தன்னிடம் வருமாறு அழைக்கின்றார். அவரிடம், அவரை நம்பி வருவோருக்கு நற்பலன் கிடைக்கும் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
இயேசுவின் காலத்தில் உரோமை அரசின் அதிகமான வரிவிதிப்பு நிலவியது. மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் ஏழைகள் வறுமையால் நாளுக்கு நாள் அதிகரித்த பொருளாதார சுமைக்கு ஆளானார்கள். எளிய மக்கள் ஒடுக்கப்பட்டனர், வதைக்கப்பட்டனர். ‘கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார், உழைத்தவர்கள் தெருவில் நின்றார்’ என்பதற்கேற்ப பாமர மக்கள் பெருஞ்சுமை சுமப்பவர்கள் ஆனார்கள்.
இக்காலக்கட்டத்தில் அவதியுறும் மக்களுக்கு ‘'நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்கிறார். இங்கே ‘இளைப்பாறுதல்’ என்பதை ‘ஆறுதல்’ என்று பொருள் கொள்ளலாம். இயேசுவின் இளைப்பாறுதலை பெற்றிட நமக்கு கனிவும் மனத்தாழ்மையும் இன்றியமையாதவை.
முதல் வாசகத்தில் தாம் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது என்று கடவுள் கூறியதோடு, அவர்களுக்கு இளைப்பாறுதலாக மோசேயை அனுப்பினார். அவ்வாறே, மனத்தாழ்மையோடு, இன்னலுறும் வேளைகளில் அவரை இறைஞ்சி மன்றாடுவோரை அவர் கைவிடுவதில்லை. அவர் வாக்கு மாறாதவர். ஒன்றை நாம் நினைவில கொள்ள வேண்டும். "கடவுளால் மட்டுமே மனிதன் முழுமையாக வாழ முடியும். கடவுளின்றி மனிதனுக்கு முழுமையில்லை.
இயேசு, என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்கிறார். இங்கே, நுகம் என்பது அவருடைய அன்பின் வழியை உணர்த்தும் சொல்லாக உள்ளது. ஆம், அவரது அன்பின் படிப்பினையை நாம் ஏற்று அதன்படி வாழ்வோமானால், அவரில் நமக்கு இளைப்பாறுதல் அல்லது ஆறுதல் கிடைக்கும் என்பது உறுதி. ஏனெனில், நம்முடைய வாழ்க்கையின் போராட்டங்களையும் விரக்திகளையும் அவர் முழுமையாக அறிவார்.
இறைவேண்டல்.
‘நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்றுரைத்த ஆண்டவரே, உமது வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து வாழும் உமது சீடராக என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
