வழிதவறினால் வாழ்க்கைத் தடம்புரளும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

29 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 21ஆம் வாரம் – வெள்ளி
புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்
எரேமியா 1: 17-19
மாற்கு 6: 17-29
வழிதவறினால் வாழ்க்கைத் தடம்புரளும்!
முதல் வாசகம்.
இன்று திருமுழுக்கு யோவானின் பாடுகள் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஏரோது அரசனால் கொல்லப்பட்டார். அதுவே அவரது பாடுகளாக நாம் நினைவுகூர்கிறோம்.
கடவுள் எரேமியாவிடம் தன்னை மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ளச் சொல்கிறார். எரேமியா தனது சொந்த கருத்துக்களை அல்ல, கடவுளின் வார்த்தைகளைப் பேச வேண்டும். மக்கள் எவ்வாறு பதிலளித்தாலும் சரி, கடவுளின் தூதராக இருந்து, செய்தியை உண்மையாக வழங்குவதே அவரது பணி என்று கடவுளால் அறிவுறுத்தப்படுகிறார்.
மக்கள் எரேமியாவை எதிர்த்தாலும், எதிரிகளைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று கடவுள் எரேமியாவை எச்சரிக்கிறார். கடவுள் அவரை அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன் என்கிறார்.
நற்செய்தி.
இன்று திருஅவை திருமுழுக்கு யோவானின் பாடுகள் குறித்துத் தியானிக்க அழைக்கிறது. திருமுழுக்கு யோவான் மீட்பராகிய இயேசுவின் வருகையை முன்னறிவிக்கவும் அவரது பாதையைச் செம்மைப்படுத்தவும் கடவுளால் அனுப்பப்பட்டவர் (லூக்கா 7:27). இவர் பழைய ஏற்பாட்டில் காணப்படும் இறைவாக்கினர்கள் அனைவரிலும் மேலான இறைவாக்கினர் (லூக்கா 7:26).
இவர்தான் இயேசுவை கடவுளின் செம்மறி என்று தொடக்கத்தில் எடுத்துரைத்தவர் (யோவான் 1:36), மேலும், இயேசுவுக்கு முன்பாக மனந்திரும்பியோருக்கு நீரால் திருமுழுக்கு அளித்தவர் (யோவான் 1:26).
இயேசுவும் “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” (மத் 11:11) என்று சாட்சியம் பகர்ந்தார். .
திருமுழுக்கு யோவான் ஒழுக்க நெறியை நிலைநாட்டுவதில் அஞ்சா நெஞ்சம் கொண்டவராக இருந்தார். லேவியர் 18: 16-ல், ”உன் சகோதரனின் மனைவியை வெற்றுடம்பாக்காதே! ஏனெனில், அவள் உன் சகோதரனின் வெற்றுடம்பு” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏரோது அரசனோ, இச்சட்டத்தற்குப் புறம்பாக, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்.
இதை அறிந்த திருமுழுக்கு யோவான், வெளிப்படையாக ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' என அறிவுறுத்தினார். இதன் வழியாக புனித யோவான் ஏரோதுவை கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ அழைக்கிறார். இதற்காகவே, தன் உயிரையும் தந்தார்.
இறுதியால், உண்மையுரைத்த யோவான் ஏரோதியாவிற்கு எதிரியானார். அவளும் அவரை பழிவாங்க, தந்திர வலை விரித்தாள்.
சிந்தனைக்கு
இன்று திருமுழுக்கு யோவானின் பாடுகள் திருநாளைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவான் ஏரோது அரசனால் கொல்லப்படும் நிலையே அவர் அனுபவித்த பாடுகள் என்பது வெளிளிடைமலை. இன்றைய நற்செய்தியில் தவறான பிள்ளை வளர்ப்புப் பற்றிய ஒரு செய்தியையும் நாம் காண்கிறோம். ஆம், ஏரோதியா தன் மகளை தனது பழிவாங்கும் செயலுக்குப் பயன்படுத்துகிறாள் ஒரு நல்ல தாய் இப்படி செய்வாளா? என்ற கேள்வி தோன்றுகிறது அல்லவா? அந்த பிஞ்சு உள்ளத்தில் நஞ்சைக் கலந்தாள். கொலை பாதகத்திற்குத் தன் மகளை தூண்டினாள். ஒரு நேர்மையாளரான திருமுழுக்கு யோவானின் தலையைப் பரிசாகக் கேட்க அவளைத் தூண்டுகிறாள்.
நமது நல்ல நடவடிக்கைகள்தான் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்கு ஒளியாக விளங்கும். எதை விதைக்கிறோமோ அதைதான் அறுவடை செய்வோம். பெற்றோர்களாகிய நாம் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பேணுவதோடு பிள்ளை வளர்ப்பில் கண்ணும் கருத்துமாக விளங்க வேண்டும். இல்லையேல் நம் கையைக்கொண்டே நம் கண்களைக் குத்திக்கொண்ட கதையாகிவிடும்.
இயேசு, ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி’ (யோவான் 18:37) என்று அன்று பிலாத்துவிடம் கூறியதற்கொப்ப திருமழுக்கு யோவானும் உண்மைக்குச் சாட்சியம் பகர தன் உயிரைவிட்டார்.
ஏரோது, எல்லாரையும் திருப்திப்படுத்த விரும்பினார். எனவே, திருமுழுக்கு யோவான் கொல்லப்படுவது பற்றி அவன் துயருறவில்லை. ஆனால் அந்த பழிபாவம் அவனைப் பற்றிக்கொண்டது. சில நேரங்களில் நாமும் இப்படிதான், நீதியான முடிவை எடுக்கத் தவறிவிடுகிறோம். பேருக்கும், புகழுக்கும், செல்வத்திற்கும் அடிமைப்பட்டு, ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கிறோம். யார் எப்படி போனால் என்ன? யாருக்கு எது நடந்தால் என்ன? நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோம். அதை பெரும் சாதனையாகவும் கருதுகிறோம்.
முதல் வாசகத்தில், கடவுள் எரேமியாவை அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளதாகக் கூறினதைக் கேட்டோம்.
இதில், அரண்சூழ் நகரம் என்பது, எரேமியா வலிமையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பார், தாக்குதலைத் தாங்கக்கூடியவராக இருப்பார் என்பதையும், இரும்புத் தூணாக என்பது, இறைபணியில் மனந்தளராமல் இருப்பார் என்பதையும், வெண்கலச் சுவராக என்பது அவரது பாதுகாப்பு வலுவாகவும், உறுதியானதாகவும் இருக்கும் என்றும் கடவுள் கூறுகிறார். நாமும் இறைபணியில் மனந்தளராமலும், எதிரப்புகளைக் கண்டு துவண்டுவிடாமலும் வலுவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டும் என்று இன்று நினைவூட்டப்படுகிறோம்.
இறைவேண்டல்
இரக்கத்தின் ஊற்றாகிய இயேசுவே, என் ஆண்டவரே, புனித திருமுழுக்கு யோவானைப்போல், உண்மைக்குச் சாட்சியம் பகரும் மனோபலத்தை எனக்கு அருள்வீராக. ஆமென்
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
