அமைதிக்குரிய வழியை நாம் அறிந்திருக்கிறோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம்,33 வாரம் வியாழன்
I: 2 மக் :2: 15-29
II: திபா 50: 1-2. 5-6. 14-15
III: லூக்: 19: 41-44
அமைதிக்குரிய வழி என்பது என்ன? யாருடைய வம்புக்கும் போகாமல் இருப்பதா? யார் நம்மை கஷ்டப்படுத்தினாலும் குரலெழுப்பாமல் இருப்பதா? யார் எப்படி போனால் என்ன நாம் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவோம் என்ற மனநிலையா? எது அமைதிக்குரிய வழி.
நம் இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் போது உரிமைக்காக அமைதி வழியில் போராடியவர் நம் தேசத்தந்தை காந்தியடிகள். தன் சுயநலனை மறந்து அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையுள்ள எல்லா இந்தியனும் விடுதலை பெற அமைதியாக அறப்போராட்டம் செய்தவர் காந்தியடிகள் என வரலாறு கூறுகிறது. கல்கத்தாவிலே தெருவிலே யாருமின்றி தவித்தவர்களுக்கு பல எதிர்ப்புகளையும் தாண்டி வாழ்வளித்தவர் தான் அன்னை தெரசா. அவருடைய வழியும் அமைதி வழியே.
தன்னுடைய கொள்கைதான் சரி, என்று எண்ணிக்கொண்டு பிறரை மதிக்காமல் நல்லவற்றைக் கண்டுணராமல் இருக்கும் மனிதர்கள் எவ்வளவு சாதுவானவர்களாக இருந்தாலும், எவ்வளவு தெய்வபயம் கொண்டிருந்தாலும் அவர்களின் வழி என்றுமே அடக்குமுறைதான்.இன்றைய நற்செய்தியில் இப்படிப்பட்ட அடக்குமுறையைக் கையாண்டவர்களுக்காய் இயேசு கண்ணீர் வடிக்கிறார். ஆம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எருசலேம் நகரைக் கண்டு அழுகிறார். அழகிய அந்த நகர் எதிரிகளால் தகர்க்கப்படப்போவதை எண்ணி வருந்துகிறார். அதற்கு காரணம் என்ன?
யூதர்கள் அனைவருமே மெசியாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தங்களுடைய விடுதலை நாயகனின் வரவை எண்ணி காத்திருந்த அவர்கள் அதற்காகத் தங்களை சரியான விதத்தில் தயாரிக்கத் தவறினார்கள். அமைதியின் அரசரின் வழிகளை அறியாமல் தங்களுடைய விருப்பம் போல் சட்டங்களை வகுத்துக்கொண்டு அடித்தட்டு மக்களை அடிமைப்படுத்தத் துணிந்தார்கள். அவற்றைத் தவறு என சுட்டிக்காட்டிய இறைவாக்கினர்களை அழித்தார்கள். அதையெல்லாம் தாண்டி இயேசுதான் மெசியா என்பதை அவர்கள் உணரவில்லை. அவருடைய அருஞ்செயல்களையும் போதனைகளையும் பாவிகள் புரிந்து கொண்ட அளவிற்குக் கூட மறையைத் தெரிந்த அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. கடவுளின் வார்த்தையைக் கேட்டு சகமனிதருக்கு இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுப்பதே அமைதியின் வழி என்பதை அவர்கள் உணராமல் இறையரசை விட்டு வெகு தொலைவிற்கு சென்றுவிட்டனர். தேர்ந்துகொள்ளப்பட்ட இனமா அவர்கள் அமைதியின் வழியை மீட்பின் பாதையை உணராத நிலையை எண்ணி அதற்காக வருந்துகிறார் இயேசு.
நம்முடைய வாழ்வையும் நாம் அலசிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். நம்முடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, நம்முடைய கொள்கைகளைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு கடவுளுடைய வார்த்தைகளைக் கேட்காமலும் பிறருடைய துன்பத்தைத் துடைக்காமலும் நாம் வாழ்ந்தோமெனில், நம் வாழ்வில் அமைதி இருப்பதைப் போலத் தோன்றும். ஆனால் மனதில் ஆண்டவர் வழங்கும் உண்மையான அமைதி இருக்காது. இறைவன் நம்மை எண்ணி வேதனைப்படும் நிலை ஏற்படும். எனவே இறைவன் காட்டுகின்ற அமைதிவழியைத் தேடி அதிலே பயணிக்கக் கற்றுக்கொள்வோம்.
இறைவேண்டல்
அமைதியின் தெய்வமே இறைவா! நீர் அருளும் உண்மையான அமைதியின் வழியை எம் வாழ்விலே அறிந்து பயணிக்க அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Daily Program
