வாக்குறுதிகளின் இறைவன் நம்மைத் தேடி வருகிறார்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகை காலம்-நான்காம் வாரம் சனி
I: 2 சாமு: 7: 1-5,8-12,16
II: திபா 89: 1-2. 3-4. 26,28
III: லூக்: 1: 67-79

 நண்பர்கள் இருவர் தங்களிடையே உரையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது இருவரும் தங்கள் வாழ்நாள் முழுதும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக துன்பத்தில் துணையிருக்க வேண்டும் என்றும் வாக்குறுதி கொடுத்துக்கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல அவர்கள்  தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார். புதிய நண்பர்கள், புதிய பணியிடங்கள், புதிய வாழ்க்கை முறைகள், பண வசதிகள், திருமண வாழ்க்கை  என ஒவ்வொன்றாக மாற மாற இவர்தான் தன் நண்பன் என்பதையே மறந்து போனார்கள். இருவரின் வாக்குறுதிகளும் மறைந்து போயின. 

 மனிதருக்கு மனிதன் தரும் வாக்குறுதிகளின் தன்மை இதுதான். பெரும்பாலும் அவை உறுதியற்றவை. நிலையற்றவை. மறைந்து விடுபவை. ஏன் இறைசந்நிதியில் திருமண வாக்குறுதிகள் கொடுத்து பல வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து பிள்ளைகள் பெற்றெடுத்த தம்பியர் தங்கள் வாக்குறுதிகளில் நிலையாக இல்லாமல் சிதறிப் போவதை நாம் கண்களால் காண்கிறோம் அன்றோ. 

ஆனால் நம் தந்தை கடவுள் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவராக உள்ளார். தம் ஒரே மகன் இயேசுவை இவ்வுலக மீட்புக்காக அவர் கையளித்த செயல் அவர் வாக்குகளை நிறைவேற்றும் தேவன் என்பதை உணர்த்தும் உச்சகட்ட அடையாளமாகத் திகழ்கிறது.இதைத்தான் இன்றைய இரு வாசகங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா மூலமாக தாவீதின்  அறியணையை நிலைநிறுத்துகிறார். அதே போல நற்செய்தியில் சக்கரியா மூதாதையருக்கு கடவுள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியதை எண்ணி அவரைப் போற்றி புகழ்கிறார்.  

விண்ணகத்தந்தையின் பிள்ளைகளாகிய நாமும் அவரைப் போல உடன்டிக்கையில் நிலையானவர்களாக, கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் போது உறவு நிலைக்கும்.  அமைதி பெருகும். வாழ்வு செழிக்கும். கடவுள் நம்மோடு வாழ்ந்திடுவார்.

 இறைவேண்டல் 
வாக்குமாறா தேவனே!  உம்மைப்போல் வாக்குமாறாதவர்களாக வாழ்ந்து விடியலைக் காண எமக்கருள் செய்யும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்