தீயவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இறைவனிடம் மன்றாடுவோம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பாஸ்கா காலம்- ஏழாம் வாரம் புதன்
I: திப: 20:28-38
II: திபா :68 :28-29,32-34,34-35
III:யோவான் :17:11-19
உலகம் நன்மை நிறைந்தது. ஏனெனில் இவ்வுலகைப் படைத்த கடவுள் நன்மை நிறைந்தவர். படைப்புகள் அனைத்தையுமே அவர் நன்மைகளால் நிரப்பியுள்ளார். ஆனால் காலம் செல்லச் செல்ல உலகம் தீமைகளால் நிறைந்துவிட்டது. இன்று அத்தீமைகளைச் சார்ந்தே நாமும் வாழப் பழகிக்கொண்டிருக்கிறோம். அத்தகைய நிலையிலிருந்து விடுபட இறைவன் நம்மை மீண்டும் மீண்டுமாய் அழைக்கிறார்.
இன்றைய இரண்டு வாசகங்களும் நாம் நம்மை தீயவற்றிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ள அழைக்கின்றன.
தன்னுடைய மூன்று ஆண்டுகால பணிவாழ்வில் சீடர்களைத் தமக்குப்பின் தன் பணியைத் தொடர இயேசு தயார் படுத்தினார். தன்னுடைய இறுதி நாட்கள் வந்த போது அவர்களை விட்டு தான் பிரியப் போகிறேன் என்பதை உணர்ந்த இயேசு அவர்களுக்காக தந்தையிடம் மன்றாடுகிறார். அவர்களை தீயோனிடமிருந்து காக்கவும், அவர்கள் உலகைச் சாராதவர்களாய் வாழ்ந்து சான்றுபகரவும் வேண்டுமென அவர் மன்றாடுகிறார்.
புனித பவுல் இயேசுவின் மனநிலையைப் பிரதிபலிப்பவராய் நம்பிக்கையாளர்களுடன் இணைந்து தீயவற்றிலிருந்து அனைவரையும் காக்கும் படி இறைவேண்டல் செய்கிறார். உண்மையைத் திரித்துக் கூறுபவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கும் படி வழிகாட்டுகிறார்.
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருடைய இறைவேண்டலும் இதுவாகத் இருக்கின்றன. ஏனெனில் நாம் உலகத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளோம். உண்மையை திரித்துக் கூறும் ஊடகங்களையும் தலைவர்களையும் நம்பி உண்மையை விட்டு விலகி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்று வேகமாய்ப் பரவிக் கொண்டிருக்கும் தொற்று நோயைப் பற்றிய உண்மைநிலையை பற்றி இப்பொழுது கூட நாம் தெரிந்துகொள்ளவில்லை. நமக்குத் தெரிந்தெல்லாம் திரிக்கப்பட்ட உண்மைகளே.
நாளை இருப்போமா என்று தெரியாத உலகிலே வாழும் நாம் ஏன் இன்னும் தீயவற்றையும் அதைப்பற்றிக் கொண்டிருக்கும் உலகையும் விட்டு விலகாமல் இருக்கிறோம் என ஆராய வேண்டும்.கடவுள் உலகைப் படைத்த போது நல்லதெனக் கண்டார். அந்நன்மைகளைப் பெருக்க வேண்டியது நமது கடமை. அதற்காக நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தீமையைக் களைய வேண்டும். உண்மையை ஆராய்ந்து அறிய வேண்டும். இயேசுவைப் போல, புனித பவுலைப் போல உலகத்தைச் சாராமல் வாழ்ந்து இறைவேண்டலில் நிலைக்க வேண்டும். செபிப்போம். தீயோனிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா நாங்கள் இறைவேண்டலில் நிலைத்து தீயோனிடமிருந்து எங்களைக் காத்துக்கொள்ள வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்