நல்லது செய்ய உத்தரவு அவசியமில்லை! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

திருவருகை காலம்-மூன்றாம் வாரம் திங்கள்
I: எண்ணிக்கை 24: 2-7, 15-17a
II: திபா: 25: 4-5ab. 6,7bc. 8-9
III: மத்: 21: 23-27
நாம் திருவருகைக் காலத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இக்காலம் நமக்கு மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது என்னவென்றால் நமக்காக மனிவுரு எடுத்த கிறிஸ்துவை தகுந்த தயாரிப்போடு நம் உள்ளத்தில் ஏற்று அவரைப்போல நாமும் மாற முயற்சிக்க வேண்டும் என்பதே. இந்நாட்களில் நாம் வாசித்து தியானிக்கும் இறைவார்த்தையும் நம்மை இச்சிந்தனையை உள்வாங்கி நமதாக்கி வாழ அழைக்கின்றன.
சமீபத்தில் ஒரு காணொளி கண்டேன். சிறுவன் ஒருவன் தன் வீட்டிலிருந்து தினமும் ஒரு பழத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய் தன் வகுப்பிலே உள்ள ஏழை மாணவனுக்குத் தருவான். இதைக் கண்காணித்த தாய் ஒரு நாள் அவன் பழத்தை எடுக்கும் போது பார்த்துவிட்டு அவன் பின்னாலேயே சென்று அதைவைத்து என்ன செய்கிறான் எனப் பார்த்தார். பார்த்தவருக்கு மகிழ்ச்சிதான். இருப்பினும் தன் மகனின் மனநிலையை மாற்ற வேண்டுமென எண்ணி அவனைக் கடிந்து கொள்வது போல "யாரைக் கேட்டு இவ்வாறு செய்கிறாய்? " என வினவினார். அப்பையன் பயத்தோடு அமைதியாக இருந்தான். அப்போது தாயானவள் தன் மகனை அணுகி "நீ நல்லது தான் செய்கிறாய். அதை திருட்டுத்தனமாக ஏன் செய்ய வேண்டும். அம்மாவிடம் சொல்லிவிட்டு தைரியமாகச் செய்யலாமே! " என்று கூறி அவனுக்கு புரியவைத்தார்.
இன்று நம்மிலே பலரும் நல்லது செய்ய துணிவின்றி இருக்கிறோம். காரணம் எதிர்ப்புகள் எழும். யாரைக்கேட்டு செய்கிறாய்? உன் வேலையை மட்டும் பார்! போன்ற வார்த்தைகளைக் கேட்கக் கூடும். ஆனால் அவற்றிற்கெல்லாம் நாம் அஞ்சக் கூடாது. யாருடைய உத்தரவையும் ஆதரவையும் நாடக் கூடாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நல்லவற்றை மக்களுக்கு கற்பிப்பதை பொறுக்க இயலாத யூதர்கள் "எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர்?" எனக் கேட்ட போது இயேசு சிறிதும் தளரவில்லை.மாறாக அவர்கள் வாயை அடைத்துவிட்டு யாரும் எனக்கு அதிகாரமும் உத்தரவும் தரத் தேவையில்லை என்ற மனநிலையில் நற்காரியங்களைத் தொடர்ந்து செய்தார். இயேசுவைப் போல நாமும் நம் மனநிலையை மாற்றிக்கொண்டு நல்லவற்றை துணிந்து செய்வோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா! யாருடைய உத்தரவின் பேரிலும் ஆதரவின் நிழலிலும் அல்லாமல் துணிவுடன் நல்லவற்றை செய்ய அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Daily Program
