அன்பு செலுத்தி உறுதியாய் நில்
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? - உரோமையர் 8:35. ஒருவன் கடவுள் மேல் உண்மையான அன்பு கொண்டிருந்தால் இது எதுவும் அவன் அன்பை இயேசுவிடம் இருந்து பிரிக்காது.
யோபு ஆண்டவர் மீது வைத்திருந்த அன்பை அவருடைய துன்பங்கள் எதுவும் பிரிக்கவில்லை. ஆண்டவர் தந்தார் அவர் எடுத்து கொண்டார் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய அன்பு இருந்தது. ஆபிரகாம் முதிர் வயதில் பிறந்த ஒரே மகனையும் பலி கொடுக்கும் அளவுக்கு ஆண்டவர் மீது அவருடைய அன்பு இருந்தது. ஸ்தேவான்மீது கல்லெறிந்து கொலை செய்த போது கூட “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார். இயேசுவின் மீது வைத்திருந்த அன்பை அவருடைய சாவு பிரிக்கவில்லை.
இவர்கள் எல்லாம் ஆண்டவரிடம் அன்பு செலுத்தி உறுதியாய் நின்றார்கள். இயேசு சிலுவையிலே தன்னுடைய உயிரை கொடுத்து, நம் மேல் வைத்த அன்பை வெளிப்படுத்தினார். நாம் அந்த அன்பை மறுதலிக்க கூடாது.
செபம்: ஆண்டவரே, எந்த சூழ்நிலையிலும் நான் உம்மை நேசிப்பேன். செழிப்போ, வறுமையோ, கடனோ, பணமோ, துன்பமோ, நோயோ, சாவோ எந்த சூழ்நிலையும் உம் அன்பை விட்டு பிரிக்காது, நிலைத்து நிற்கும் மனதை தாரும். வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உம் கல்வாரி அன்பை நான் நினைக்க என்னை தகுதியுள்ளவனாக்கும். ஆமென்.