வானத்தை நிமிர்ந்து பாருங்கள். || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.05.2024
வானத்தை நிமிர்ந்து பாருங்கள்.
நாம் எப்போதும் கீழ்நோக்கிய பார்வையிலேயேதான் உலவுகின்றோம்.
எப்போது நமது பார்வை விசாலமாகிறதோ, அப்போது மனம் விரிவடைகிறது.
எப்போது மனம் விரிவடைகிறதோ, அப்போது வாழ்க்கையும் விரிவடைந்து விசாலமாகிறது, இந்தப் பிரபஞ்சம் போல.
பார்வை விசாலமடைய எண்ணம் விசாலமாக வேண்டும் என்பது நமக்குத் தெரியும்.
எண்ணம் விசாலமாக வானத்தை
நிமிர்ந்து, அண்ணாந்து பாருங்கள்.
நமக்கு மட்டுமே இந்த அரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், அடிக்கடி வானத்தைப் பார்ப்பவராக மாறுங்கள்.
ஏனெனில், வானம் எனக்கு ஒரு போதிமரம், நாளும் எனக்கொரு செய்தி சொல்லும் எனும் பாடல் வரிகள் மிகப்பெரிய உண்மை.
வானத்தை நிமிர்ந்து பார்க்கும் போது, அதன் பிரமாண்டம் புரியும்.
நம் கண்களால் எவ்வளவு விழித்துப் பார்த்தும் உணர முடியாத அதன் எல்லையற்ற விசாலம் புரியும்.
இந்த அண்டசராசரித்தில் நாம் தூசியிலும், தூசி என்பது புரியும்.
இந்த அண்டசராசரம் நம்மைப் போல் எத்தனை, எத்தனை ஜீவன்களை உள்ளடக்கியது என்பது புரியும்.
நம் சின்ன, சின்ன எண்ணங்கள் மறைந்து வானத்தின் விசாலம் நம் மனம் எல்லாம் பரவி நிற்கும்.
இவ்வளவு பெரிய வானம் நம் தலைக்கு மேல் பாதுகாப்பாய் உள்ள போது,எதுவும் என்ன செய்து விட முடியும் என்ற
நம்பிக்கை பிறக்கும்.
உங்கள் பார்வைக்கு படக்கூடிய தூண்கள் எதுவுமின்றி இறைவன் தான் வானங்களை உயர்த்தினான், மேலும், சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்கு கட்டுப் படும்படி செய்து,இறைவன் தான் இவ்வனைத்து காரியங்களையும் நிர்வகித்து வருகிறான். அத்தகைய எல்லாம் நிரம்பிய வானத்தை நிமிர்ந்து பாருங்கள்.
நாம் எப்போதெல்லாம் மனச்சோர்வோ, எண்ணமாற்றமோ கொள்கிறமோ, அப்போதெல்லாம் ஓடி வந்து வானத்தின் விசாலத்தைப் பார்ப்போம்.
உடனடியாக நாம் ஏதும் இல்லை, இங்கு நம்மைப்போல் வாழ்ந்தோர் கோடானகோடி.
இவ்வளவு பிரமாண்ட பிரபஞ்சம் படைத்தப் பேராற்றலுக்குத் தெரியும் நமக்கு என்ன தர வேண்டும், எப்போது தரவேண்டும், எப்படித் தரவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
சட்டென உள்ளத்தில் ஒரு உற்சாகம் பிறக்கும்.உண்மையில் வானம் ஒரு போதிமரம்தான்.
ஆதலால், அதிகாலைச் சூரியனை வரவேற்கத் தயாராக இருங்கள், அந்திசாயும் போதும் சூரியனை வழியனுப்பத் தயாராக இருங்கள்.
அதுபோல பெளர்ணமியை ரசித்து, அதன் குளுமையில் கரையுங்கள் அமாவாசையின் அடர்த்தியை உணருங்கள்.மூன்றாம் பிறை பாருங்கள்.அடிக்கடி வானம் பார்த்து நட்சத்திரங்களோடு பேசி மகிழுங்கள்.
நாம் மகிழ்ச்சி பொக்கிஷத்தை மறந்து விட்டு,துன்பம் என்ற குப்பையை கிளறி
கொண்டு இருக்கிறோம்.
வானம் பாருங்கள் நிச்சயம் வாழ்வில் விசாலமான மனநிலை கிடைக்கும்.
மனம் விரிய, விரிய நிச்சயம் வாழ்க்கை அற்புதமாகும்.
ஆனந்தம் நிலைக்கும்.
பிரபஞ்சத்தமிழ்.
சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
- Reply
Permalink