இயேசுவே கடவுளின் முதன்மை அருளடையாளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பாஸ்கா4-ம் வாரம் – புதன்

 தி.பணிகள்  12: 24- 13: 5
யோவான்  12: 44-50


இயேசுவே கடவுளின் முதன்மை அருளடையாளம்!
 
முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், தொடக்கக் கால கிறிஸ்தவ சமூகத்தின் வளர்ச்சி மற்றும் தூய ஆவியானவர் வழிநடத்தும் திருப்பணி குறித்து அறிகிறோம்.
 
ஏரோதுவின் மரணத்திற்கு பின், நற்செய்தி வேகமாக பரவியது. பவுலும் பர்னபாவும் தங்கள் பணியை முடித்து, யோவான் மார்க்கையும் (John Mark)  கூட்டிக்கொண்டு எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்குத்  திரும்பினர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.   .
அந்தியோகியா சபையில் பர்னபா,  சிமியோன்( நீகர்), லூக்கியு, மனாயீன், சவுல் போன்ற இறைவாக்கினர்களும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் நோன்பு ஏற்று இறைவேண்டலில் இருக்கும்போது, தூய ஆவியானவர் பர்னபாவையும் சவுலையும்   ஒரு தனிப்பட்ட பணிக்கென   அழைத்திருப்பதாக தெரிவித்தார். 
அனைவரும் தூய ஆவியாரின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து, இந்த இருவர் மீது கைகளை வைத்து,  மறைபணிக்கு அனுப்பி வைத்தார்கள்.  

நற்செய்ய்திப்பணி தொடக்கம்.
 
தூய ஆவியானவர் வழிநடத்த, அவர்கள் செலூக்கியாவிற்கு சென்று, அங்கிருந்து சைப்பிரசுக்கு பயணம் செய்தனர். சாலமிஸ் நகரத்தில், அவர்கள் யூதர் ஆலயங்களில் நற்செய்தியை  அறிவித்தனர். யோவான் எனும் மார்க்கும் அவர்களுக்கு உதவியாக இருந்தார் என்று லூக்கா விவரிக்கிறார். 


நற்செய்தி.

இன்றைய இப்பகுதியில்,  இயேசு தம்முடைய அடையாளத்தையும், தம்மை நம்புவதின் முக்கியத்துவத்தையும் தெளிவாக அறிவிக்கிறார். அவர் தொடர்ந்து, இயேசுவை நம்புவதானது, தந்நையாம் கடவுளை நம்புவதாகும் என்கிறார். ஆம், “என்னை நம்புகிறவன் என்னை மட்டுமல்ல, என்னை அனுப்பினவரையும் (தந்தை தேவனை) நம்புகிறான்” என்கிறார். தொடர்ந்து வசனம் 46-ல், “நான் உலகிற்கு ஒளியாக வந்திருக்கிறேன்” என்கின்றார் இயேசு.  இதன்வழி, அவரை நம்புகிறவர்கள் இருளில் (பாவம், அறியாமை) இருக்காமல், உண்மையின் வெளிச்சத்தில் நடப்பார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்.

அடுத்து,  அவர்  உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தார் என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். அவரது தீர்ப்பானது இறுதி நாளில் வரும் என்றும், இயேசுவின் போதனைகளை நிராகரிப்பவர்கள், அந்த வார்த்தைகளினாலேயே நியாயத்தீர்ப்பு பெறுவார்கள் என்றும் உறுதியாகக் கூறுகிறார்.

இறுதியாக, இயேசு தன்னிச்சையாக பேசவில்லை; கடவுள் கொடுத்த கட்டளைகளையே பேசுகிறார் என்றும்  அந்த வார்த்தைகள் நிலைவாழ்வுக்குரியவை என்றும் முடிக்கின்றார்.
 
சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில், கடவுளின் வார்த்தை தடை இல்லாமல் பரவியது என்றும் தூய ஆவியார் அப்பணியில் திருஅவையை வழிநடத்தினார் என்றும் சாட்சியம் பகரிப்பட்டதை அறிந்தோம். இதற்கு பணியாளர்களின் நோன்பு. இறைவேண்டல் மற்றும் பெறுப்பேற்றல் பெரிதும் துணைபுரிந்தது என்பதை மறுப்பத்றகில்லை. அன்று கடவுளின் பணிக்காக அழைக்கப்பட்டவர்கள் ஏற்ற பணியை நிறைவேற்றியதால் நற்செய்தி விரைவாகப் பரவியது. அவர்கள் ஒரு குழுவாகவும் செய்லபட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். திருமுழுக்குப் பெறுவது என்பது பணிவா.ஃவுக்கான அழைப்பு என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

நற்செய்தியில், இயேசுவை நம்புவதானது, தந்நையாம் கடவுளை நம்புவதாகும் என்கிறார்.  இந்த படிப்பினையை மையமாகக் கொண்டே புனித பவுல் இயேசுவைக் குறித்து, ‘அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு (கொலோ 1:15) என்றார்.

இயேசுவின் தெய்வீகம் அல்லது இறை இயல்பு  அவருடைய மனிதத்தன்மைக்குள் மறைக்கப்பட்டிருந்தபோதிலும்,   அவருடைய சீடர்களின் நம்பிக்கை இயேசுவின்  உண்மை நிலையை உணர வழிவகுத்தது. கடவுளின் முழு மாட்சி நமக்கு மறைக்கப்பட்டிருந்த போதிலும், இயேசுவைப் பார்ப்பது என்பது உண்மையாகவே கடவுளையே உற்று நோக்குவதாகும்.

மேலும், இன்று இயேசு மற்றொரு படிப்பனையையும் தருகிறார். ஆம், இயேசு “என்னை நம்புகிறவர் உவரும் இருளில் இராதபடிக்கு, நான் ஒளியாக உலகத்திற்கு வந்தேன்” என்றார். இந்த ஒளி, நம் வாழ்வில் கடவுளின் உடனிருப்பையும்  செயலையும் நமக்கு உறுதிப்படுத்தும் ஒரு உள்ளார்ந்த ஒளியாக உள்ளது. இந்த ஒளியை நாம் காண்கிறோமா? இயேசுவையும் தந்தையையும்  தூய ஆவியாரையும் அறிந்துணர்கிறோமா?

நம்பிக்கைக்கு எதிரானதானது அவநம்பிக்கை. இந்த அவநம்பிக்கை  நம் வாழ்வில் இருளைக் கொண்டுவருகிறது. அவநம்பிக்கை என்பது நம்மிடையே ஒரு பொதுவான போராட்டமாக இருந்தாலும், அதைக் கடந்து செல்லுமாறு கடவுள் நம்மை அழைக்கிறார். கடவுளால் அருளப்படும் உண்மையான நம்பிக்கை, நமது புலன்களால் நாம் உணரும் எதையும் விட ஆழமான உறுதியை அளிக்கிறது.

உலகில் வேறு எந்த போதகரும் கூறாத ஓர் உண்மையை இயேசு மட்டுமே கூறினார். ஆம், நாம் அவரைக் காணும்போது, தந்தையாம் கடவுளைக் காண்கிறோம் என்ற இயேசுவின் வாக்குறுதியை இன்று மனதில் நிறுத்துவோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, இமையில் உம்முடன் நடக்கவும், மறுமையில் உம்மை என்றென்றும் அனுபவிக்கவும் இந்த ஆன்மீக புரிதலை என்னில் ஆழப்படுத்துவீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452

Comments

David (not verified), Apr 29 2026 - 8:05am
Praise the Lord
David (not verified), Apr 29 2026 - 8:05am
Praise the Lord
David (not verified), Apr 29 2026 - 8:05am
Praise the Lord