பிணவறை நோக்கிய பயணம்... | Ashwin
"சார் உங்களுக்கெல்லாம் ஒருதடவ சொன்னா புரியாதா? வரிசையில வாங்க சார், கொஞ்சம் தள்ளித் தள்ளி நில்லுங்க சார், ஐயா பெரியவரே உங்களுக்கும் சேத்துதான் சொல்லுறேன் வரிசையில வாங்கய்யா"
"ஐயா எனக்கு அவசரமா போகணும் கொஞ்சம் சீக்கிரமா எடுங்கய்யா "
"ஆமா பெரிய கலெக்டரு, இங்க வரிசையில நிக்குறவங்கள பார்த்தா மனுஷனா தெரியலையா? தேவையில்லாம சத்தம் போடாம போய் வரிசையில வாயா"
"ஐயா, இண்ணைக்கு காத்தால என் பொண்டாட்டி கொரோனாவால செத்துப் போயிட்டா. கொரோனா டெஸ்ட்க்கு கொடுத்துட்டு இண்ணைக்குள்ளாடி போய் எங்கிட்ட பொணத்த வாங்க சொன்னாங்கய்யா"
(கொஞ்சம் கண் வியர்க்க)
"ஐயா மன்னிச்சுடுங்க எங்கூட வாங்க, இந்தாப்பா முதல்ல இந்த பெரியவருக்கு எடுத்துட்டு அனுப்பிவிடு"
"ரொம்ப நன்றியா"
(கொஞ்சம் கதகதத்த குரலில் கைகளை கூப்பி)
"ஐயா தனி ஆளா எப்படி கொண்டு போவீங்க யாரும் கூட வரலயா?"
"இல்லையா, கொரோனாவால செத்தவங்கள தூக்குன அவங்களுக்கும் கொரோனா வந்துடுமுன்னு பயந்து பெத்ததுங்களே வர மறுத்துட்டாங்க,"
"ஐயா நீங்களும் ரொம்ப வயசானவரா இருக்குறீங்க நாளைக்கு காலையிலயாச்சும் யாரையாவது கூப்புட்டு வந்துருக்கலாம்ல"
"இல்ல சாமி இண்ணைக்கு போகலேனா அசுபத்திரி காரங்களே காரியம் பண்ணுறதா சொல்லீட்டாங்க, இருந்த வரைக்கும் எல்லாரையும் நல்லா பார்த்துட்டு போயிட்டா மகராசி அதான் அவ போகும்போது அனாதையா போக வேணாமுன்னு நானே வந்துட்டேன்"
என கூறிவிட்டு தோளில் கிடந்த துண்டை தலைகட்டி தன் மணவாட்டியைக்காண பிணவறை நோக்கி நடந்தார்....
அங்கு அவள்மேல்
அவன்கொண்ட
காதலைக் கண்டு,
அவர்கள் முன்
மண்டியிட்டது
கொரோனா....
எழுத்து
அஸ்வின்