இரண்டு அளவுகோல்களைச் சுமந்து நடப்பதற்கான மருந்து தாழ்மை! |அருட்தந்தை நிலேஷ் பர்மார், எஸ்.ஜே |Veritas Tamil
இரண்டு அளவுகோல்களைச் சுமந்து நடப்பதற்கான மருந்து தாழ்மை.
கிறிஸ்தவ அளவுகோல் என்பது இரக்கத்தின் அளவுகோல்.
ஒரு துணி வியாபாரி தனது கடையில் இரண்டு அளவுகோல்களை வைத்திருந்தான்.
அவற்றில் ஒன்று உண்மையான அளவைக் காட்டிலும் சற்றே குறைவானது. துணி விற்கும்போது அதையே பயன்படுத்தி, தன் பக்கமாக சிறிது கூடுதலாக வைத்துக்கொள்வான்.
மற்றொன்று முற்றிலும் சரியான அளவுகோல். பிறரிடமிருந்து துணி வாங்கும்போது இதையே பயன்படுத்துவான்; தன்னை யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக.
ஒருநாள், அந்த வியாபாரி ஒரு விவசாயியிடமிருந்து அரிசி வாங்கச் சென்றான். விவசாயியின் தராசு சற்றே ஒரு பக்கம் சாய்ந்திருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. உடனே கோபமடைந்த வியாபாரி,“இது அநியாயம்! உடனே உன் தராசை சரிசெய்!” என்று கத்தினான்.
ஆனால் உண்மையில் அந்த தராசு முற்றிலும் சரியாகவே இருந்தது.வாக்குவாதம் பெரிதாகி, விவகாரம் கிராம நீதிபதியின் முன் கொண்டு செல்லப்பட்டது. இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி அமைதியாக வியாபாரியை நோக்கி,
“நீ மற்றவரில் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்” என்றார்.
வியாபாரி மௌனமானான்.
பின்னர் நீதிபதி அவனிடம் ஒரு எளிய கேள்வி கேட்டார்:
“என் நண்பா, உன் பாக்கெட்டில் இன்னும் இரண்டு அளவுகோல்கள் இருக்கிறதா?”
இந்தக் கதை நம்மை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல; அது நம்மை சுய ஆய்வுக்கு அழைக்கிறது. நம் இதயங்களில் நாம் அடிக்கடி சுமந்து செல்கின்ற இரட்டைத் தரநிலைகளை அது வெளிச்சத்தில் காட்டுகிறது.
நம்மை நாம் ஒரு மென்மையான அளவுகோலால் அளக்கிறோம்; பிறரை அளக்கும்போது கூர்மையான, இரக்கம் இல்லாத அளவுகோலைப் பயன்படுத்துகிறோம்.
நமது தவறுகளுக்குப் போது காரணங்களைச் சொல்லி மன்னித்துக் கொள்கிறோம், தீர்ப்பைத் தளர்த்துகிறோம், அல்லது முற்றிலும் கவனிக்காமல் விடுகிறோம். ஆனால் பிறர் தவறும்போது உடனே கவனிக்கிறோம்; கடுமையான நீதியை கோருகிறோம்; சில சமயம் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறோம்.
பிறர் விழுந்தால் தீர்ப்பளிக்கிறோம்; நாம் விழுந்தால் அதைச் சிறிதாக்கி, நியாயப்படுத்தி, மறந்து விடுகிறோம்.
மனவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட், இதைத் தனது உளவியல் கோட்பாட்டில் Projection (பிரதி ஒப்புமை) என்று விளக்குகிறார். நாம் ஒப்புக்கொள்ள விரும்பாத, அல்லது காண மறுக்கும் நமது குறைகளை, பிறரிடத்தில் காண்பதே இது.
நாம் நம்முள் எதிர்கொள்ள மறுக்கும் பாவங்களை, பிறர்மீது சுமத்துகிறோம். இது வெறும் இரட்டை வேடம் அல்ல; இது சுயக் குருட்தனம். அதனால்தான் அந்த கிராம நீதிபதி சொன்னார்:
“நீ மற்றவரில் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்.”
மலைப்பிரசங்கத்தில் இயேசு இதைத் தெளிவாகச் சொல்கிறார்:“நீங்கள் அளக்கும் அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (மத் 7:1–2).
பரிசேயனும் சுங்க அதிகாரியும் பற்றிய உவமையில், பரிசேயன் இரண்டு அளவுகோல்கள் வைத்திருந்தான்—தன்னுக்கானது சுயநீதியால் நிரம்பியது; பிறருக்கானது கண்டனத்தால் நிரம்பியது.
ஆனால் சுங்க அதிகாரி ஒரே அளவுகோலை வைத்திருந்தான்—கடவுளின் முன் தாழ்மை. அவனே நீதிமானாக்கப்பட்டான்.
பிறருக்குக் கடுமையான, இரக்கம் இல்லாத அளவுகோலைப் பயன்படுத்தினால், அதே அளவுகோல் நம்மீதும் பயன்படுத்தப்படும்.இரக்கத்தைத் தேர்ந்தெடுத்தால், கடவுளின் இரக்கம் நம்மீது நிரம்பி வழியும்.
நூற்றாண்டுகள் கடந்தும், புனிதர்கள் “இரண்டு அளவுகோல்கள்” பற்றி எச்சரித்துள்ளனர். புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் நடைமுறை ஞானத்தை அளிக்கிறார்:
“உன் அயலாரின் குறைகளைப் பார்க்கும்போது, நீயும் பலவீனமானவன்; தவறுகளுக்கு உட்பட்டவன் என்பதை நினை. அப்போது நீ விரைவில் தீர்ப்பளிக்க மாட்டாய்; மாறாக மென்மையுடனும் கருணையுடனும் நடப்பாய்.”
எல்லா புனிதர்களும் கிறிஸ்துவின் போதனையை ஒலிக்கச் செய்கிறார்கள்:தீர்ப்பின் கடுமையான அளவுகோலை விட்டு, கருணையின் அளவுகோலை எடுத்துக்கொள்.
நீதிபதி கேட்ட கேள்வி உங்களுக்குக் கேட்கப்படுகிறதா?
நேர்மையாக இருங்கள்—இப்போதே பதில் சொல்லுங்கள்.
சில எளிய உதாரணங்களைப் பாருங்கள்:
நாம் தாமதமாக வருவது போக்குவரத்து காரணம்; பிறர் தாமதமாக வந்தால் “பொறுப்பற்ற தன்மை”.
நாம் இடையில் பேசினால் அது ஆர்வம்; பிறர் பேசினால் அது மரியாதையின்மை.
நமது கடுமையான வார்த்தைகள் “தேவையான நேர்மை”; அதே வார்த்தைகள் பிறரிடமிருந்து வந்தால் “அவமரியாதை”.
நம் தவறுகளுக்கு மன்னிப்பு எதிர்பார்க்கிறோம்; ஆனால் பிறரை மன்னிக்க தயங்குகிறோம்.
ஸ்டீபன் கோவி இதைச் சிறப்பாகச் சொன்னார்:
“நாம் நம்மை நம் நோக்கங்களின் அடிப்படையில் மதிப்பிடுகிறோம்; பிறரை அவர்களின் நடத்தையின் அடிப்படையில் மதிப்பிடுகிறோம்.”
நீதிபதியின் முன் மௌனமாக நின்ற வியாபாரியை நான் மீண்டும் நினைக்கிறேன். அதே மௌனத்திற்குள் தான் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் முன் நுழைய வேண்டும்.
தாழ்மை தான் இரண்டு அளவுகோல்களைச் சுமப்பதற்கான மருந்து.
இயேசு தீர்ப்புக்கான பொன்னியமத்தை அளிக்கிறார்:
“நீங்கள் அளக்கும் அளவின்படியே உங்களுக்கும் திரும்ப அளிக்கப்படும்” (லூக் 6:38).
அவர் நம்மை பெருமையின் பொய்யான அளவுகோலை விட்டு, இரக்கத்தின் உண்மையான அளவுகோலை எடுத்துக்கொள்ள அழைக்கிறார்.
உங்களிடம் இன்னும் இரண்டு அளவுகோல்கள் இருப்பதை உணர்ந்தால் மனம் தளர வேண்டாம். ஆன்மீக வளர்ச்சி விழிப்புணர்விலிருந்தே தொடங்குகிறது.
உள் அளவுகோலும் வெளி அளவுகோலும் ஒன்றுபடும் போது, நாம் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். ஆய்வுகள் கூறுகின்றன: மன்னிப்பும், அனுதாபமும், கருணையுடன் தீர்ப்பளிப்பதும், உறவுகளை ஆரோக்கியமாக்கி, மனஅழுத்தத்தை குறைத்து, உணர்ச்சி வலிமையை அதிகரிக்கின்றன.
தீர்ப்பிற்கு பதிலாக புரிதலைத் தேர்ந்தெடுக்குங்கள்.
காரணங்களை விட பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இரட்டைத் தரநிலைகளை விட்டு இரக்கத்தைத் தழுவுங்கள்.
ஏனெனில் இறுதியில், ஒரே ஒரு உண்மையான அளவுகோல்தான் உள்ளது—
கடவுள் பயன்படுத்தும் அளவுகோல்: உண்மையுடன் சமநிலையாக்கப்பட்ட இரக்கம்.
அதன்படி நாம் வாழும்போது, நமது இதயங்களை மட்டும் அல்ல, பிறரையும் மாற்றத் தூண்டுகிறோம்.