பாராட்டு | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

"என் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் படிப்பில் தங்கள் கவனத்தையும், நேரத்தையும் செலவழிப்பதைவிட, வகுப்பறையைச் சுற்றி சுற்றி வருவதிலும், விளையாடுவதிலும் நேரத்தைச் செலவழிக்கிறார்கள்" என்று ஓர் ஆசிரியை குற்றம் சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டினை ஆய்வு செய்யும் பொருட்டு இரு உளவியல் அறிஞர்கள் வகுப்பறையின் பின்புறம் காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் சிறு கடிகாரத்தினை வைத்து, ஆசிரியர் மற்றும் குழந்தைகளின் நடத்தையைக் கண்காணித்தனர்.

ஒவ்வொரு 10 நொடியிலும் எத்தனை குழந்தைகள் தங்கள் இருக்கையைவிட்டு எழுந்து பிற செயல்களில் ஈடுபட்டனர் என்பதைக் குறிக்கத் தொடங்கினர். 20 நிமிடங்கள் அடங்கிய அந்தப் பாடவேளையில் ஏறக்குறைய 360 முறை குழந்தைகள் தங்கள் இருக்கையினின்று எழுந்துள்ளனர். அதே பாடவேளையில் ஆசிரியரும் 7 முறை 'உட்கார்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.

மற்றோர் ஆய்வில் அதே உளவியல் அறிஞர்கள் அந்த ஆசிரியரிடம், 'உட்கார்' என்ற சொல்லை அடிக்கடி கூறும்படிச் சொன்னார்கள். அதன்படி அந்த ஆசிரியர் அதே 20 நிமிடப் பாடவேளையில் ஏறக்குறைய 27 முறை அவ்வார்த்தையைப் பயன்படுத்தினார். இம்முறை மாணவர்கள் 540 முறை தங்கள் இருக்கையினின்று எழுந்துள்ளனர். அதிகப்படியான கட்டுப்பாடு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அருள்பணி அ பவுல்ராஜ், கூ..
வேறு முறையான அணுகுமுறையில் மூன்றாம் முறை ஆய்வு செய்தனர். இம்முறை ஆசிரியர் கட்டளைபோட்டு கட்டுப்பாடு விதிப்பதற்குப் பதில், பாராட்டுச் சொற்களைச் சொல்லும்படி செய்தனர். விளைவு, மாணவர்கள் நன்னடத்தையுள்ளவர்களாகவும், வகுப்பறைச் சூழலை மதிப்பவர்களாகவும் மாறினர்.

பல பாராட்டப்படாததால் பல குழந்தைகள் தளிரிலேயே கருகிப் போன கதைகளும் உண்டு, பாராட்டு பலவீனமான கால்களுக்குப் பலமாகும். குறைகளைப் பற்றி நிறையப் பேசினால் திறமைகள் அங்கீகரிக்கப்படாமல் விலாசமில்லாமல் போய்விடுகிறது. நிறைகளைப் பற்றி நிறையப் பேசினால் சிரிப்பும், மகிழ்வும், வளர்ச்சியும் பெருகும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினருக்கும் பொருந்தும்.

அடிசுடும் பாலைவனமும் - பசுந்தளிராகும்
சுடும் மண்ணும் -ஆறிப்போகும்