யோகா? ஆஹா! | Emalda

2015 ம் வருடம் இதே நாளில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வத் துடன் வயது வித்தியாசம் இல்லாமல் யோகா செய்தனர். மக்களோடு மக்களாக மக்களின் பிரதிநிதி பாரதப் பிரதமர் மோடி அவர்களும் யோகாசனம் செய்து யோகாவின் மேன்மையை நாடறியச் செய்தார். இந்தப் பரபரப்பு ஏற்பட்டு ஒரு வருடமாகிறது. யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது. இனி என்ன செய்யலாம்? கட்டாயம் தினந்தோறும் யோகா கற்றுக் கொண்டு தொடர்ந்து யோகாசனம் செய்யலாம். ஏன் யோகா செய்ய வேண் டும்? நம் வாழ்நாளை கூட்டித் தரும் உடல் உரம் பெறும். நோய்களை விரட்டும். முதுமையை தள்ளிப்போடும் இளமையைத் தக்க வைத்து தரும் அயராமல் பணியாற்ற துணை செய்யும் உடலை மட்டுமல்ல. உடல் உள் உறுப்புக் களான இதயம், நுரையீரல், கிட்னி கணையம், எலும்புகள், நரம்புகள் நன்கு செயல்பட வைக்கும். இது அத்தனையும் நாம் காலை, மாலை இரு வேளை பத்தில் இருந்து அரை மணி நேரம் யோகா செய்வதால் கிடைக்கிறது.

அடேங்கப்பா! என்று சொல்லத் தோன்றுகிறதா? உண்மைதான். உடலை உறுதிப்படுத்துவதுடன் உடலை நம் இஷ்டப்படி வளைக்கவும் செய்ய முடியும். யோகாசனம் என்பதை முறைப்படி கற்றுக் கொண்டு, முறையாக தினந்தோறும் செய்ய வேண்டும்.

பெண்கள் யோகாசனம் செய்யலாமா என்று ஒரு சிலர் கேட்கலாம். கட்டாயம் பெண்களின் உடல் வாகு யோகா செய்யும் அமைப்பிலேயே உள்ளது. கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டு எப்போதெல்லாம் செய்யலாம் என்று குறித்துக் கொண்டு செய்தால் பல வகைகளில் யோகாசனம் பெண்களுக்குப் பயன்படும்.
மாதவிடாய் நேரத்திலும், கர்ப்பமான முதல் மூன்று மாதங்களிலும், இதய நோய் மற்றும் முதுகுவலி, ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் காலங்களிலும் முறையான பயிற்சியாளரின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு யோகாசனம் செய்யலாம். குறிப்பாக யோகாசனம் செய்யும் பெண்களுக்கு எனர்ஜி அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இன்றைய காலகட்டத்தில், பரபரப்பான சூழலில் அமைதியைத் தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம். மனிதர்களோடு கூடிய தொடர்புகள் குறைந்து.. இயந்திரங்களோடு உறவு அதிகரித்து வருகிறது. ஸ்விட்ச் போட்ட மாதிரி எத்தனை நாளைக்கு ஓடிக்கொண்டு இருப்பது?

மனதைக் கவனிக்க வேண்டாமா? மனதை ஒருநிலைப் படுத்தினால் தியானம் கைகூடும். தியானத்தையும், யோகாவையும் இணைத்தால்... ஆஹா....! உடலும், மனமும் ஒருங்கே புத்துணர்ச்சி பெறும். நோயற்ற வாழ்வும், குறையாத வயதும், குன்றாத இளமையும் பெற ஒரே வழி யோகாசனத்தை பயின்று அதை தினமும் பயிற்சியாக மேற்கொள்வதுதான்.

இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக சிறு தானியங்கள் உண்ணவும், இயற்கை காய்கறிகளை வாங்கவும், வாக்கிங் போகவும் உடல் நலம் பேண என்ன வழி என்றெல்லாம் விசாரிக்கவும் ஆரம் பித்திருக்கிறோம். அப்படியே சற்றே பின்னோக்கி போய் 2000 வருடத் திற்கு பழமையான யோகாவின் மேல் காதலை வளர்த்தால் போதும் என்றும் இளமையுடன் இருக்கலாம். மருத்துவமனை செலவு குறையும். உடல் உள் உறுப்புக்கள் நம்மிடம் முணுமுணுக்காது. மருந்து மாத்திரைகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். மாத்திரை களினால் சைடு எஃபைக்ட் ஏதும் வந்துருமோன்னு பயப்பட வேண் டாம். முக்கியமாக நம் வயதுத் தோழிகள் மத்தியில் தொந்தி, தொப்பை விழாமல் மூட்டு வலியில் முகம் சுளிக்காமல், சுகர், பிரஷர் பத்தி பேசாமல். மானாட்டம், தங்க மயிலாட்டம் என்று சரோஜா தேவியம்மா ஆடிட்டே வருவாங்களே... அதுபோல புள்ளி மான்போல துள்ளித் திரிந்தால்... அடடா... அப்பா கேட்பாங்க. இது எப்படிம்மா என்று? அப்போது சொல்லுங்க. இது யோகா ரகசியம் என்று! கட்டாயமாக யோகாப் பயிற்சியை பயின்று யோகா செய்து இளமையைக் கைப்பற்றுங்கள்!

எழுத்து 

இமெல்டா 

 

 

இந்த பதிவு 'இருக்கிறவர் நாமே' புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இது போன்ற மேலும் பல பதிவுகளுக்கு,

ஆசிரியர்,

இருக்கிறவர் நாமே

[email protected]

என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.