உலக நடுக்குவாத நோய் தினம் | April 11


        நடுக்குவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே உலக பார்கின்சன் நோய் தினம் உலகம் முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinsons Disease) என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய்.     பார்க்கின்சன் நோய் வருவதற்கான காரணம் இதுதான் என மருத்துவ உலகில் உறுதியாக ஏதும் பட்டியிலிடப்படவில்லை. மூளையில் உள்ள நரம்பணுக்களில் ‘டோபமைன்’ (Dopamine) எனும் வேதிப்பொருள் ஒன்று சுரக்கிறது. இதை Happy Chemical என்கின்றனர். வயதாகும்போது நரம்பணுக்களின் எண்ணிக்கை குறையும். அப்போது ‘டோபமைன்’ சுரப்பும் குறையும். இவற்றின் விளைவாக வருவதுதான் ‘பார்க்கின்சன் நோய்’ என்பது பொதுவான விளக்கமாக உள்ளது. ஆனால், ‘டோபமைன்’ சுரப்பு 80 சதவீதம் குறைந்த பிறகே இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. 1817 இல் லண்டன் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்சன் இந்த நோயை முதன்முதலில் கண்டுபிடித்தார். அதன், காரணத்தால் இந்தப் பெயரில் இந்நோய் அழைக்கப்படுகிறது.
        பர்க்கின்சன் உண்டானவர்களுக்கு அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். மயக்கம், நடுக்கம் ஏற்படும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும்போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும். பார்க்கின்சன் நோயை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தலாம். பார்க்கின்சன் நோய்க்கான மருந்துகளின் பக்கவிளைவுகள் நோயைவிட அதிக பாதிப்பைத் தரக்கூடும் என்று சொல்லப்படுவதால், மருத்துவரின் சரியான வழிகாட்டுதலுடன் அவற்றை எடுத்துவரவேண்டும். ஆரம்பத்திலேயே நடைப்பயிற்சி, இயன்முறை சிகிச்சை மூலம் உடல் தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
        தசை இறுக்கங்கள், சோர்வு, மறதி, அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம் எனத் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட ஒருவரால் நகைச்சுவைக்கு சிறு புன்னகையைத்தான் உதிர்க்க முடியும். ஆனால், அந்த நபருக்கு அப்புன்னகையை உறுதி செய்வது உற்றார் உறவினரின் கடமை. பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பமும் நட்பும் காட்டும் அன்பும் பொறுமையும்தான் அவர்களுக்கான மருந்துகளுடன் மிக முக்கியமான பக்கபலமாக இருக்கும்.

Add new comment

1 + 3 =