ஆவலோடு

இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

லூக்கா 19-5.

அன்பு சகோதரமே, இந்த நிகழ்ச்சியில் சக்கேயு ஆண்டவரை பார்க்க ஆவலோடு செல்கிறார். இன்று எப்படியும் இயேசுவை  பார்த்து விட வேண்டும் என்று நினைக்கிறார். 

குள்ள மனிதர் அவருக்கு அவ்வளவு பெரிய கூட்டத்தில் பார்க்க முடியாது என்பதால் அத்தி மரத்தின் மீது ஏறுகிறார்.  அதை செயல்படுத்துகிறார்.

வேறு எதுவும் அவர் இயேசுவிடம் எதிர்பார்க்க வில்லை.  ஆண்டவருக்காக காத்திருக்கிறார்.  

அவர் விருப்பத்தோடு இதை செய்தார். பத்தோடுபதினொன்று .அத்தோடு நானும் ஒன்று என்று அவர் நடந்து கொள்ளவில்லை . சக்கேயு மக்களால் வெறுக்கப்பட்டவர். பாவி என ஒதுக்கப்பட்டவர்.  ஆனால் ஆண்டவரை பார்க்க விருப்பம் கொண்டார். செயல்படுத்தினார்.  காத்திருந்தார்.  

ஆண்டவர்  அவருடைய விருப்பத்தையும்,  செயல்பாட்டையும், காத்திருத்தலையும்  அறிந்தார். அவரை அண்ணாந்து பார்த்து என விவிலியத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அளவு சக்கேயு ஆண்டவர் பார்வையில் உயர்ந்து நின்றார்.  அந்த பெரிய கூட்டத்தில் ஆண்டவர் அவருடைய வீட்டுக்கு  சென்று தங்க விரும்புகிறார்.  அவருக்கு தேவையான பாவ மன்னிப்பையும் மீட்பையும் கொடுக்கிறார். 

நாமும் ஆண்டவரை பார்க்க ஆவலோடு காத்திருப்போம். அவரும் நம்மோடு வந்து தங்குவார்.   நம் தேவை என்ன என்று அறிந்து நமக்கு தருவார். நம்மிடம் உள்ள குறைவை நிறைவாக்குவார்.   

 

ஆண்டவரே நான் உம்மை நேசிக்கிறேன். உம் அன்பை முழுவதுமாக சுவைக்க விரும்புகிறேன். அதற்கு தடையாக இருப்பவற்றை என்னை விட்டு அகற்றும். உம்  கண்களில் விலை மதிப்புள்ள பிள்ளையாக நான் இருக்க செய்யும். பாதுகாத்தருளும்.  ஆமென்.