ஒருவர் ஒருவருக்காக இறைவேண்டல் செய்வதே நமது முதல் கடமை என்பதை உணர்ந்து, பேதுருவின் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இந்த கத்தோலிக்கத் திருஅவையில் தொடர்ந்து நம் பங்கை ஆற்றுவோம். கூட்டு ஒருங்கியக்கப் பயணம் (synodality) நமது கொள்கை பயணம் என்பதற்கு முன்னுரிமை அளிப்போம்.
‘நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்’ (எசா 1:27) என நமக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. எனவே, ‘வாழ்வு’ என்பது ஆண்டவர் கையில் அல்ல... நம் கையில் உள்ளது.
நமது சகோதரத்துவ உறவை அன்பியங்களில் அல்லது அ.தி.ச.-வில் வெளிப்படுத்தாமல் ஒதுங்கிப்போனால், நாம் தூய ஆவியாருக்கு எதிராகப் பாவம் செய்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.
நமது நோன்பு:
1.நம்மை கடவுளோடு ஒன்றிக்க வேண்டும் (இறைவேண்டல்);
2.நமக்குள் அமைதி கொண்டு வரவேண்டும் (நோன்பு);
3.மற்றும் பிறரோடு நம்மை ஒன்றிக்க வேண்டும் (தர்ம செயல்கள்)
தவக்காலத்தில் பழையன கழிதல் வேண்டும். இல்லையேல் அனுசரிக்கும் தவக்காலம் பொருளற்றது. இந்த தவக்காலத்தில் நமது தேடல் வழக்கத்திற்கு மாறாக, பெரிதாக இருக்க வேண்டும். ஏனெனில், ‘நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ (யோவான் 15:8) என்கிறார் இயேசு.
உள்ளத் தூய்மையின் மேன்மையை எடுத்துரைத்த ஆண்டவரே, உலகம் சாராத உம் சீடராக வாழ, தூய எண்ணத்தால் எனது சொல், செயல் அனைத்தும் நீர் தந்த ஞானத்தின் வெளிப்பாடாக இருக்க தூய ஆவியார் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.
எருசலேம் ஆலயத்தை தமது உறைவிடமாகக் கொண்ட ஆண்டவரே நமது இல்லத்தின் தலைவராக இருந்திட வேண்டும். ‘ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்’ (திபா 127:1) என்பதை நாம் உணர வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் இயேசுவை தேடி ஓடி வந்த கூட்டம் பல நன்மைகளைப் பெற்றது. அவ்வாறே, இயேசுவை மையமாகக் கொண்ட அன்பியத்தை நாடிச் செல்வோருக்கும் பல நன்மைகள் கிட்டும் என்பதில் ஐயமில்லை.