வேர்கள் விழுதுகளாய்! | அருட்சகோதரி பிரைடா SSAM | Veritas Tamil

வேர்கள் விழுதுகளாய்!
வானம் போல் பரவி கிடக்கும் வயல் பகுதியில், ஆழம்மரம்  போன்று அகன்று விரிந்த வீடு அது. தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, 4 பேரப்பிள்ளைகள் என வாண்டுக்கூட்டங்கள் நிரம்பி மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். பாட்டிக்கும் தாத்தாவுக்கு மிகுந்த சந்தோஷம். பேரப்பிள்ளைகளின் சிரிப்பொலி, அவ்வபோது வரும் சிறுசிறு சண்டைகள், இரவுநேர கதைகள் என எல்லாம் நன்றாய் சென்றுக் கொண்டிருந்தது. பேரப்பிள்ளைகள் அம்மா அப்பாவை விட பாட்டி தாத்தாவிடம் அதிகமாக பாசம் கொண்டு வளர்ந்து வந்தார்கள். 


பிள்ளைகளின் உயர்படிப்பு, அப்பா அம்மாவின் பணியிட மாற்றம் என ஆலமரத்தின் வேர்கள் பிரிந்து சென்றன. மாதம் ஒரு முறை சொந்த ஊருக்கு வருவதே கடினமாகி விட்டது. முதுமையால் தாத்தா பாட்டியாலும் அங்கு செல்ல முடியவில்லை. பேரப்பிள்ளைகள் தாத்தா பாட்டியிடமிருந்து பிரிந்து வந்ததால் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டனர். கடைக் குட்டி கலா தொடர்ந்து நோய்வாய்ப்பட்டால். பல மருத்தவர்களை பார்த்தும் பயனெதுமில்லை. 


ஒரு நாள் இரவு அனைவரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் போது மெல்லிய குரலில் ஒரு முணகல் சப்தம் கேட்டது.   கலாவோ பாட்டி… பாட்டி… என்று   முணகிக்கொண்டே இருந்தால். அன்றுதான் புரிந்தது மகள் நோய்வாய்ப்பட்டதன் காரணம். விடிந்ததும் குழந்தையை தூக்கிகொண்டு தாத்தா பாட்டியின் விட்டிற்கு சென்றோம்.  குழந்தை நன்றாக சிரித்து ஆரோக்கியமாக இருந்தது. 


நமது வாழ்விலும் தாத்தா பாட்டியின் அன்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். நம்மில் பலருக்கு அம்மா அப்பாவை விட  தாத்தா பாட்டியை மிகவும் பிடிக்கும்.  காரணம், அவர்கள் நம்மீது கொண்ட அன்பு. பெற்றோர் யார் என்றே தெரியாத குழந்தைகளும் நம் சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்களின் உலகமும் உறவும் தாத்தா பாட்டிகளே. 


இது ஒருபுறம் இருக்க,  நமக்கு தாத்தா பாட்டி என்ற ஓர் உறவு இருந்திருந்தால் நலமாக இருந்திருக்குமே என்று ஏங்குவோர்  பலரும் இருக்கத்தான் செய்கிறோம். தாத்தா பாட்டிகள் வெறும் மனிதர்கள் மட்டுமல்ல, அவர்கள் அனுபவமிக்க பொற்களஞ்சியங்கள். அவர்களிடம் சொத்துக்கள்  இல்லாமல் இருக்கலாம், ஆனால் சொர்க்கத்தின் அத்தனை பொக்கிஷங்களும் அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றன.

வாழ்வில் வரும் இன்பத்தையும் சாவல்களையும் சந்திக்க அவர்களின் அன்பான தொடுதலும், தலைசாய்ந்துக் கொள்ள மடியும் இருந்தால் போதும். வாழ்வில் சரிந்து விழாமல், கால் ஊன்றி நடக்க. எனவே நம் குடும்ப வேர்களைவிட்டு பிரிந்து வாழ்வதை விட, தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்போம். தொடரட்டும் வேர்களோடு உள்ள உறவு.   

எழுத்து

அருட்சகோதரி பிரைடா SSAM