ஆசியாவில் பிளவுகளை அல்ல, பாலங்களை அமைக்கவே திருஅவை அழைக்கப்படுகிறது – கர்தினால் டேவிட் | FABC | Veritas Tamil
ஆசியாவில் திருஅவையின் பணி பாதுகாப்புச் சுவர்களுக்குப் பின்னால் ஒதுங்கிச் செல்வதல்ல; மாறாக, பிளவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே உரையாடலின் பாலங்களை அமைப்பதே அதன் அழைப்பாகும் என்று கர்தினால் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் வலியுறுத்தினார்.
ஜூலை 20 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12வது நிறைவிறுதிப் பேரவையின் தொடக்கச் செய்தியாளர் சந்திப்பில் அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
ஆசியாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக வாழும் சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் டேவிட், சிறுபான்மையினராக இருப்பது ஒரு பலவீனம் அல்ல; மாறாக, உரையாடல், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் வழியாக நற்செய்திக்குச் சாட்சியாக வாழும் வாய்ப்பாக அதைப் பார்க்க வேண்டும் என்றார்.
விரோதமான சூழல்களுக்கு நாம் அளிக்கும் பதில் பாதுகாப்புச் சுவர்களைக் கட்டுவது அல்ல; உரையாடலின் பாலங்களைக் கட்டுவதுதான்," என்று பிலிப்பைன்ஸின் கலூகான் மறைமாவட்ட ஆயரும் FABC-யின் துணைத் தலைவருமான கர்தினால் டேவிட் கூறினார்.மேலும் அவர்,நாம் பாலம் கட்டுவோராக இருக்க வேண்டும் என்று கூறும்போது, பிளவுகள் இருப்பதால்தான் பாலங்கள் தேவைப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆசியாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவ சமூகங்கள் சிறிய மந்தையாக, பிளவுகளும் பதற்றங்களும் நிறைந்த சூழலில் வாழ்கின்றன என்றார்.
இந்தக் கருத்துகள், "ஒன்றிணைந்த பயணத்திற்கான அழைப்பும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் கட்டுவோராகவும் செயல்படும் திருப்பணியும்" என்ற பொதுப்பேரவையின் மையக் கருப்பொருளை பிரதிபலிக்கின்றன.
ஜூலை 20 முதல் 26 வரை நடைபெறும் இந்தப் பேரவையில், FABC-யின் 22 உறுப்பு ஆயர் பேரவைகள் மற்றும் மறை ஆட்சி அமைப்புகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் பங்கேற்று வருகின்றனர். கர்தினால் டேவிட், இந்தக் கருப்பொருள் வெறும் இலட்சியக் கண்ணோட்டத்தில் உருவாக்கப்பட்டதல்ல; மாறாக, ஆசியாவின் வாழ்வியல் உண்மைகளில் இருந்து உருவானது என்று குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், மக்களைப் பிரிப்பதற்குப் பதிலாக அவர்களை ஒன்றிணைக்கும் சந்திப்புகளை உருவாக்கும் திருப்பணிக்கே திருஅவை அழைக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார்.
கர்தினால் டேவிட் கருத்துப்படி, உரையாடல் என்பது கருத்து வேறுபாடுகளை அழித்துவிடுவதல்ல. மாறாக, ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் மதித்து, நம்பிக்கைகள், கலாச்சாரங்கள் மற்றும் பாரம்பரியங்கள் வேறுபட்டிருந்தாலும் பொதுநலனை நோக்கி இணைந்து செயல்படுவதிலிருந்தே உண்மையான உரையாடல் தொடங்குகிறது.
சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவ சமூகங்களுக்குக்கூட, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், சமய மற்றும் கலாச்சார எல்லைகளைத் தாண்டிய உறவுகளை வலுப்படுத்துவதிலும் தனித்துவமான பங்கு உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
FABC-யின் 12வது பொதுப்பேரவை ஜூலை 26 வரை தொடர்ந்து நடைபெறுகிறது. ஜெபம், திருப்பலி, ஆவியில் உரையாடல் (Conversations in the Spirit), பிராந்தியக் கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டு ஆன்மிகப் பகுத்தறிதல் ஆகிய நிகழ்வுகளின் வழியாக, ஆசியா முழுவதும் ஒற்றுமைப் பயணத்தை (Synodality) நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதோடு, ஒன்றிப்பு, பங்கேற்பு மற்றும் திருப்பணி ஆகியவற்றில் திருச்சபையின் பணியை மேலும் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
கர்தினால் டேவிட்டின் செய்தி, இந்தப் பேரவையின் முக்கியமான உண்மையை மீண்டும் வலியுறுத்துகிறது:ஆசியாவில் திருச்சபையின் நம்பகத்தன்மை அதன் எண்ணிக்கையாலோ அல்லது செல்வாக்காலோ அளவிடப்படாது; மாறாக, அமைதி, பரஸ்பரப் புரிதல் மற்றும் நம்பிக்கையைத் தேடும் சமூகங்களில் பாலம் கட்டுவோராக மாறத் தயாராக இருக்கும் அதன் மனப்பான்மையாலேயே அளவிடப்படும்.
