இறைவனின் அருளை எடுத்துரைக்கும் கதைகளாக திருஅவையின் பயணம் அமையட்டும்! | FABC | Veritas Tamil

"ஒன்றிணைந்த பயண மாமன்றத்தின் (Synod on Synodality) அமலாக்கக் கட்டத்திற்கு கத்தோலிக்க திருஅவை அடி எடுத்து வைக்கும் இந்நேரத்தில், உள்ளூர் திருஅவைகள் வெறும் நிர்வாக அறிக்கைகளை மட்டும் தயார் செய்யாமல், தங்களது சமூகங்களில் இறைவன் எவ்வாறு செயல்படுகிறார் என்பதற்கான சாட்சிய வாழ்வையும் கதைகளையும் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்."

ஜூலை 24 அன்று ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் முலியாவின் வாண்டா அறையில் நடைபெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-ஆவது பொதுக்கூட்டத்தில், ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலகத்தின் ஆலோசகரான அருட்தந்தை ஜியாகோமோ கோஸ்டா, SJ வழங்கிய உரையின் முக்கியச் செய்திகளில் இதுவும் ஒன்றாகும்.

ஆசியா முழுவதிலுமிருந்து வந்த ஆயர்கள் மற்றும் திருஅவைத் தலைவர்களிடம் உரையாற்றிய அருட்தந்தை கோஸ்தா, ஆயர் மாமன்றத்தை நடைமுறைப்படுத்தும் செயல்முறை, திருஅவையின் வாழ்வனுபவத்தை இறைவேண்டலுடன் சிந்தித்துப் பார்ப்பதில் நிறைவடைய வேண்டும் என்றார். இதன்மூலம், தங்களது சமூகங்களின் நடுவில் தூய ஆவியானவர் ஆற்றிவரும் பணியை இறைமக்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

செயல்பாடுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப அறிக்கைகளை மறைமாவட்டங்கள் தயாரிக்க வேண்டும் என்று கூறுவதற்குப் பதிலாக, அவர்கதைவடிவ அறிக்கை” (narrative report) என்று அழைத்த ஒரு முறையை முன்மொழிந்தார். அதாவது, உள்ளூர் திருஅவையின் வாழ்வில் இறைவனின் அருள் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை எடுத்துரைக்கும் சிந்தனைப் பதிவாக அது அமைய வேண்டும்.

நாம் என்ன செய்தோம் என்பது மட்டுமே முக்கியமான கேள்வி அல்ல; நம் நடுவில் இறைவன் என்ன செய்து வருகிறார் என்பதே முக்கியமான கேள்வி,” என்று அவர் விளக்கினார்.

இந்த அணுகுமுறையை விளக்குவதற்காக அருட்தந்தை கோஸ்தா திருவிவிலியத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார். மோசே, ஆண்டவர் தம்மைக் கடந்து சென்ற பின்னரே அவரை உணர்ந்தார். அதேபோல், எம்மாவுஸ் வழியில் சென்ற சீடர்கள், தங்களுடைய பயணத்தைப் பின்னோக்கிப் பார்த்து, தங்களது உள்ளங்கள் தங்களுக்குள் எரிந்துகொண்டிருந்ததை உணர்ந்த பின்னரே உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடனான தங்கள் சந்திப்பைப் புரிந்துகொண்டனர்.

இந்த விவிலிய நிகழ்வுகள், இறைவேண்டலுடன் கூடிய நினைவுகூரலின் வழியாகவே விசுவாசிகள் பல நேரங்களில் இறைவனின் பிரசன்னத்தை உணர்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன என்று அவர் கூறினார். நற்செய்தியின் ஒளியில் தங்களது கூட்டு அனுபவங்களை ஒன்றாகச் சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் உள்ளூர் திருஅவைகளும் இதையே செய்யுமாறு மாமன்றத்தின் நடைமுறைப்படுத்தும் கட்டம் அழைப்பு விடுக்கிறது.

ஒரு சிறிய குழு, அனைவரின் சார்பாக ஒரு ஆவணத்தைத் தயாரிப்பதாகக் கதைவடிவ அறிக்கை அமையக்கூடாது என்று அருட்தந்தை கோஸ்தா வலியுறுத்தினார். மாறாக, அது சமூகமாகச் செவிமடுத்தல், இறைவேண்டல், உரையாடல் மற்றும் இறைவேண்டலுடன் கூடிய தெளிந்து அறிதல் ஆகியவற்றிலிருந்து உருவாக வேண்டும்.

ஒரு சமூகத்தினர் ஒன்றாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, வேறுவிதமாகக் கவனிக்கப்படாமல் போயிருக்கக்கூடிய அருளின் அடையாளங்களை அவர்கள் கண்டறியத் தொடங்குகிறார்கள் என்று அவர் கூறினார். மீண்டும் சீரமைக்கப்பட்ட உறவுகள், உருவாகும் புதிய பங்கேற்பு முறைகள், திருஅவைக்குள் ஆழமடைந்து வரும் நம்பிக்கை மற்றும் புதுப்பிக்கப்படும் மறைப்பணி ஆர்வம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இத்தகைய உண்மைகளை எப்போதும் எண்ணிக்கைகளால் அளவிட முடியாது. ஆனால் அவற்றை உண்மையோடு எடுத்துரைக்கும் கதைகளின் வழியாக வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அருட்தந்தை கோஸ்தாவைப் பொறுத்தவரை, கதைகளுக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் கிறிஸ்தவத்தின் இயல்பையே பிரதிபலிக்கிறது. திருஅவை கோட்பாடுகளை உருவாக்குவதற்கும் நிறுவனக் கட்டமைப்புகளை வளர்ப்பதற்கும் முன்பாக, இயேசு கிறிஸ்துவின் வாழ்வு, இறப்பு, உயிர்த்தெழுதல் மற்றும் தம் மக்களிடையே அவர் தொடர்ந்து பிரசன்னமாக இருப்பது பற்றிய கதையையே அறிவித்தது.

இறைவன் செய்தவற்றை எடுத்துரைப்பதன் வழியாகவே திருஅவை எப்போதும் விசுவாசத்தைப் பகிர்ந்து வந்துள்ளது,” என்று அவர் கூறினார். ஆயர் மாமன்றத்தை நடைமுறைப்படுத்தும் இக்காலத்தில், உள்ளூர் திருஅவைகள் இந்த மரபை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் ஊக்குவித்தார்.

ஆசியத் திருஅவைகளுக்கு இந்த முன்மொழிவு தனிச்சிறப்பான முக்கியத்துவம் கொண்டுள்ளது. ஆசியக் கண்டம் முழுவதும் கத்தோலிக்க சமூகங்கள் பல்வேறு கலாச்சார, மொழி மற்றும் சமயச் சூழல்களில் வாழ்கின்றன. ஒவ்வொரு சமூகமும் உரையாடல், சேவை, விடாமுயற்சி மற்றும் நற்செய்திக்குச் சான்றுபகர்தல் ஆகியவற்றில் தனித்துவமான அனுபவங்களைக் கொண்டுள்ளது.

இந்த அனுபவக் கதைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம், உள்ளூர் திருஅவைகள் ஒன்றுக்கொன்று வளமூட்டிக்கொள்ள முடியும். அதேவேளையில், உலகளாவிய திருஅவைக்கு தங்களுக்கே உரிய தனித்துவமான கொடைகளையும் வழங்க முடியும் என்று அருட்தந்தை கோஸ்தா கூறினார்.

ஆயர் மாமன்றம் நடைமுறைப்படுத்தும் கட்டத்திற்குள் நுழையும் நிலையில், திருஅவையின் மிகவும் மதிப்புமிக்க ஆவணங்களில் சில அதிகாரப்பூர்வ ஆவணங்களாக இல்லாமல், இறைமக்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் கதைகளாக இருக்கலாம் என்று அவர் நிறைவாகக் கூறினார். மனமாற்றம், நல்லிணக்கம், நம்பிக்கை மற்றும் விசுவாசத்தில் நிலைத்திருத்தல் ஆகியவற்றின் கதைகள், கிறிஸ்து இன்றும் தமது மக்களுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார் என்பதை வெளிப்படுத்துகின்றன.

தரவு மற்றும் செயல்திறனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் இக்காலத்தில், அருட்தந்தை கோஸ்தாவின் செய்தி ஒரு புதிய பார்வையை முன்வைக்கிறது: இறைவனின் அருள் தங்கள் சமூகங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை எடுத்துரைக்கும் அனுபவக் கதைகளின் வழியாகத் தனது நினைவுகளைப் பாதுகாத்து, ஒவ்வொரு உள்ளூர் திருஅவையிலும் உயிரோடு செயல்படும் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக விளங்கும் ஒன்றிணைந்த திருஅவையாக இருப்பதே அந்தப் பார்வையாகும்.

Tamil Survey Popup Image