இறையருளில் சுதந்திரம் -நூல் ஆங்கிலத்தில் வெளியீடு | திருத்தந்தை லியோ | Veritas Tamil

திருத்தந்தை லியோ 14-ஆம் ஆண்டவரின் “அருளின் கீழ் சுதந்திரம்” நூல் ஆங்கிலத்தில் வெளியீடு

திருத்தந்தை லியோ 14-ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு எழுதிய புனித அகுஸ்தீன் மற்றும் திருஅவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த எழுத்துகள் தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மறையுரைகள், உரைகள், செய்திகள் மற்றும் கடிதங்களை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு, அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பிருந்த அவரது சிந்தனைகளையும் ஆன்மிக உருவாக்கத்தையும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

“Freedom Under Grace: Reflections on the Spiritual Tradition That Formed Me” என்ற தலைப்பிலான இந்நூல், செப்டம்பர் 15ஆம் தேதி அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா மற்றும் பிற காமன்வெல்த் நாடுகளில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

இந்நூல் முதலில் “Liberi sotto la grazia” என்ற தலைப்பில் இத்தாலிய மொழியில் மே மாதம் வத்திக்கான் வெளியீட்டகமான LEV மூலம் வெளியிடப்பட்டது. 2001 முதல் 2013 வரை புனித அகுஸ்தீன் சபையின் பொதுத் தலைவராக இருந்த காலத்தில் ராபர்ட் பிரான்சிஸ் பிரெவோஸ்ட் எழுதிய பல்வேறு ஆக்கங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

வத்திக்கான் செய்திகள் (Vatican News) வெளியிட்ட தகவலின்படி, திருத்தந்தை லியோ,   திருத்தந்தைத் தேர்வுக்கு முந்தைய ஆன்மிக உருவாக்கத்தையும் சிந்தனைகளையும் நெருக்கமாக அறிந்துகொள்ள இத்தொகுப்பு உதவுகிறது. அகுஸ்தீன் துறவிகளான அருட்தந்தை ரொக்கோ ரொன்சானி, அருட்தந்தை மிகுவேல் ஏஞ்சல் மார்ட்டின் ஜுவரெஸ் மற்றும் அருட்தந்தை மைக்கேல் டி கிரெகோரியோ ஆகியோர் இந்நூலைத் தொகுத்துள்ளனர்.

செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் ஏற்பட்ட விளைவுகள், அரசியல் முன்னேற்றங்கள், வறுமை, புலம்பெயர்வு, அமைதி மற்றும் சமகாலச் சமூகத்துடன் திருஅவை கொண்டிருக்க வேண்டிய தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

திருத்தந்தை லியோ 14-ஆம் ஆண்டவர் தனது ஆன்மிகத் தந்தையாகக் குறிப்பிடும் புனித அகுஸ்தீனின் சிந்தனைகள் இந்நூலில் முக்கிய இடம் பெறுகின்றன. புனித அகுஸ்தீனின் ஒழுங்குமுறையில் இடம்பெறும், துறவிகள் “அருளின் கீழ் சுதந்திரமானவர்களாக” வாழ வேண்டும் என்ற அழைப்பிலிருந்தே நூலின் தலைப்பு பெறப்பட்டுள்ளது.

மே மாதம் ரோமில் நடைபெற்ற இத்தாலியப் பதிப்பின் அறிமுக நிகழ்வில், வத்திக்கான் வெளியுறவுத்துறைச் செயலாளர் கர்தினால் பியெத்ரோ பரோலின், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருடன் கிறிஸ்தவர்கள் கொண்டிருக்க வேண்டிய உறவு, அமைதி, நற்செய்தி அறிவிப்பு மற்றும் திருஅவையின் வாழ்வு குறித்த நூலின் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.

மேலும், இத்தொகுப்பில் வறுமை மற்றும் ஏழைகள் குறித்த குறிப்புகள் அடிக்கடி இடம்பெறுவதை கர்தினால் பரோலின் சுட்டிக்காட்டினார். சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை இந்தக் குறிப்புகள் பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்தார் என்று வத்திக்கான் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு மணிலாவில், செபு புனித குழந்தை இயேசு அகுஸ்தீன் மாநிலத்தின் இடைக்கால பொதுப்பேரவையின் தொடக்க நிகழ்வின்போது, அப்போது அருட்தந்தையாக இருந்த ராபர்ட் பிரெவோஸ்ட் வழங்கிய ஒரு சிந்தனையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. அதில், ஆண்ட்ரேஸ் டி உர்தனேட்டாவின் மனமாற்றத்தையும் புனித அகுஸ்தீனின் ஆன்மிக மரபையும் அவர் எடுத்துரைத்தார்.

ஆங்கிலப் பதிப்பு அமெரிக்காவில் Image Books, Penguin Random House Christian Publishing Group-இன் ஓர் அங்கமான பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் Penguin Random House UK-இன் Enlighten பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நூல் தற்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளில் உள்ள வாசகர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் வத்திக்கான் செய்திகள் வெளியிட்ட தகவலின்படி, 30 நாடுகளில் இந்நூலுக்கான மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.

மேலும், இந்நூலின் ஆடியோ பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மறையுரைகள் மற்றும் உரைகளை எம்மி விருது பெற்ற நகைச்சுவை நடிகரும் கத்தோலிக்கருமான ஸ்டீபன் கோல்பர்ட் வாசித்துள்ளார். நூலின் முக்கியப் பகுதிகளை விருது பெற்ற குரல் வாசிப்பாளரும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவருமான ஸ்காட் பிரிக் வாசித்துள்ளார்.

Tamil Survey Popup Image