ஆசிய டிஜிட்டல் மறைப்பணியாளர்கள்: இயேசுவே முதன்மைத் தாக்கம்! | Veritas Tamil

ஆசியா முழுவதிலுமிருந்து பங்கேற்றுள்ள கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், இயேசு தங்கள் வாழ்வில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் வழியாக இணையத்தில் அவர்களின் இருப்பும் பணியும் நற்செய்திக்கு உண்மையான சாட்சியாக அமைய வேண்டும் என்றும் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே கேட்டுக்கொண்டுள்ளார்.

செப்டம்பர் 10ஆம் நாள்வரை , குவேசான் நகரில் அமைந்துள்ள Radio Veritas Asia வளாகத்தின் புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அரங்கில் நடைபெற்ற முதல் ஆசிய கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர் பேரவையின் அறிமுக நிகழ்வின்போது, திரையிடப்பட்ட காணொளிச் செய்தியில் கர்தினால் தாக்லே இவ்வாறு கூறினார்.

ஆசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இப்பேரவை, செப்டம்பர் 10 முதல் 13ஆம் நாள் வரை நடைபெறுகிறது.தாக்கம் ஏற்படுத்துபவர்களிலிருந்து சாட்சிகளாக: ஆசியாவில் டிஜிட்டல் மறைப்பணிக்கான ஒன்றிணைந்த பயணம்” என்ற கருப்பொருளில் இப்பேரவை நடைபெறுகிறது.

கத்தோலிக்க டிஜிட்டல் மறைப்பணியாளர்கள், தொடர்பாளர்கள் மற்றும் சமூக ஊடகத் தாக்கம் ஏற்படுத்துபவர்கள் ஒன்றுகூடி, டிஜிட்டல் சூழலில் திருஅவையின் நற்செய்திப் பணியில் தங்களது பங்கு குறித்து சிந்திக்கவும், பயிற்சி பெறவும், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும், இணைந்து செயல்படுவதற்குமான வாய்ப்பாக இப்பேரவை அமைந்துள்ளது. குறிப்பாக இயேசுவுக்குச் சாட்சியாக இருப்பதற்காக, மற்றவர்களின் வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது சிறந்தது” என்று கர்தினால் தாக்லே அவர்கள் தெரிவித்தார்.

மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள், அதற்கு முன்பாக தாங்களே பல்வேறு மனிதர்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களால் உருவாக்கப்படுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அன்பான டிஜிட்டல் மறைப்பணியாளர்களே, உங்களை எவை மற்றும் யார் தாக்கம் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு தாக்கம் ஏற்படுத்துபவரும், மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு, தாமே ஒருவரால் அல்லது ஏதோ ஒன்றால் தாக்கம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்” என்றும் அவர் கூறினார். கிறிஸ்தவ டிஜிட்டல் மறைப்பணியாளர்களைப் பொறுத்தவரை, இந்தத் தாக்கத்தின் மையமாக இயேசு இருக்க வேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் வலியுறுத்தினார்.

இறைவார்த்தை மற்றும் தூய ஆவியின் வல்லமையின் வழியாக, இயேசு உங்கள் வாழ்விலும், உங்கள் பார்வையிலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் செபம்” என்று அவர் கூறினார். தங்கள் வாழ்வில் இயேசுவின் மாற்றும் வல்லமையை அனுபவித்தவர்களாக இருக்கும்போது மட்டுமே, டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் மற்றவர்களுக்கு உண்மையான மற்றும் நம்பகத்தன்மையான சாட்சிகளாக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் வாழ்வில் இயேசுவின் மாற்றும் தாக்கத்தை அனுபவித்திருப்பதன் வழியாக, மற்றவர்களையும் தாக்கக்கூடிய உண்மையான, நம்பகத்தன்மையான சாட்சிகளாக நீங்கள் மாறுவீர்கள்” என்று கர்தினால் தாக்லே கூறினார். நம்மை எது தாக்கியிருக்கிறதோ, அதன் வழியாகவே நாம் மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார். இயேசுவுடனான உறவை செபம் மற்றும் படிப்பின் வழியாக ஆழப்படுத்துமாறு டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

நன்றாக செபியுங்கள்; நன்றாகப் படியுங்கள்” என்று கூறிய அவர், தங்கள் வாழ்வில் ஒரு நண்பரையும், சிறந்த தாக்கத்தையும் தேடுபவர்கள் இயேசுவிடம் திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கிறிஸ்துவிடமிருந்து தாங்கள் பெற்ற ஒளியைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளாமல், அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறும் கர்தினால் தாக்லே டிஜிட்டல் மறைப்பணியாளர்களுக்கு சவால் விடுத்தார்.

இயேசுவின் பெயரால் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பதன் வழியாக, இயேசுவையும் அவரது ஒளியையும் வெளிப்படுத்துங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த அறிமுக நிகழ்வுடன் தொடங்கியுள்ள இப்பேரவையில், ஆசியாவின் பல்வேறு நாடுகள் மற்றும் பண்பாடுகளைச் சேர்ந்த டிஜிட்டல் மறைப்பணியாளர்கள் பங்கேற்று, டிஜிட்டல் மறைப்பணி தொடர்பான பயிற்சி, கலந்துரையாடல், அனுபவப் பகிர்வு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இறுதியாக, பேரவையில் பங்கேற்றுள்ள அனைவருக்காகவும் செபித்த கர்தினால் தாக்லே, “இறைவன் உங்கள் அனைவரையும், உங்கள் பேரவையையும் ஆசீர்வதிப்பாராக” என்று கூறி தனது செய்தியை நிறைவு செய்தார்.

 

Tamil Survey Popup Image