அதிகாரம் அல்ல, சேவையே கிறிஸ்தவ வாழ்வின் அடையாளம் - திருத்தந்தை பதினான்காம் லியோ

ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சான் மரினோ குடியரசு மற்றும் ரிமினிக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு பகுதியாக, ரிமினி துறைமுகத்தில் இடம்பெற்ற திருப்பலியை தலைமையேற்று வழிநடத்தினார். அத்திருப்பலியின்போது திருத்தந்தை ஆற்றிய மறையுரை.

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே,

ரிமினி திருஅவையோடு இணைந்து இந்த நற்கருணைத் திருப்பலியை நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சான் மரினோ குடியரசுக்கும், “மக்களிடையே நட்புக்கான சந்திப்பு” நிகழ்வுக்கும் சென்ற இந்தப் பயணத்தின் நிறைவாக, நம் வாழ்வுக்கு அர்த்தம் அளிக்கும் இறைமறையை நாம் கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார். பேதுரு, அனைவரின் சார்பாக, “நீர் மெசியா, வாழும் இறைவனின் மகன்” என்று அறிக்கையிடுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும், நாமும் இதே நம்பிக்கையைப் புதுப்பிக்க அழைக்கப்படுகிறோம். இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்காகத் தம் உயிரையே அர்ப்பணித்த இறைமகன்.

இயேசுவில் நாம் காண்பது, மனிதருக்குச் சேவை செய்யத் தம்மையே தாழ்த்திக்கொண்ட இறைவனின் முகமாகும். சீடர்களின் கால்களைக் கழுவிய ஆசிரியராகவும், தம் மந்தைக்காக உயிரைக் கொடுக்கும் நல்ல ஆயராகவும் அவர் விளங்குகிறார். எனவே, திருஅவையில் ஒவ்வொரு நிலையிலும் அதிகாரம் என்பது சேவையாகவே இருக்க வேண்டும். திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள் முதலில் இந்தப் பணிவான சேவையை வாழ வேண்டும். அதேபோல், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் தமது அழைப்புக்கேற்ப பிறரை அரவணைத்து, ஒன்றிணைத்து, வரவேற்று, மன்னித்து, விடுதலை செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

முதல் வாசகத்தில், அதிகாரத்தைத் தன்நலத்திற்காகப் பயன்படுத்திய செப்னாவைப் பற்றி இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். செல்வத்தையும் அதிகாரத்தையும் தனக்காகச் சேர்த்துக்கொண்டதால் அவர் தமது பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார். இதன் மூலம் நாம் ஓர் உண்மையைக் கற்றுக்கொள்கிறோம்: நம்மிடம் இருப்பவை அனைத்தும் இறைவன் நமக்கு வழங்கிய கொடைகள். அவற்றை பிறரின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். திருத்தூதர் பவுல், இறைவனின் திட்டங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவை என்று கூறுகிறார். ஏனெனில் இறைவனின் அன்பு நமது எதிர்பார்ப்புகளையும் திறன்களையும் கடந்தது. இறைவன் தூய அன்பாக இருப்பதால், நாமும் அவரது அன்பைப் பிரதிபலிக்கும் இதயத்துடன் வாழ அழைக்கப்படுகிறோம்.

ரொமான்யா பகுதி மக்கள் நேர்மை, தாராள மனப்பான்மை, நன்மை செய்தல், உழைப்பு மற்றும் பிறருக்கு உதவும் பண்பு ஆகியவற்றால் அறியப்படுகின்றனர். புனிதர்கள், பங்குத்தளங்கள், குடும்பங்கள், கத்தோலிக்க அமைப்புகள் மற்றும் பல்வேறு திருஅவை இயக்கங்களின் பணிகள் இதற்குச் சான்றாக உள்ளன. ரிமினி பலருக்கு ஓய்வையும் மகிழ்ச்சியையும் வழங்கும் இடமாக உள்ளது. ஆனால் உண்மையான ஓய்வு என்பது நம்மிடமிருந்து தப்பிப்பது அல்ல; மாறாக, நம்மையே சந்தித்து, நம் உள்ளத்தோடு ஒப்புரவாகி, இறைவனைச் சந்திப்பதாகும். எனவே, உங்கள் பகுதி உடலுக்கு மட்டுமல்ல, ஆன்மாவுக்கும் ஓய்வளிக்கும் இடமாக விளங்கட்டும்.

சோர்வுற்றவர்களையும், துன்புறுவோரையும், தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வருபவர்களையும் அன்புடன் வரவேற்போம். நமது ஆலயங்கள், இல்லங்கள் மற்றும் சேவை மையங்கள் அவர்களுக்கு அடைக்கலமாக அமையட்டும். செபம், ஒன்றிப்பு, செவிமடுத்தல், துணிவு, எளிமை, நன்றியுணர்வு மற்றும் அழகு ஆகியவை நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் வெளிப்படட்டும்.

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே, உங்கள் அன்பான வரவேற்புக்கும், நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்த பங்கேற்புக்கும் நன்றி. தூய கன்னி மரியா, புனித கவுதென்சியுஸ் மற்றும் உங்கள் பாதுகாவலர் புனிதர்களின் பரிந்துரையில் உங்களை ஒப்படைக்கிறேன்.

Tamil Survey Popup Image