பட்டாம்பூச்சி விளைவு | VeritasTamil

உலகிலுள்ள ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எங்கோ சிறகடிக்கும் பட்டாம்பூச்சியால் இங்கு பூகம்பம் ஏற்படலாம் என்கிறது பட்டாம்பூச்சி விளைவு. நம் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் தான்தனித்தியங்குவதாக கருதுகிறது. ஆனால் பல அணுக்களின் இணைஇயக்கமே நாம் என்பதுதான் உண்மை. இங்ஙனம் சிந்திக்கையில் இப்பூவுலகில் தனியாக எந்த உயிரும் இயங்குவதில்லை என்பதை உணரலாம். எல்லாம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றது. இணைந்து பயணிக்கும் திருஅவையில் நம்மை இணைந்து பயணிக்க அழைப்புவிடுக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இணைந்து பயணிக்க உறவுகள் அவசியம். உறவுகள்பற்றி இதைவிட அருமையாக ஒரு புத்தகம் எழுத முடியாதென்றமுறையில் எழுதப்பட்டிருக்கும் புத்தகமே- அணிலாடும் முன்றில். “இந்த சொந்தக்காரங்களே இப்படிதாங்கயென”, பிற சொந்தங்களை விமர்சிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ வகையில் பிறருக்கு சொந்தங்களே. நான் ஒரு நல்ல சொந்தமா? என்பதுதான் முக்கியம். 


பட்டாம்பூச்சி விற்பவனில் அறிமுகமாகிறார்- நா. முத்துக்குமார். “பாதை முடிந்தபிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையேயென” வாழ்க்கை பயணத்தை கற்றுத்தரும் ஆசான் இவர். எத்தனைமுறை சொன்னாலும் ஏதோ ஒரு கணத்தில் எங்கோ ஒரு திருப்பத்தில் நம் கண்கள் நம்மை அறியாமல் வந்த வழியை திரும்பிப் பார்ப்பதுண்டு. அந்த திருப்பத்தின் அனுபவங்கள்தான் இந்த புத்தகத்தொகுப்பு. இந்நூலை தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தைக்கும், தான் உலகிற்கு அறிமுகப்படுத்திய மகனுக்கும் அற்பணிக்கின்றார், முத்துக்குமார். நம் வாழ்வில் நாம் சந்திக்கும் முதல் உறவு அம்மா. இந்த புத்தகமும் தாயென்னும் ஆதி உறவிலிருந்தே தன் பயணத்தை தொடங்குகின்றது. சிறு வயதிலேயே தாயை இழந்த பிள்ளைகளின் உணர்வை “பிடிக்கவரும் சிறுவனின் கையில் வண்ணத்தைப் பதித்து வழுக்கிச்சென்ற வண்ணத்துப்பூச்சியாகத் உன்னுடனான எனது நாட்களுமென” தன் அம்மாவை வர்ணிக்கின்றார். அம்மா நிரந்தரமானவள். உலகம் என்பது அணுக்களால் ஆனது. நாம் ஒரு பொருளைத் தொடுகிறபோது அப்பொருளும் நம்மைத் தொடுகிறது. அம்மா விட்டுச்சென்ற அணுக்களைத தொட்டு தன் அம்மாவை உணர்கிறார் முத்துக்குமார். அப்பாவைப்பற்றி எழுதும்போது தான் படித்த புத்தகங்களிலேயே அப்பாவின் அனுபவங்கள்தான் சிறந்த புத்தகம் என்கிறார். மேலும் அக்கா இல்லாத வீடு அரைவீடு, தம்பி என்பவன் உதிரத்தின் பங்காளி, தான் உண்ட மிச்சப் பாலின் இருசியறிந்தவன், தம்பியால் அண்ணன் அப்பாவாகும் தருணங்களையும் பூரிப்போடு வர்ணிக்கின்றார். மனைவியை வர்ணிக்க திருவிவிலியத்தில் சாலமோனின் இனிமைமிகு பாடலிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்குகின்றார். ஐந்து விரல்களை தன் ஐந்து வகை மாமாக்களுக்கு உவமைப்படுத்துகின்றார். அம்மா, அப்பா, அக்கா, தம்பி, ஆயா, தாய்மாமன், அத்தை, தாத்தா, சித்தி, அண்ணன், தங்கை, பங்காளிகள், பெரியம்மா, மாமன்கள், முறைப்பெண்கள், சித்தப்பா, அண்ணி, மைத்துனன், மனைவியென வர்ணித்து வர்ணித்து, இறுதியாக தன் மகனுக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். ஒரு மகனாக அதை வாசிக்கையில் கண்களில் கண்ணீர் வடிந்தது.
உறவுகளை உணர்வோடு உணர இப்புத்தகம் உங்களுக்கும் உதவும். அணிலாடும் முன்றில் புத்தகத்தில் உள்ள உறவுகள் நம் நினைவுகளை நினைவுபடுத்தி இரத்த உறவுகளின் மதிப்பையும்  நமக்கு உணர்த்தும்.