சேவை மனம் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

யாரோ போட்ட சாலையில்தான் நாம் வாகனங்களை ஒட்டிக்கொண்டு போகிறோம்.

யாரோ கூலியாட்கள் கட்டிய வீட்டில்தான் நாம் வசதியாக வாழ்கிறோம்.

யாரோ நெய்த ஆடையைத்தான் கம்பீரமாக அணிந்து கொள்கிறோம்.

யாரோ விதைத்த தானியங்களின் விளைவைத்தான் நாம் உண்கிறோம்.


சீப்பிலிருந்து செருப்புவரை நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் யாரோ செய்ததுதான்.

சமுதாயத்திலிருந்து... சமுதாய நண்பர்களிடமிருந்து இத்தனை விஷயங்களைப் பெற்றுக் கொள்ளும் 'நாம்', நமது பங்காக எதைச் செய்கிறோம்? அன்று யாரோ செய்த நற்செயல்களால்தான் இன்று நாம் சுதந்திர இந்தியாவில் சுயமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

சமூக மாற்றத்திற்காக செய்யப்படும் இந்த நற்செயல்களே சமூக சேவை.

அமலியா ஒரு சிறந்த சமூக சேவகி. அவள் தினமும், குடியிருப்புகள் நிறைந்த அப்பகுதியில் ஐந்து தொகுதிகளைக் கடந்துதான் அவளுடைய அலுவலகம் செல்வது வழக்கம். இது அவளுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்தது. அவ்வாறு செல்லும்போது அவள் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் மக்களின் குடிசை குடியிருப்புப் பகுதியையும் கடந்து செல்வாள். ஆனாலும் ஒரு நாள்கூட அக்குடிசைப் பகுதியின்மீது அவள் பார்வையோ, கவனமோ சென்றது இல்லை. சமூக மாற்றத்திற்கான அவளுடைய பணி முழுவதும், கணினித்திரையிலும், காகிதத்திலுமே கோப்பாகக் கிடந்தது. ஆனால், அப்பகுதியில் இருந்த சிறுவன் ஜாக்கி அவளை உயர்வாக மதித்தான். அவளுக்குத் தெரியாமல் அமலியாவைப் பின்தொடர்ந்து செல்வான், அவளுடைய அலுவலகக் கதவருகில் நின்று அவள் குரலைக் கேட்பான். அவள் தான் அந்தச் சமூக சேவைமையத்தின் தலைவி என்பது அவனுக்குத் தெரியும்.

ஆனால், அமலியாவோ அவளது அலுவலகத்தில் உள்ளவர்களோ, அச்சிறுவனைப் பற்றியோ, அந்தக் குடிசை வாழ்மக்களைப் பற்றியோ விசாரித்ததில்லை. அப்படி இருப்பினும் சிறுவன் ஜாக்கிக்கு அமலியா தனக்கு உதவி செய்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. சில நாள்கள் கழித்து தனது தைரியத்தையெல்லாம் ஒன்று திரட்டி அமலியாவின் பின்னால் வந்து அவள் கையைப் பற்றி இழுத்தான்.

வெடுக்கென்று தன்கையை இழுத்துக்கொண்ட அமலியா பின்னாள் திரும்பிப் பார்த்தாள். சிறுவன் மிக தைரியமாக, "எனக்கு நீங்கள்தான் உதவவேண்டும்" என்றான்.

அமலியா என்னவென்று கேட்க, "என்னுடைய அம்மாவின் இந்தப் பிறந்தநாளுக்கு சிறந்த பரிசு ஒன்றைக் கொடுக்க விரும்புகிறேன்' என்றான். உடனே அமலியா தன் கைப்பையில் கையைவிட்டு எதையோ எடுக்க முயல அவன் தடுத்தான்.

மேலும், “எனக்கு இரண்டு வயது ஆகும்போது என்னுடைய அப்பா, என்னையும், என் அம்மாவையும் விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டார். என் அம்மா ஒரு உணவு விடுதியில் அறையைச் சுத்தம் செய்யும் வேலை செய்கிறார். சிறிது காலமாக அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை. வேலைக்கும் செல்வதில்லை. இருக்கும் குடிசை வீட்டையும் காலிசெய்யச் சொல்கிறார்கள். அம்மா மிகவும் சோர்வாகவும், சோகமாகவுமே இருக்கிறார். எங்க அப்பாவைக் கண்டுபிடித்து அவரிடம் தந்தால் மிகவும் சந்தோஷமடைவார். அதுதான் என்னுடைய சிறந்த பரிசு.

எங்க அப்பாவை, நானும் என் அம்மாவும் மிகவும் அன்பு செய்கிறோம். ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரைக் கண்டுபிடிக்க நீங்கள் தான் உதவவேண்டும்” என்று ஒரே மூச்சில் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அவனுடைய இந்தப் பேச்சு அமலியாவின் இதயத்தில் ஈரத்தை கசியச் செய்தது. அச்சிறுவனிடம், “உன் வீடு வரை என்னை அழைத்துச் செல்வாயா?" என்று கேட்டாள். வெகு மகிழ்ச்சியோடு அவளுடைய கையைப் பற்றிக்கொண்டு, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சீர்குலைந்த அந்த வீட்டிற்குள் நுழையுமுன், “அம்மா! நான்தான் ஜாக்கி வந்திருக்கிறேன். என்னுடன் யார் வந்திருக்கிறார்கள் பாருங்கள் என்றான். அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மாறாக, இருமலும், மூச்சிறைப்புச் சத்தமும் கேட்டன. அமலியா குனிந்து உள்ளே சென்று பார்த்து, தான் இதுவரை இப்பகுதியில் ஒரு சிறிய சேவைகூட செய்யவில்லையே என்ற குற்ற உணர்வுடன், அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவள் உயிர் பிழைப்பது சாத்திய மற்றதாக இருந்தது. அவள் அமலியாவின் கைகளைப் பற்றி, “என்னுடைய மகனுக்கு ஒரு வீட்டை அமைத்து அவனுக்கு, அன்பையும், பாதுகாப்பையும் தரவேண்டும்” என்று கூறி இறந்துவிட்டாள்.

மாலை வீடு வந்ததும் தன் கணவனிடம், “கடவுள் நம் வேண்டுதலைக் கேட்டார். இவ்வளவு நாள்கள் குழந்தையில்லாமல் இருந்த இந்த வெறுமையான வீட்டிற்கு ஒரு மகன் வரப்போகிறான். கடவுள் எனக்குத் தந்த சமூக மாற்றத்திற்கான பணியில் மிகப் பெரிய கொடையைத் தந்துள்ளார். அதுதான் நம் மகன்” என்று ஜாக்கியைக் காட்டினாள். மேலும், “கடவுள் எனக்கு ஒரு சிறந்த சமூக சேவை மையத்தையும் அதன் வழி சமுதாயத்திற்கு உயர்ந்த வகையில் சேவை செய்யவும் வாய்ப்பு தந்தார். ஆனால், அதனைச் சரிவர செய்யாத நிலையில், இதோ இந்த மகன் மூலம் மேலும் சிறந்த முறையில் சேவை செய்ய புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இனி என்னுடைய இந்தச் சமூகப்பணி, வெறும் கணினித் திரையிலும், காகிதக் கோப்பிலும் இல்லாமல், உயர்ந்த வகையில் இருக்கும். மக்களுக்கு செய்யும் பணி, கடவுளுக்கே செய்யும் பணி என்பதை அறிந்து கொண்டேன்” என்று தொடர்ந்து தீவிரமாக சமூக சேவை செய்யத் தொடங்கினாள். அந்தக் குடிசை வாழ்பகுதி அழகிய, தூய்மைமிகு வீடுகளாகவும், சுயவேலைவாய்ப்பு செய்யும் தளமாகவும் மாறியது.

இந்த சுதந்திர இந்தியாவில் இத்தகைய நிலை மிகவும் தேவை. நாட்டுத்தலைவர்களின் தன்னலமற்ற சேவையால் நல்லதோர் ஆட்சி கிடைத்தது. நீதி, நிலையான அமைதி, மாறாத ஒருமைப்பாடு, உண்மையான வளமை, தொலைநோக்குப் பார்வை, தளரா ஊக்கம், உயர்ந்த குறிக்கோளோடு கூடிய சேவை இவையே நம் நாட்டை உயர்த்தும். பணி செய்ய வந்த கிறிஸ்துவின் பணியில், தியாகத்தை மாதிரியாகக் கொண்டு, நாட்டு வளங்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நாம் சேவை செய்வோம். செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எங்கே தொடங்குவது? தயக்கம் தேவையில்லை. இன்றே நம் இல்லத்திலிருந்தே தொடங்குவோம். நாம் செய்ய வேண்டிய வேலையை நமக்குப் பதிலாக வேறு யாராவது செய்தால், நாம் அதிகமாக மகிழ்ச்சியடைகிறோம். அப்படித்தான் இறைவனும், சமூகத்திற்கு, சமூக மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு, இறைவன் செய்ய வேண்டிய வேலையை நம் வழியாகச் செய்கிறார். அப்படியெனில் இறைவன் செய்யும் வேலையை நாம் செய்வதால் இறைவன் மகிழ்ச்சியடைகிறார். சமூக சேவையின் உயர்ந்த நோக்கம் இதுதான்.

மனிதருக்கு செய்யும் சேவை 
இறைவனுக்கே செய்யும் சேவை.
நமது இந்தச் சேவை உவப்பு அளித்து நற்கனிகளை கொடுக்க...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட அன்னை தெரசாவையும்,

வாழும் காலத்திலேயே நீதியோடு ஏழை மக்களுக்காகப் போராடும் மிகச் சிறந்த உயர்ந்த சமூக ஆர்வலர் நேர்மைவாதி கலெக்டர் சகாயம் அவர்களையும்,

இயற்கையையும், மக்களையும், மாசணுகாமல், பாதுகாப்பாக வாழப் போராடும் உதயக்குமாரையும் பின்பற்றலாம் அல்லவா?

முடங்கியிருக்கும் நம் கைகளையும், கால்களையும் விறைப்பாக்குவோம். வாழ்க்கையின் மையப்பகுதியில் நம்மைப் பிணைத்துக் கொள்வோம். வாழும் காலத்தில் பிரபலமாகவில்லை என்றாலும், வரலாற்றுப் பக்கங்களில் வாழ்வோம்.

Tamil Survey Popup Image