அடிமைச் சங்கிலி | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
விடுதலை என்னும் வீரம் செறிந்த சொல் வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களிலும் சுய ஒழுக்கமாக உருவெடுத்திருக்கிறது. மனிதச் செயல்முறைகளின் அனைத்துத் துறைகளிலும் மிகுந்த மேன்மையை அடைவதற்குச் சுதந்திரம் அல்லது விடுதலை ஓர் அடிப்படை விதியாகக் கருதப்படுகிறது. சுதந்திரமான சூழலில்தான் ஆண், பெண், குழந்தைகள் அனைவரும் தங்கள் இயல்பான எண்ணத்தை வெளிப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுகிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த சக்திகளை முழுமையாக உணர்கிறார்கள். இவ்வாறுதான் ஆளுமை வளர்ச்சிக்கான பெரும்பகுதி உயர்ந்த நிலையை அடைகிறது. மாறாக அடிமைச்சுகம் அல்லது அடிமை நிலைமை சுயவெளிப்பாட்டினாலும், தனித்தன்மையையும் வெளிப்படுத்தத் தடையாக இருக்கிறது.
கொழுகொழுவென்று ஒரு பட்டணத்து நாய் வற்றிப்போன உடம்புடன் ஒரு கிராமத்து நாய் இரண்டும் சந்தித்துக் கொண்டன.
பட்டணத்து நாயைப் பார்த்து கிராமத்து நாய் பொறாமைப்பட்டது: "நீ மட்டும் எப்படி இப்படிக் கொழு கொழுவென்றிருக்கிறாய்?"
"என் வீட்டிலுள்ளவர்கள் எனக்கு வேளா வேளைக்கு விதவிதமான உணவு தருகிறார்கள்."
"அப்படியென்றால் வேலை ரொம்பக் கடினமோ!"
"சே... சே... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை புதிதாக யாராவது வீட்டிற்கு வந்தால் குரைக்க வேண்டும். அவ்வளவுதான்"
"வெயிலில் மழையில் அலைய வேண்டி வருமோ!'
"வெயிலா? மழையா? அப்படியென்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. நிழலிலேதான் என் வாழ்வு'
சீ... நாயே போ! என்று விரட்டமாட்டார்களா? அடித்து விரட்டமாட்டார்களா?"
"அடியா? உதையா? அதெல்லாம் எதுவுமில்லை. என்னை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும்."
கேட்டுக் கேட்டுப் பொறாமைப்பட்டது கிராமத்து நாய்.
"உன் வீட்டில் உனக்குப் போரடிக்காதா?"
"அது தெரியாதா உனக்கு? அடிக்கடி அவர்கள் உல்லாசப் பயணம் போவார்கள். என்னையும் அவர்களோடு ஏற்றிக்கொண்டுதான் போவார்கள். நான் சன்னல் வழியாக தலையை நீட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே போவேன்.''
இந்தச் சுகங்களையெல்லாம் அனுபவித்துப் பார்க்க ஆசைப்பட்டது கிராமத்து நாய்.
"என்னையும் பட்டணத்துக்கு அழைத்துப்போவாயா? நானும் உன்னுடன் வேலை செய்கிறேன்" என்றது.
பட்டணத்து நாய் தலையாட்டியவுடன், உற்சாகமாய்க் கிளம்பியது கிராமத்து நாய். இரண்டும் பட்டணத்து பங்களாமுன் போய் நின்றன.
''இதுதான் என் எஜமான் வீடு. அருகில் தெரியுதே, அதுதான் என் இடம். அங்கே
ஒரு சங்கிலி கிடந்தது. அதன் ஒரு பக்கம் கட்டப்பட்டிருந்தது.
"அது என்ன?"
"அதுதான் சங்கிலி."
“ஒரு முனை கட்டப்பட்டிருக்கிறதே..."
“ஆம், மறுமுனையைத்தான் என் கழுத்தில் கட்டி என்னைக் கட்டிப்போடுவார்கள். "
"என்ன? கழுத்தில் கட்டிப்போடுவார்களா?" அதிர்ந்து நின்றது கிராமத்து நாய்.
"பகல் முழுவதும் நான் கட்டியே கிடப்பேன். காவல் காப்பேன்" என்று பெருமையாய்ச் சொன்னது பட்டணத்து நாய்.
காறித் துப்பியது கிராமத்து நாய்.
சே..இதுவும் ஒரு பிழைப்பா? இப்படிப்பட்ட அடிமை வாழ்வும் ஒரு வாழ்வா? நீயே அனுபவி.. நான் கிராமத்துக்கே போகிறேன். அதுதான் என் சுதந்திர வாழ்வு" என்றது.
அடிமைத்தனத்துக்கு
அடியிலே அறியாமைச் சுகங்கள். அகவிடுதலையற்ற புறவிடுதலை வீணிலும் வீண்.
பெரும்பாலான அகச்சங்கிலிகள், அடிமைச் சங்கிலிகள் ஆரம்பத்தில் ஆனந்தமாகத்தான் இருக்கும். ஆனால், அமைதியையும், உள மகிழ்வையும் தராது. ஆளுமைப் பண்புகள் ஒருமித்து வளராது. மாறிவரும் இக்கால கட்டங்களில், நவீன அறிவியல் முன்னேற்றங்களில், பலவிதமான அடிமைச் சுகங்களில் கட்டப்பட்டு இருக்கிறோம். இதுதான் சுதந்திரம் என்று அறியாமல், அக விடுதலையற்ற வாழ்வில் ஆனந்தம் காண்கிறோம். பணம், பதவி, பட்டம், ஆடம்பரம், வீண்பொழுதுபோக்கு, தொலைக்காட்சித் தொடர், தகவல், தீய எண்ணங்கள், தவறான பழக்கங்கள், எதிர்மறை எண்ணங்கள், ஊடகங்கள்... இன்னும் பல. இவை எல்லாவற்றிற்கும் அடிமைப்பட்டு அந்தச் சுகத்தை அனுபவித்துக்கொண்டு உண்மை விடுதலையின் பொருளை மறந்து, மறுத்து வாழ்ந்துகொண்டிருக்கும்.
நாம் அவற்றை உடைத்தெறிந்து இயல்பான, எதார்த்தமான வாழ்க்கை வாழ்வோம். தனித்தன்மையைத் தொடர்வோம்.