புன்னகை தரிப்போம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 07.05.2024

புன்னகை தரிப்போம்

உம்மென்று இருத்தலில் இருந்து கொஞ்சம் விலகலைக் கடைபிடிக்க பழகுவோம்

மலர்ந்த முகமே வாழ்வின் இன்பமென பத்திரிக்கைகளில் பிரதானப் படுத்தி இருப்பினும் புழுக்கப்புழுதியை முகந்தனில் அப்பிக் கிடக்கிறோம்

முத்துப்பல் தெரியச் சிரித்து விழிக்கடையில் ஆனந்தநீர் காண்பதில் அப்படியென்ன தடை

அழுது பிறத்தல் இயல்பெனினும் அழுதே கிடத்தல் பழுது தானே

பிறருக்காக எவ்வளவு தான் நம் வாழ்வினைச் செதுக்கிச் சிதைப்பது

இணைந்தே கிடக்குற உதடுகளைப் பிரிப்பதொன்றும் பாவமில்லை
துயரகல குறுநகை புரிவதிலென்ன குறை?

கூட்டமாய் குழுவிலிணைந்து கொத்தாய் சிரிக்கவுமா பயிற்சி எடுப்பீர்?
ஓடிவரும் மழலைக் கரும்பின் குறும்புகளில் நகையணியலாமே?

கௌரவச் சிரிப்புகளை கழட்டி வைத்திட்டு மாற்றார் உள்ளங்கவர முறுவல் பழகுங்கள்

ஏதுமற்றவர்களை ஏந்தி 
வலியகற்றி வாழ்வளித்து இதயம் மலர சிரித்திடுங்கள்

மாற்றான் வலியினில் இதழ்கள் சுருக்கி இதயம் விரிய நேயச்சிரிப்பினைப் பொழிந்திடுங்கள்

மறந்தும் சிரிக்காதிருப்பின்
இனி மருந்துக்கேனும் சிரியுங்கள்
மனபாரம் மண்டும் துயரம் யாவினையும் அதனால் குறையுங்கள்

அழுகையும் கவலையும் ஒட்டிக்கிடந்தால் குட்டிச்சிரிப்பும் எட்டிப்போய்விடும்

குறைவாழ்பிறவியில் புன்னகை பரப்பி புத்துணர்வு கொள்வோம்
கொடுந்துயர் யாவையும் இதழ் மருந்தினில் கொல்வோம்

விலங்குகளே சிரிப்பதில்லை
மன விலங்குகள் உடைத்து புன்னகை தரிப்போம்
இனியும் உம்மென இருக்கும் மனநிலை எரிப்போம்
 

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி