யார் மனிதன் ...? | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.04.2024

மனிதராகப் பிறந்தவர் எல்லாம் மனிதராக வாழ்வதில்லை 
இயற்கையோடு இணைந்திருப்பவர் எல்லாம் 
அதனோடு ஒன்றி உவகை கொள்வதில்லை.

போதி மரத்தின் கீழ் இருப்பவர் எல்லாம் புத்தரும் இல்லை 
தத்துவம் பேசுபவர் எல்லாம் ஞானியும் இல்லை.

யாரொருவர் தன்னை உணர்ந்து 
தன் சுயத்தை உணர்ந்து 
"நானை" உதிர்த்து 
தேகம் விடுத்து
மனம் கடந்து 
உயிரில் ஒன்றி
உணர்வில் திளைத்து 
இறையோடு உறைந்து இருக்கிறார்களோ 
அவரே மனிதர்.

இதனோடு உறைந்து உவகையுடன் எந்நாளும் வாழ்த் தெரிந்தவர்களே மா மனிதர்
தனக்கு உண்டான அனுபவத்தை வார்த்தையால் வகுக்காமல் 
உணர்வாலே உணர வைக்கிறாரோ அவரே மகான்.

உணர வைக்கிறோம் என்ற உணர்வையும் கடந்து நிற்கும் நிலையில் இருப்பவர் ஞானி
உருவம் கடந்து அரூபத்தில் என்றும் நிலை கொண்டிருப்பவர் தெய்வம்.

இதில் நாம் எந்த வகையில் இருக்கிறோம் என்று தன்னைத்தானே அலசுபவர் இறைப் பயணத்தின் வழிகாட்டி.

தன்னிடம் இருக்கும் தெய்வீக சக்தியை மனிதன் உணராமல் வாழ்வதில் அர்த்தமில்லை
தன்னிடம் இருக்கும் தெய்வீகத்தை வியாபாரம் செய்வது ஞாயமும் இல்லை 
உள்ளதை உணர்வதற்கு விளம்பர ஊடகங்கள் தேவை இல்லை.

தன்னில் நிலைகொண்டால் தானாய் நடக்கும் தன்மாற்றம் 
உணர்ந்து தெளிவோம் 
உன்னத வாழ்க்கை வாழ்வோம்.

உள்ளிருப்பின் உவகையில்!

இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் நம்பிக்கையும் அமைதியும் நிம்மதியும் கிடைக்க நிறைவாய் அருள் தாரும் எம் உயிர்த்த இயேசுவே.

மரியே வாழ்க
                    

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி