இடுக்கணும் இன்பம் தரும் | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் அனைவருமே நல்ல உடல் நலத்தோடு வாழவே விரும்புகிறோம். உடல் நலமுற்றிருப்பதை நம்மில் யாரும் விரும்புவதில்லை. நமக்கு நோய் ஏற்பட்டுவிட்டால் அதனை ஒருவித தீய அறிகுறியாக, எதிர்மறை விளைவாகப் பார்க்கிறோம். நம்மில் நன்றாக இருப்பவர்கள் கூட நோய் நமக்கு வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் கவலையில் நம்மை நாமே மூழ்கடித்துக் கொள்கிறோம். கவலை என்பதே ஒரு பெரிய நோய் என்பதை நாம் உணர்வதில்லை. அதனை உணராமல் வாழ்வில், விரக்தியின் எல்லைக்கே நாம் சென்றுவிடுகிறோம். அதிலும் குறிப்பாக சில குணப்படுத்தமுடியாத நோய்கள் என்று தெரிந்து விட்டாலோ சிலரிடம் வெறுப்பும், கோபமும் குடிகொண்டிருப்பதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். இதற்கு மாறாக நோய் சிலரிடத்தில் சீரிய மாற்றங்களுக்குக் காரணமாயிருந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நமக்கு வரும் நோய்கள் மற்றும் தோல்விகளை நாம் எப்படிப் பார்க்கிறோமோ அதைப் போலவே அது நம்மிடம் ஏற்படுத்தும் மாற்றங்களும் இருக்கும்.
மில்டன் தனது அழியாத காவியத்தை கண்கள் இரண்டையும் இழந்து அடுத்தவரின் துணையோடுதான் எழுதினார். நமக்கு ஏற்படும் நோயை தண்டனையாக எடுத்துக்கொண்டால் அதுவே நமக்குக் மிகப்பெரிய தண்டனையாக மாறிவிடும். தனக்கு ஏற்பட்டிருக்கின்ற நோயை குணப்படுத்த முடியாது என்று தெரியவந்த சில மாதங்களில் இறந்தவர்கள் எத்தனையோ பேரை நாம் அறிந்திருக்கிறோம். அதே சமயத்தில் நம்மில் பலர் நோயின் தாக்குதலுக்கு உள்ளான போதும் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப சிகிச்சை எடுத்தபிறகு பல ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல உடல் நலத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறோம். எனவே எல்லா சூழ்நிலையிலும் நாம் நல்லதையே பார்க்கப் பழகுவோம். நோயை நாம் சரியாகப் புரிந்து கொண்டால் அது நம்மிடமிருக்கும் தெய்வீக ஆற்றல்களை ஒருங்கிணைத்து நம்மை பலப்படுத்தும்.
இசுலாமிய ஞானியான ரஃபியா என்ற பெண்மணி முதுமையடைந்து கடும் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்தார். சோகமுடன் பலர் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆறுதல் கூற விரும்பிய ஒருவர் அம்மா தாங்கள் படும் துன்பம் இறைவன் கொடுத்தது. எப்படியாவது பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார். மற்றொருவர் இது இறைவன் கொடுத்த தண்டனை அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். கண் விழித்த அந்த அம்மையார். அன்பானவர்களே! கடவுளின் திருமுகத்தைக் காண அவர் அழைக்கும் அழைப்பாக நான் இதனை ஏன் நினைக்கக்கூடாது என்று புன்னகையுடன் கூறினார். நல்ல மனிதர்களிடத்தில் நோய் தெய்வீகமாக மாற்றம் பெறுகிறது. நாமும் நமக்கு வரும் நோயை தண்டனையாக பார்க்காது நாம் மனம் மாறுவதற்கான வாய்ப்பாக எடுத்துக் கொள்வோம். நாம் விரும்புகின்ற நலமான வாழ்க்கையை வாழ்வோம். அதுவே நமது வாழ்வை வளப்படுத்தும் நல்மருந்தாக மாறும்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
