தொடுவானத்தை தொட்டுவிட… | அருட்சகோதரி பிரைடா SSAM |Veritas Tamil

தொடுவானத்தை தொட்டுவிட…
நேற்றைய நிகழ்வுகள் முற்று புள்ளியாக மாறி
நம்மை முடக்கிவிடக்கூடாது.
மாறாக தொடர் புள்ளியாக இருந்து
தொடுவானத்தை தொட்டுவிட
தோள்கொடுக்க வேண்டும்.
அப்பா, அம்மா, தங்கை, தம்பி, மற்றும் நான். இது என் அன்பான குடும்பம். ஆழமான உறவுபிணைப்பு. எங்கும் கிடைக்கப்பெறாத பாசத்தின் பரிணாமங்கள் நிறைந்து மகிழ்வோடு வாழ்ந்தோம். என் அப்பாவிற்கு எங்கள் மீது அலாதி அன்பு. அம்மாவே எங்களை பார்த்து பொறாமைபடும் அளவிற்கு அப்பா எங்கள் மீது மிகவும் அன்பாக இருந்தார். நாட்கள் நகர்ந்தது, திடிறென்று என் தந்தையின் நடவடிக்கைகள் என் மனதை மிக ஆழமாக பாதித்தது. குடிபழக்கத்திற்கு அடிமையாகி எங்களுடன் நேரம் செலவிடுவதைக் கூட மறந்து போனார்.
இதுவரையிலும் அம்மாவை தேடாத நாங்கள் முதல் முறையாக அம்மாவை தேட ஆரம்பித்தோம். ஆனாலும் எங்கள் அம்மா எதுவும் தெரியாதது போன்று எங்களிடம் அன்பாய் இருந்தார். என் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு அழுதேன். என் அப்பாவின் திடீர் மாற்றத்திற்கு காரணம் கேட்டேன். அம்மா எதுவும் பேசாமல் என் தலையை மெதுவாக வருடிக்கொண்டே இருந்தார். மறுநாள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றோம். திடீரென என் மாமா பள்ளிக்கு வந்து எங்கள் மூவரையும் அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்த என் மனம் பதைபதைத்தது. மாமாவும் எதுவும் பேசாமல் எங்களை அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்தால் என் அப்பா பிணமாக படுத்திருந்தார்.
அன்றோடு முடிந்தது என் வாழ்வின் கனவுகள், ஆசைகள் எல்லாம். சில மாதங்களுக்குள் எல்லாம் முடிந்துபோனது. வாழ்வே புதிராக மாறியது. நான் வாழ்வது நிலையில்லா உலகு. என் உறவுகள் நிலையற்றவை. நான் இப்போது வாழ்வது மட்டுமே உண்மை மற்றெல்லாம் மாயை என்று புரிய ஆரம்பித்தது. ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் பயனுள்ள மனுசியாய் வாழவேண்டும் என விரும்பினேன்.
என் அம்மாவிடம் சிறுது காலம் எங்காவது சென்று தனியாய் இருக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். முதலில் மறுப்பு தெரிவித்த என் அம்மா, பிறகு அனுமதி அளித்தார். ஓர் முதியோர் இல்லத்தில் விருப்ப பணியாளனாய் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை நான் பார்த்திராத புதிய உலகை நான் அங்கு பார்த்தேன். பலமணி நேரம் அங்குள்ள முதியவர்களோடு நேரத்தை செலவிட்டேன். அவர்களுக்கு உணவு கொடுப்பது. சிறுபிள்ளைகளைப் போல் அடம்பிடிப்பவர்களிடம் சிறு சிறு குறும்புகள் செய்து சிரிக்க வைப்பது என அவர்களோடு ஒன்றாகிப்போனேன். என் அப்பாவின் இறப்புக்கு காரணம் தேடுவதை விடுத்து, பல முதியவர்களுடைய வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்க துவங்கினேன். இன்றும் என் அப்பா இவர்களில் வாழ்கிறார் என்பதை நினைத்து மகிழ்கிறேன்.
நமது வாழ்விலும் பல்வேறு விதமான எதிர்மறை செயல்கள் நடந்துகொண்டு தான் இருக்கும். பல நிகழ்வுகள் புரியா புதிராகவே இருக்கும். வாழ்வையே முடித்துக்கொள்ள கூடிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டோம் என்னும் எண்ணம் தோன்றலாம். அப்படிபட்ட சூழல்களில் நாம் நாமாக இருந்து சிந்திக்க வேண்டும். நமக்கு நடந்த சோகம் மட்டுமே உலகம் என்று நினைக்காமல் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று கண்களை திறந்து பார்க்க வேண்டும். வாழ்வை முடித்து விடுவதை மாற்றி புதிய பாதையைத் தேடி, நமது பிறப்பிற்கு அர்த்தம் கொடுக்க வேண்டும்.
எழுத்து
அருட்சகோதரி பிரைடா SSAM
Daily Program
