80வது ஆண்டு நிறைவையொட்டி அமைதிக்கான புனிதபயணம் | Veritas Tamil

ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு அமைதிக்கான புனிதபயணம்.


ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு அமைதிக்கான யாத்திரையில் அமெரிக்க தேவாலயம்.
ஜப்பானின் அணுகுண்டுத் தாக்குதலின் 80வது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் உள்ள திருஅவை ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு அமைதிக்கான யாத்திரை மேற்கொள்கிறது.


1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாகசாகியிலும் அணுகுண்டுகள் வீசப்பட்டு எண்பது ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிகழ்வுகளின் நினைவாக, அமெரிக்க கத்தோலிக்க திருஅவை ஆகஸ்ட் 4 முதல் 11 வரை இந்த இரண்டு நகரங்களுக்கும் சென்று புனித யாத்திரை நடத்துகிறது. அமெரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுடன் சிகாகோ பேராயர்களான கர்தினால் குபிச்; வாஷிங்டன் டிசி, கர்தினால் மெக்ல்ராய்; சியாட்டில், ஆயர் எட்டியென்; மற்றும் சாண்டா ஃபே, பேராயர் வெஸ்டர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். லத்தீன் அமெரிக்காவிற்கான  தூயதிருஅவையின் ஆணையத்தின் செயலாளர் எமில்ஸ் குடாவும் இந்த யாத்திரையில் பங்கேற்கிறார்.

செபவழிபாடு  நல்லிணக்கத்திற்கான உரையாடல்கள்:
இந்த புனித யாத்திரை நம்பிக்கையின் யூபிலி ஆண்டில் நடைபெறுகிறது. மேலும்  நாம் அனைவரும் ஒன்றாக நடக்கவும், பாதுகாக்க இருக்கவும் வேண்டும் என்னும் மறைந்ந திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதை நினைவுபடுத்துகிறது. பசிபிக் பகுதி முழுவதும் உள்ள இடையீடுகள், பிரிவுகள் மற்றும் அதிகரித்து வரும் அணுஆபத்து மத்தியில், மதங்கள் மற்றும் தலைமுறைகளுக்கிடையில் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில், சமாதானம், ஒற்றுமை மற்றும் அமைதிக்கான நல்லிணக்க  உரையாடல்களை உருவாக்குவதே குறிக்கோளாகும்.


குண்டுவெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட இரண்டு நகரங்களிலும் பல்வேறு நினைவு மற்றும் கல்வி நிகழ்வுகள் நடைபெறும். அணு ஆயுதங்களின் மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை கத்தோலிக்க நெறிமுறைகளில் நிபுணர்கள் எடுத்துரைப்பார்கள். மேலும் தலைமுறைகளுக்கு இடையேயான நீதி மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புதல் குறித்து இளைஞர்கள் விவாதிப்பார்கள். தற்போதைய மத மற்றும் புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு. இரு நாடுகளிலும் அணுசக்தி பிரச்சினைகள் மற்றும் அவற்றின் மரபுகள் குறித்த கத்தோலிக்க திருஅவையின் அணுகுமுறையை விமர்சன ரீதியாகவும் ஒப்பீட்டு ரீதியாகவும் மதிப்பிடுவதற்கான ஒரு வாய்ப்பு இது.

அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்:
இந்த யாத்திரை, அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்கான கூட்டாண்மை (PWNW) மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது ஆகஸ்ட் 2023 இல் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் அணு ஆயுத வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நான்கு மறைமாவட்டங்களின் (சாண்டா ஃபே, சியாட்டில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி) ஆயர்களால் நிறுவப்பட்டது. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், லயோலா பல்கலைக்கழகம் சிகாகோ, மார்க்வெட் பல்கலைக்கழகம், நோட்ரே டேம் பல்கலைக்கழகம், நாகசாகி ஜுன்ஷின் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் டோக்கியோவில் உள்ள சோபியா பல்கலைக்கழகம் போன்ற பங்கேற்கும் கத்தோலிக்க பல்கலைக்கழகங்களால் இது நிதியுதவி செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் நகர அரங்குகள், இயேசுசபை துறவறத்தாரின் நவதுறவு இல்லம், குண்டுவீச்சுக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள், அணுகுண்டுகள் தொடர்பான அருங்காட்சியகங்கள், அமைதி நிகழ்வுகள், அமைதிக்கான நோபல்  பரிசு பெற்றவர்கள்  மற்றும் அணுகுண்டில் இருந்து தப்பியவர்கள், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் ஆகியோரின் செய்திகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, அமைதிக்கான திருப்பலிகள், கல்வி கருத்தரங்குகள், மதங்களுக்கு இடையேயான கொண்டாட்டங்கள், அமைதி யாத்திரைகள் மற்றும் அணுகுண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிக்கும் நினைவு விழாக்கள் ஆகியவை நடைபெறும்.