புது எல்லீஸ் நகர் புனித செபஸ்தியார் ஆலயப் பெருவிழா நெகிழ்ச்சியுடன் நிறைவு!| Veritas Tamil

புது எல்லீஷ் நகர் பங்கில் ஆன்மீகத் தேடலும், சமூக நல்லிணக்கமும் ஒருசேரக் கைகோர்த்த நிகழ்வாக, புனித செபஸ்தியார் ஆலயத்தின் பங்குப் பெருவிழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடந்த ஜனவரி 17, 2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில்  பேராயர் அந்தோனிசாமி மற்றும் அருட்தந்தை   ரபேல், பேராயரின் செயலாளர்
அருட்தந்தை ஜோசின், பங்குத் தந்தை (எலிஸ் நகர்)
அருட்தந்தை கபிரியேல், அருட்தந்தை ராஜன், அருட்தந்தை நிதின் பிரபு, திருத்தொண்டர் அருண் மைக்கேல் ராஜ்,மற்றும் அருட்சகோதரிகள் இணைந்து  பக்திப் பெருக்குடனும், எழுச்சியுடனும் வழிநடத்தினர் .   

விழாவின் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புக் கருப்பொருளை முன்னிறுத்தி வழிபாடுகள் நடத்தப்பட்டன. நற்கருணை பவனி, குழந்தைகள் தினம், இளைஞர் தினம், துறவியர் தினம், தொழிலாளர் தினம், ஒப்புரவு தினம் மற்றும் தம்பதியர் தினம் என வாழ்வின் அனைத்து நிலைகளையும் புனிதப்படுத்தும் விதமாகத் திருப்பலிகள் அமைந்திருந்தன. பத்து நாளிற்கான தலைப்புகள் பத்து

கட்டளைகளில் இருந்து எடுக்கப்பட்டிருந்தன. விழாவின் உச்சகட்டமாக, பேராயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்று இறை ஆசீர் பெற்றனர்.

26.01.26 அன்று சிறுவர்களுக்கு ‘முதல் நற்கருணை’ வழங்கப்பட்டது.ஜனவரி 25 அன்று நடைபெற்ற தேர்பவனி, இப்பங்கு மக்களின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையை உலகிற்குப் பறைசாற்றியது. 

இந்தத் திருவிழாவின் ஆகச்சிறந்த அடையாளமாக விளங்கியது சமய நல்லிணக்கம். புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனியில், அருகாமையில் வசிக்கும் இந்து மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

சாதி, மதம், இனம் கடந்து மக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாடிய இந்த நிகழ்வு, சமூகப் பிரிவினைகளைத் தகர்த்து அன்பால் உறவுகளைக் கட்டி எழுப்ப முடியும் என்பதை மெய்ப்பித்தது.

திருவிழாக்கள் வெறும் கொண்டாட்டமாக மட்டும் முடிந்துவிடக் கூடாது என்பதில் பங்குத் தந்தை உறுதியாக இருந்தார். அதன் ஒரு பகுதியாக, "திருவிழாக் கொண்டாட்டங்கள் ஆன்மீகத்திற்கா? அல்லது ஆடம்பரத்திற்கா?" என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் அனைவரையும் சிந்திக்க வைத்தது. திருவிழாக்களின் அடிப்படை நோக்கம் ஆன்மீகமே என்பதையும், ஆடம்பரங்களுக்கு மத்தியில் அதன் புனிதத்தன்மை சிதைந்து விடக்கூடாது என்பதையும் இக்கருத்தாடல் தெள்ளத்தெளிவாக விளக்கியது.

பங்குத் தந்தை அருள்பணி . ஜோக்கின் அவர்கள்  கூறுகையில்  "மதங்கள் என்பவை மனிதர்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கும் பாதைகளே தவிர, மனிதர்களைப் பிரிக்கும் சுவர்கள் அல்ல என்று கூறினார்.  திருத்தொண்டர் அருண், அருள்சகோதரிகள் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பங்குப் பேரவையினர், நிர்வாகக் குழுவினர் மற்றும் இளைஞர் இயக்கத்தினர் ஒருங்கிணைந்து இந்த விழாவினைச் செவ்வனே வழிநடத்தினர். இறைமக்களின் ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் இந்தப் பத்து நாள் விழாவையும் ஒரு மறக்க முடியாத ஆன்மீக அனுபவமாக மாற்றியது.

 கத்தோலிக்க இளையோர்  இயக்கம் சார்பாக செல்வி. சுஷ்ருதா. ஜெ அவர்கள் கூறுகையில்  "இந்தத் புனித செபஸ்தியாரின் தேர் வெறும் வீதிகளில் ஓடவில்லை; சாதி, மதப் பிரிவினைகளைக் கடந்து மனித இதயங்களுக்குள் பயணிக்கிறது. மதத்தால் மனிதர்களைப் பிளவுபடுத்தத் துடிக்கும் சக்திகளுக்கு மத்தியில், புது எல்லீஸ் நகர் மக்கள் காட்டும் இந்த வேற்றுமையற்ற ஒற்றுமைதான் இந்தியாவின் உண்மையான ஆன்மா என்பதை மெய்ப்பிக்கிறது."

சமூக நல்லிணக்கத்தின் சங்கமம் 
 பங்கு மக்கள் இதைப்பற்றி கூறுகையில் "ஆலயத்தின் மணி ஓசையும், மசூதியின் பாங்கும், தீபாராதனையின் ஒளியும் ஒன்றிணையும் இந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; இது மனிதம் தழைக்கும் பூமி. அரசியல் சத்தங்களை விட, இங்கு நிலவும் மதநல்லிணக்க நிசப்தமே வலிமையானது; ஏனெனில் இது அன்பால் கட்டப்பட்டது."

இறுதியாக, கொடியிறக்கத்துடன் விழா நிறைவுற்றது. விழா முடிந்த பின்னரும், அந்தப் பகுதிகளில் வீசிய மதநல்லிணக்கக் காற்று, மக்கள் மனதில் ஒற்றுமை எனும் விதையை ஆழமாக விதைத்துச் சென்றுள்ளது.