திருத்தந்தையை வரவேற்ற ஸ்பெயின் ஆயர் பேரவை! | Veritas Tamil
ஸ்பெயின் நாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு, ஸ்பெயின் நாட்டு ஆயர் பேரவை (CEE) சார்பில் மாட்ரிட் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் ஜூன் 08, திங்களன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாட்ரிட்டில் நடைபெற்ற ஸ்பெயின் நாட்டு ஆயர்களுடனான சிறப்புச் சந்திப்பில், ஆயர் பேரவையின் தலைவரான பேரருள்திரு லூயிஸ் ஜாவியர் அர்குயெல்லோ கார்சியா திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
அவர் தனது வரவேற்பு உரையில், "திருத்தந்தையே, நாங்கள் எங்களது பொது அவைக் கூட்டங்களை நடத்தும் இதே புனித இடத்தில் உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். பேதுருவின் வாரிசான உங்களது வருகை, நாங்கள் அனைவரும் திருத்தூதர்களின் வழியில் இணைந்து செயல்படுகிறோம் என்ற விழிப்புணர்வை எங்களில் புதுப்பித்துள்ளது. திருத்தந்தையோடு கொண்டுள்ள விசுவாச உறவு எங்களது திருத்தூது ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது" என்று குறிப்பிட்டார்.
மேலும், 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்பெயின் ஆயர் பேரவை, தனது 60-வது ஆண்டு நிறைவை இந்த 2026-ஆம் ஆண்டில் கொண்டாடுவதைச் சுட்டிக்காட்டிய பேரருள்திரு லூயிஸ் ஜாவியர், இக்கொண்டாட்டத்தின் உச்சகட்ட நிகழ்வாக திருத்தந்தையின் இந்த வருகை அமைந்துள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார். தற்போது ஸ்பெயினில் 69 மறைமாவட்டங்கள் உள்ளதாகவும், அவற்றில் 15 பேராயர்கள், 49 மறைமாவட்ட ஆயர்கள், 11 உதவி ஆயர்கள் மற்றும் 48 ஓய்வுபெற்ற ஆயர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் விவரித்தார்.
கடந்த 60 ஆண்டுகளில் ஸ்பெயின் சமூகம் எதிர்கொண்ட அதிவேக கலாச்சார மாற்றங்கள் மற்றும் மதச்சார்பின்மை சவால்கள் குறித்துப் பேசிய பேரவைத் தலைவர், உலகளாவிய ஆயர்கள் மாமன்றத்தின் (Synod on Synodality) வழிகாட்டுதலின்படி, ஸ்பெயின் திருஅவை 2026-2030-ஆம் ஆண்டிற்கான தனது புதிய மேய்ப்புப்பணி நெறிமுறைகளைத் தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.
"புறப்பட்டுப் போங்கள்!" (லூக்கா 10:3) என்ற விவிலியப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல் திட்டம், தற்போது ஸ்பெயினுக்கு வருகை தந்துள்ள திருத்தந்தை வழங்கவிருக்கும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் ஏற்றுக்கொண்டு, இன்னும் முழுமைபெறத் தயாராகக் காத்திருக்கிறது என்று அவர் கூறினார்.
இறுதியாக, திருத்தந்தையின் போதனைகள் ஸ்பெயின் நாட்டு நம்பிக்கையாளர்களின் பார்வையை இயேசு கிறிஸ்துவை நோக்கி உயர்த்த உதவும் என்று குறிப்பிட்ட பேரவைத் தலைவர், "தந்தையாம் இறைவனின் அளவற்ற இரக்கத்தின் சாட்சிகளாகவும், நற்செய்திப் பணியாளர்களாகவும் எங்களை புதுப்பிக்க உங்களது வார்த்தைகள் வழிவகுக்கும்" என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.