இது ஒரு தொடக்கமே... | அருட்பணி. வி.ம.ஜோ. அடைக்கல ராஜ், | Veritas Tamil

இது ஒரு தொடக்கமே...
சாந்தோம் கலைத்தொடர்பு நிலைய பொன்விழா ஆண்டு தொடக்க விழா
ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஆண்டவரின் உருமாற்ற பெருவிழா அன்று தமிழக ஆயர் பேரவையின் சமூக ஊடகப் பணிக்குழுவாகிய சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்திற்கு அகவை 50 ஆரம்பம் என்பது தமிழக கத்தோலிக்க திருஅவை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று தமிழக கத்தோலிக்க 13 மறைமாவட்ட ஆயர்கள் தலைமையில் அருட்தந்தை விக்டர் சுந்தர்ராஜ் அவர்களை முதல் இயக்குனராகக் கொண்டு ஊடகங்கள் வாயிலாக இறையன்பின் செய்தியை முழக்கமிட்டு அறிவிக்க சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் தொடங்கப்பட்டது.
அதன் 50வது பொன்விழா ஆண்டு தொடக்க விழாவானது நடப்பு ஆண்டு 2025 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் நாள் பணிக்குழுவின் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் தலைமையில் மேனாள் தலைவர் மேதகு ஆயர் சிங்கராயன் அவர்களின் இறைச்செய்தியுடன் கூடிய ஆசியுடன், மேனாள் இயக்குநர்கள் அருட்தந்தை விக்டர் சுந்தர்ராஜ், அருட்தந்தை கிருபாகரன், அருட்தந்தை ஜோ லூர்துசாமி, அருட்தந்தை பெனடிக்ட் ஆகியோர் முன்னிலையில், முன்பு பணிபுரிந்த உதவி இயக்குநர் அருட்தந்தையர், அருட்சகோதரிகள், பணியாளர்கள் மற்றும் நாடகக்கலைஞர்கள் அனைவரின் பங்கேற்பில் வெகு சிறப்பாக மகிழ்வுடன் கொண்டாடப்பட்டது.
பொன்விழா ஆண்டின் தொடக்க நாளில் பலரின் இனிமையான அனுபவங்கள் அனைவரின் இதயங்களையும் கனமாக்கி கண்களில் கண்ணீரை கசிய வைத்தது என்றால் அது மிகையாகாது.
அதன் முத்தாய்ப்பாக மேனாள் இயக்குர் அருட்தந்தையர் நால்வரும் தங்களது தொடக்கக்கால அனுபவங்களை, சவால்களை, போராட்டங்களை, தியாகங்களை தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து பகிர்ந்தளித்தது இதயங்களை உருகிட வைத்தது.
மதிய உணவிற்கு பின் 1980, 1990 மற்றும் 2000வது ஆண்டுகளில் பணியாற்றிய அருட்சகோதரிகள், ஆண்-பெண் பணியாளர்கள் தங்களின் ஊடகபணிவாழ்விற்கு வித்திட்டதே நம் சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள். இப்பணியில் தங்களை செதுக்கிய அருட்தந்தையர்களை மீண்டும் சந்தித்தது கடவுளின் வரம் எனவும், சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம், இயேசு தாபோர் மலையில் உருமாறியதை போன்று மாற்றுறு பெற்றிருப்பதை நினைத்தும் பெருமிதம் கொண்டனர்.
மேலும் திருமதி அமலி, திரு கிளிட்டஸ் மற்றும் சிலர்தாங்கள் தமிழ் மொழியில் புலமைப் பெற்றதும், கணினி தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தும் திறனில் முதன்மைப் பெற்றதும் நமது சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் கற்றுத்தந்த பாடமே என்றுரைத்தது தற்கால பணியாளர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது.
சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் நமது தமிழக கத்தோலிக்க திருஅவையின் வரலாறாகவும், நற்செய்தி விழுமியங்களை வளர்த்தெடுத்த ஒர் அடையாளமாகவும், பலருடைய வாழ்க்கைக்கு கிடைத்த ஓர் அங்கிகாரமாகவும், பலரின் அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்கு தொடக்கப்புள்ளியாகவும், இன்றும் தொடர்கின்ற ஒரு பயணமாகும். சாந்தோம் கலைத்தொடர்பு நிலையமானது பாடல், நடனம் நாடகம் என கலைமொழியில் தனது நற்செய்தி பயணத்தைத் தொடங்கி, ஆசிய வேரித்தாஸ் வானொலி, வத்திக்கான் வானொலி வாயிலாக கிறிஸ்தவ மதிப்பீட்டு குறும்நாடகங்கள் வழங்குதல், கிறிஸ்தவ பாடல்கள் அடங்கிய ஒலிநாடா, குறுந்தகடுகள் தயாரித்தல், அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி வாயிலாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்புதல், விவிலிய மற்றும் திருஅவை மதிப்பீடுகளின் அடிப்படையில் குறும்படங்கள் தயாரித்தல் என சிறப்பான பணிகளை முன்னெடுத்தது.
90வது ஆண்டுகளில் நமக்கென ஒரு தொலைக்காட்சி, கத்தோலிக்கருக்கான தொலைக்காட்சி என பரிந்துரைகளும் நமது மேனாள் இயக்குனர்களால் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதற்கான காலம் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் புனித லூர்தன்னை விழாவன்று நமக்கென ஒரு தொலைக்காட்சி; கத்தோலிக்கருக்கென ஒரு தொலைக்காட்சியாக மேனாள் தலைவர் ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் அவர்களின் ஆசீருடன் இயக்குநர் அருட்தந்தை டேவிட் ஆரோக்கியம் அவர்களின் தலைமையில் 18 மறைமாவட்ட கலைத்தொடர்பக இயக்குநர் அருட்தந்தையர்கள் ஒருங்கிணைப்பில் நமது மாதா தொலைக்காட்சி உதயமானது. சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தின் கனவு குழந்தை நமது மாதா தொலைக்காட்சி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சாந்தோம் கலைத்தொடர்பு நிலையமானது சாந்தோம் அகாடமி எனும் ஊடகப் பயிற்சியகத்தையும், சாந்தோம் ஸ்டூடியோஸ் எனும் உயர்தர ஒலிப்பதிவு மற்றும் ஒலிக்கலவைத் தளத்தையும், SYNC எனும் இளைய தலைமுறையினருக்கான கருத்தியல் உருவாக்கப் பயிற்சித் தளத்தையும் ஏற்படுத்தி இருப்பது காலத்தின் ஓட்டத்திற்கேற்றாற்போல் நற்செய்திப் பயணத்தை புதுமையாக அணுகும் முறைக்குச் சான்றாகும். New Wave எனும் சமூக ஊடகத்தளமானது SYNC அமைப்பிற்காக அன்றைய நாளில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த புதிய முயற்சி நிலையத்தின் கடமையுணர்வுக்கு கால வரையறை இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
தற்பொழுது நமது சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் தனது பொன்விழா ஆண்டு பயணத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால் ஆற்ற வேண்டிய பணி நிறைய உள்ளது. ஆகவே இதற்கு கடவுளின் பராமரிப்பும் இறைமக்களின் தாங்கும் தாராள உள்ளமும் தேவையாக உள்ளது. சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம் பறைசாற்றும் நற்செய்தி பணியில் நாமும் நம்மை இணைத்துக்கொள்வோம். ஊடக வழியில் இறையாட்சியைக் கட்டியெழுப்புவோம்.
எழுத்து
அருட்பணி. வி.மரிய ஜோசப் அடைக்கல ராஜ்.
Daily Program
