பெற்றோர் கொடுக்க மறந்தவை... | Judit Lucas | VeritasTamil
பம்பரமாய் உழன்றுகொண்டிருக்கும் இந்த காலசூழலில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு கொடுக்காத ஒன்று, செவிகொடுத்தல். என் பிள்ளைக்கு அது பிடிக்கும், இது என் குழந்தைக்கு மிகவும் பிடித்தது என்று தாங்களே முடிவெடுத்து, அந்த குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது, அதற்கு என்ன தேவை என்பதற்கு செவிகொடுக்க மறந்துவிடுகிறார்கள்.
தேர்வு நேரத்தில் தன்னை விட்டுவிட்டு வீட்டிலுள்ளவர்கள் சினிமாவிற்கு சென்றார்கள் என்பதற்காக ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நிமிடம் நின்று அந்த பெண்ணிற்கு அந்த வீட்டார் செவிகொடுத்திருந்தால் அந்த உயிர் அன்று பிரிந்திருக்காது.
சிறுவயதில் தங்களுக்கு பிடித்த பள்ளியில் குழந்தைகளை சேர்த்துவிட்டு படிக்க வைப்பதாலோ என்னவோ, அது வளர்ந்த பின்பு தங்கள் குழந்தையின் வாழ்வில் தாங்கள் எடுக்கும் முடிவும் சரியாக தான் இருக்கும் என்ற பிம்பம் உருவாகிவிடுகிறது. ஒருவேளை பெற்றோர்கள் அந்த பெண்ணிற்கோ ஆணிற்கோ செவிகொடுத்திருந்தால் பல திருமணங்கள் நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
விஞ்ஞானம் வேகமாய் வளர்ந்து வருகிறது என்பதை கவனிக்க தெரிந்த நமக்கு அதனோடு சேர்ந்து நமது குழந்தைகளும் அவர்களின் திறன்களும், உணர்வுகளும் வளர்கிறது என்பதை கவனிக்க மறந்துவிடுகிறோம்.
சரி, எனது குழந்தையும் எனக்கு செவிகொடுக்கவில்லை. அது மட்டும் சரியா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நீங்கள் உங்கள் குழந்தைக்கு செவிகொடுத்தால் நிச்சயம் அவர்களும் உங்களுக்கு செவி கொடுப்பார்கள் (Listen to be listened).
நான்தான் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுக்கின்றேனே, என் பேச்சை கேட்பதில் அவர்களுக்கு என்ன குறை என்று கேள்வி எழுப்பலாம்; அவர்கள் வாழ்வதற்கு தான் நீங்கள் உதவி செய்வீர்களே தவிர உங்களுடைய வாழ்வை அவர்கள் வாழ்வதற்காக அல்ல என்னும் உண்மை நிலையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பொருட்களின் நிறைவில் வீடு நிறையலாம் ஆனால் மனம் எப்போதும் ஏதோ ஒன்றுக்கு ஏங்கிக் கொண்டே தான் இருக்கும். அவர்களுடைய ஆழ்மனம் எதை தேக்கி வைத்துக் கொண்டிருக்கின்றன, அவர்களுடைய நினைவுகள் எதனால் காயப்பட்டு உள்ளன, அவர்களுடைய எண்ணங்கள் எங்கே சுணங்கி கொண்டிருக்கின்றன என்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகையால் அவர்களுடைய உடல் மொழியும், வார்த்தை பலன்பின்மையும் வெளிக்கொணரும் தருணங்களை அறிந்து கொள்ள நமக்கு பொறுமை தேவை. அப்போதுதான் அவர்களுடைய ஓசைகளற்ற வார்த்தைகளுக்கு செவி கொடுக்க முடியும். அவ்வகையான சாந்தமான நிலையில் குழந்தைகளுக்கான நற்படிப்பினைகளை சூழலுக்கு ஏற்றார் போல் விதைக்க சாத்தியக்கூறு அதிகமாக உண்டு. அவர்களுடைய மௌனமும் ஒரு வகையான பதில் தான்; அது எந்த வகையை சார்ந்தது என கற்றுக் கொள்வதும் ஒரு வகையான அறமே.
- Judit Lucas