போர் வேண்டாமே ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 09.05.2025

போரும் அமைதியும்
குளிர்மை அரங்கில்
வாசனையூட்டி கமகமக்க.
கதகதப்பான
உயர் ரக
உடையணிந்து அரசிருக்கையில்
ஒய்யாரமாய்
அமர்ந்துகொண்டு
ஆணையிட.
ஆயுத வியாபாரிகளின்
கடைவாய்க்
கோரைப்பல்லில் வழிகிறது
சுவைத்த ரத்தத்தின்
மீள் ரத்தம்.
சிதிலமடைந்த
இடிபாடுகளுக்குள்
சிக்கிச் சிதைந்து
உடல் இழந்து
உறுப்பிழந்து
உயிரையும் சேர்த்திழந்து
இளஞ்சூட்டு இரத்தமும்
அபயக் கதறல்களுமாய்.
இந்தியக் குண்டென்ன
பாகிஸ்தான் குண்டென்ன
இஸ்ரேலியக் குண்டென்ன
அமெரிக்கக் குண்டென்ன.
குண்டுகளுக்குத் தெரியாது ஒருபோதும்
எளிய குடிகளின்
வலிகளும் வேதனைகளும்.
நிச்சயம்
ஓர் நாள்
இயல்பு மீளும்.
அன்றைய நாளில்
அதே
குளிர்மை அரங்கில்
வாசனையூட்டி
கமகமக்க.
கதகதப்பான
உயர் ரக
உடையணிந்து அரசிருக்கையில்
ஒய்யாரமாய்
அமர்ந்துகொண்டு
போர் நிறுத்த ஒப்பத்தில்
கைச்சாத்திட்டுக்
கை குலுக்க.
ஒருநாளும்
மீளாது
எளிய குடிகள்
இழந்த உறுப்புகளும்
சிந்திய ரத்தமும்
பறி கொடுத்த உறவுகளும்.
--- சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி
Daily Program
