சகோதர அன்பே நமது அடையாளம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil
![](/sites/default/files/styles/max_width_770px/public/2025-02/untitled-1_4.jpg?itok=reAH0ww4)
பொதுக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி
எபிரேயர் 13: 1-8
மாற்கு 6: 14-29
சகோதர அன்பே நமது அடையாளம்!
முதல் வாசகம்.
ஒருவருக்கு கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால், பயப்படுவதற்கு இவ்வுலகில் ஒன்றுமில்லை அல்லது யாரும் இல்லை. எபிரேயருக்கு எழுதிய கடிதத்திலிருந்து இன்றைய பகுதி, இறைமக்கள் செயல்களில் உண்மையுள்ளவர்களாக (நம்பிக்கையுடன்) இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஆண்டவராகிய இயேசு அவர்களுடன் இருப்பதால், துன்புறுத்தலின் போது கூட அவர்கள் பயப்பட வேண்டியதில்லை என்பதை ஆசிரியர் தனது வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்.
இத்திருமுகத்தின் ஆசிரியர் மீண்டும் நல்லதொரு செயத்தியைப் பகிர்கிறார். ஆண்டவராகிய இயேசு கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் மற்றும் அதற்குச் சாட்சியமளிக்கும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிறார். தொடக்கத்தில் ‘சகோதர அன்பில் நிலைத்திருங்கள். அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள்’ என்கிறார். இங்கே சகோதர அன்பை வலியுறுத்துகிறார்.
சகோதர அன்பே கிறிஸ்தவர்களின் அடிப்படை அடையாளமாக இருக்க வேண்டும். நோயுற்றவர்களைச் சந்திப்பது, தாழ்த்தப்பட்டவர்களைக் கவனிப்பது, திருமண குடும்ப உறவுகளுக்கு உண்மையாக இருப்பது, பேராசை கொள்ளாமல் இருப்பது, மேலும், தன்னிடம் உள்ள செல்வத்தைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருப்பது போன்றவற்றால் ஒருவரின் சகோதர அன்பு வெளிப்படுகிறது என்கிறார்.
இறைமக்கள் துன்புறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், முதல் கிறிஸ்தவர்களைப் போலவே, ஆண்டவராகிய இயேசு மற்றும் கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு உண்மையுள்ளவராக இருப்பர், ஏனென்றால் இயேசு "நேற்று, இன்று மற்றும் என்றென்றும் ஒரே மாதிரியாக இருக்கிறார், அவர் என்றும் மாறாதவர்” என்று அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானைப் பற்றிய இறப்பு செய்தி விவரிக்கப்ட்டுள்ளது. ஏரோது இயேசுவின் போதனை, பணி மற்றும் குணப்படுத்துதல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். இயேசு யார் என்று ஏரோது வெவ்வேறு நபர்களிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இயேசு எலியா என்றும் மற்றொரு இறைவாக்கினர் என்றும் சிலர் தெரிவிக்கிறார்கள் . திருமுழுக்கு யோவானுக்கும் இயேசுவுக்கும் உள்ள தொடர்பை ஏரோது அறிந்து, இயேசு உயிர்த்தெழுந்த திருமுழுக்கு யோவானா இருக்கலாம் என்று எண்ணுகிறார்.
இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்
ஏரோதியா - இவர் பிலிப்பின் மனைவி. ஏரோதிடம் இருந்த பதவிமற்றும் செல்வத்தின் காரணமாக இவள் ஏரோதுவுடன் கூடி வாழ்ந்தாள்
யோவானோ ஓர் இறைவாக்கினராக, ஏரோதின் செயல் கடவுளின் கட்டளைகளுக்கு எதிரானது என, ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி ஏரோதைக் கண்டிக்கிறார். தொடக்கத்தில் ஏரோது குற்றத்தை நினைத்து கலங்கினான். ஆனால், எரோதியா யோவான் மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள். இதனிமித்தம் அவள் ஒர் தந்திர வலை விரித்தாள். ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள்.
அத்தருணத்தில், ஏரோது சலோமியிடம் ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்று ஆணையிட்டுக்கூறவே, அவள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற யோவானின் தலையைக் கேட்டுப் பெற்றாள். இவ்வாறுயோவான் கொல்லப்பட்டார்.
சிந்தனைக்கு.
இன்றைய நம்செய்தியில் நான்கு முக்கியக் கதாப்பாத்திரங்களைக் காண்கிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குறிக்கோள் இருந்தது.
1. திருமுழுக்கு யோவான்: ஓர் இறைவாக்கினராக கடவுள் இட்ட பணியை நிறைவேற்றுவது.
2. ஏரோது: தன்னைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது.
3. ஏரோதியாள்: தான் மகிழ்ச்சியுற எதையும் செய்யத் துணியும் சந்தர்ப்பவாதி.
4. சலோமி: தாய் சொல் தட்டாதவள்
இந்த நால்வரில், கெட்டவர்களாக ஏரோது, ஏரோதின் முறைகேடான மனைவி ஏரோதியாள் மற்றும் ஏரோதியாளின் மகள் இருக்கிறார்கள்.
ஏரோது, தன் தீய செயல் குறித்து கலங்கினான். திருமுழுக்கு யோவானின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்டான். ஆனால், காமுகனுக்குக் கண் இல்லை என்பதுபோல் அவனில் மனமாற்றம் ஏற்றபடவில்லை. ஏரோதியாள் தன்நிலை நிலைக்க குற்றத்திற்குமேல் குற்றம் செய்கிறாள். மகள் உண்மையறியாது தீவினைக்குத் துணை போகிறாள்.
நாமும் ஏரோது மற்றும் ஏரோதியாள் செய்ததைப் போன்ற எதிர்விளைவுகளுடன் போராடுகிறோம். சந்தர்ப்பச் சூழலுக்கு ஏற்ப நமது மனப்பான்மையை மாற்றிக்கொள்கிறோம். ஏரோதியாளைப் போல் சூழ்ச்சி செய்து பிறரை பலிவாங்குவதில் வல்லவர்களாகவும் இருக்கிறோம். மகள் சலோமியைப்போல் நல்லது கெட்டது பற்றி சிந்திக்காமல் செயல்படுகிறோம்.
திருமுழுக்கு யோவான் ஏரோது அரசன் என்று அறிந்தும் உண்மையை எடுத்துரைத்தார். உண்மைக்காக தன் உயிரையும் பலியாக்கினார்.
“என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது (மத் 18:6) என்றார் இயேசு.
ஆகையால், பிறரை பாவத்தில் விழச் செய்வோருக்கு பெருந்தண்டனை காத்திருக்கிறது என்பதை உணரந்து வாழ்வோம். சூதும் வாதும் வேதனை செய்யும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய அன்பு இயேசுவே, நீர் உமது தூய ஆவியாரால் என்னை நிரப்பி, எப்போதும் ஆழமான எதிர்நோக்குடனும் நம்பிக்கையுடனும் உம்மில் பற்றுறுதி கொண்டு வாழ அருள்புரிவீராக ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
![Livesteam thumbnail](/sites/default/files/inline-images/live-stream-thumb.jpg)